புத்தக வெளியீட்டுவிழா அழைப்பிதழ் – சம்பவம் (4)
கே.எஸ்.சுதாகர்
“முதலாவது அழைப்பிதழை யாருக்குக் குடுக்கலாம்?” மனைவியிடம் ஆலோசனை கேட்டான் அகமுகிலன்.
“உங்களுக்குப் பிடிச்ச பேராசிரியர் சிவராசாவுக்குக் குடுங்கோவன்.”
அதுவே சரியெனப்பட்டது அகமுகிலனுக்கு. மாலை நான்கு மணியளவில் சிவராசாவைச் சந்திப்பதற்காக நகரத்துக்கு பஸ் ஏறினான் அகமுகிலன். நகரத்தில் பல்கலைக்கழகத்திற்கு அண்மையாக சிவராசா இருக்கின்றார். அவரது வீடு நோக்கிப் போய்க் கொண்டிருக்கும்போது, எதிர்ப்புறமாக சிவராசாவும் மனைவியும் வந்து கொண்டிருந்தார்கள். வேட்டி நாஷனலுடன் பேராசிரியர் ஜோராக இருந்தார். மனைவி காஞ்சிபுரப்பட்டு, தலை நிறையப் பூக்களுடன் சரக்குச் சரக்கென்று பாதங்களைத் தூக்கிப் பக்குவமாக நிலம் நோகாமல் அடியெடுத்து வந்து கொண்டிருந்தார்.
“சேர்… உங்களைத் தேடித்தான் வந்துகொண்டிருக்கிறன்.”
“நாங்கள் ஒருக்கால் கோவிலுக்குப் போவம் எண்டு வெளிக்கிட்டனாங்கள். ஏன் என்ன விஷேசம்?”
“புத்தக வெளியீட்டுவிழா ஒண்டு வருகுது. தங்களுக்கு முதலாவது அழைப்பிதழைத் தருவோமெண்டு வந்தனான்.”
பேராசிரியரின் மனைவி பதறியடித்துக் கொண்டு அப்படியே நின்றார்.
அழைப்பிதழ் ஒன்றினைப் பவ்வியமாக எடுத்து சிவராசாவிடம் நீட்டினான் அகமுகிலன்.
“நல்லது. நல்லது. எத்தினையாம் திகதி மட்டிலை?” அழைப்பிதழை விரித்துப் படிக்கத் தொடங்கினார் சிவராசா. அழைப்பிதழைப் படித்தால் அவருக்குப் ஹபிரம்மஹத்தி தோஷம்’ பீடித்துவிடும் என்பதுமாப் போல், அவரிடமிருந்து அதைப் பறித்தெடுத்தார் மனைவி. அழைப்பிதழைப் பார்த்த மாத்திரத்தில் அவரின் ஹபிளட் பிறசர்’ எகிறிப் பாய்ந்தது. செவ்விதழ் அஸ்ட திக்குகளிலும் சுருங்கிப் போயின. தன் மூக்குக்கண்ணாடியை கையினால் மிதத்தி அகமுகிலனைப் பார்த்தார்.
செவ்வக வடிவில் இருந்த புத்தக வெளியீட்டுவிழா அழைப்பிதழ், அவர் உள்ளங்கைக்குள் அறுகோண வடிவமாகி சுருங்கத் தொடங்கியது.
“நீரும் வாருமன் கோவில் மட்டும் போட்டு வருவம்.”
“கோவில் சன்நிதியிலை அழைப்பிதழ்களை வைச்சு எடுத்தால் நல்லது எண்டு, வரேக்கை போட்டு வாறன்.”
பேராசிரியரின் மனைவியார் அழைப்பிதழை ஆராதிக்கின்றாரா எனக் கடைக்கண்ணால் இடைக்கிடை நோட்டமிட்டான் அகமுகிலன். அவர் கையில் அழைப்பிதழைக் காணவில்லை. திடுக்கிட்டுப் போனான் அகமுகிலன். அது பூகோளமாகச் சுருண்டு உள்ளங்கைக்குள் அடங்கி இருப்பது போலத் தென்பட்டது.
பலதும் பத்துமென இருவரும் கதைத்துக் கொண்டு கோவில் நோக்கிச் செல்கின்றார்கள். இருபுறமும் கிழுவை வேலிகள் வரிசை கட்டி வெய்யிலுக்கு இதமாக இருந்தன. ஒரு வளைவில், திடீரென பேராசிரியரின் மனைவியின் செருப்படி ஓசை வித்தியாசமாகக் கேட்க திரும்பிப் பார்த்தான் அகமுகிலன். உள்ளங்கையில் சுருங்கிக் கிடந்த அழைப்பிதழைத் தூக்கிப் போட்டு, காலின் மேற்புறத்தால் ஒரு ஹகிக்’. அது கிழுவை வேலிக்குள் போய்ச் சொருகிக் கொண்டது. ஒன்றுமே நடவாதது போல சரக் சரக் என்று தொடர்ந்து வந்து கொண்டிருந்தார் அவர்.
கோவில் வந்துவிட்டது.
“இஞ்சாருங்கோ… உங்களுக்கு கால்ப்பந்தாட்டப் போட்டிக்கு நடுவராகக் கூப்பிட்டது எண்டு சொன்னனியளல்லோ! அது எப்ப?”
“சேர்… மறந்திடாமல் வந்திடுங்கோ” பேராசிரியரின் மனைவி சொன்னதையும் பொருட்படுத்தாமக் அகமுகிலனின் குரல் ஓங்கி ஒலித்தது.
அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான் அகமுகிலன்.
அகமுகிலன் போய்விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டபின்,
“நீங்கள் பேராசிரியர் தானே! புத்தகத்தை வெளியிட்டு தலைமையுரை செய்யச் சொல்லிக் கேட்டிருக்கலாம் தானே? அல்லாட்டி… புத்தகத்தைப் பற்றியாவது பேசச் சொல்லிக் கேட்டிருக்கலாம் அல்லவா? சும்மா பார்வையாளரகாப் போகப் போறியளோ? இல்லைத் தெரியாமல் தான் கேட்கிறன் அவ்வளவுக்குத் தாழ்ந்து போய் விட்டியளோ நீங்கள்?” கர்ச்சித்தார் பேராசிரியரின் மனைவி.
“எங்கேயுமப்மா… அந்த அழைப்பிதழை ஒருக்கால் தாரும் பாப்பம்” என்றார் பேராசிரியர்.
“இருந்தால் தானே தாறதுக்கு?” என்றார் மனைவி.
1,323 total views, 3 views today