இப்படியாகப்பட்டவள் நான்.
பெரும் ஆசைகள் கொண்டவள் நான். பேராசைக்காரியென்ற ஒரு சொல்லில் என்னை அடக்கிவிடமுடியாது. எனது கனவுகளுக்கும் கூட இரவுகளின் நீளம் போதுவதில்லை. தினமும் பாருங்கள், கனவுகள் எதுவும் முழுமைபெறாமலேயே விடிந்துவிடுகிறது. உணவோ, பொருளோ, பொன்னோ, மண்ணோ எதுவும் என்னை திருப்தி கொள்ளவிடுவதில்லை. இளவரசியைப்போலவும், சாண்டில்யன்கதையில் வரும் வெண்குதிரை நாயகர்களின் நாயகியாகவும் நான் கண்டகனவுகள் எல்லாம் சிறுபிராயத்துக் கனவுகள்தான். எனது கனவுகள் அடங்காத குணமுடையவையாகப் பெருகி நிற்கின்றன. கண்ணகியாகவும், மணிமேகலையைத் தந்த மாதவியாகவும், நானே மணிமேகலையாகவும் இருந்திருக்கிறேன். பதின்மவயதிலேயே அதுவும் போதாது என்று ஆயனரின் சிவகாமி, பொன்னியின் செல்வன் கதைப் பூங்குழலி, நந்தினி, இப்சனின் நூரா, எல்லீடா மற்றும் சோபியாவின் உலகத்தில் சோபியா என நான் கூடுபாயாத கதாபாத்திரங்களே கிடையாது. மிகமுக்கியமாக நான் எப்போதும் ஒரு எதிர்மறையான பாத்திரங்களிலேதான் பிடிப்புடையவள். அனைத்துப்பிறவியும் எனதே. இந்தப்பிறப்பிலேயே இத்தனை பாத்திரங்களுள் கூடுபாய்ந்தும் அடங்காத ஆசை கொண்டவள் நான்.
உடலுக்குச் சூரியக்கதிர் வாங்கவெனத் தேசம் கடந்து கடற்கரைக்குப் போகின்ற பெரும்பான்மையினரோடு நான் என்ன செய்வேன் சொல்லுங்கள். ஐயோ… உச்சபட்சமாய் நாலு சுவர்களுக்கு ஆசைப்படுகிறார்கள். நானோ அந்தக்கடலுக்கும் வானுக்கும் சொந்தக்காரி. கற்சுவர்களைப் பெரிதாய் ஆக்குவதில் ஜென்மத்தின் பயனை அடைந்துகொண்டிருக்கும் இவர்கள் கொஞ்சம் உலோகங்களைச் சேர்த்தும் பாதுகாத்தும் வரும் ஒருவித வகை உயிரினத்தைச் சேர்ந்தவர்கள். கொஞ்சம் புல்லும் நாலு சில்லும் இவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது. எனக்கு இவையெல்லாம் போதுமா என்ன? இந்த உலகை எப்படி என் உள்ளங்கையுள் வைத்திருப்பது என்ற யோசனையில் இருப்பவளின் ஆசைகளுக்கான தீனி இல்லை இவைகள்? இந்த உலக உருண்டையே காலின்கீழ் எனது கட்டைப்பெருவிரலின் நுனியில் சுழன்று கொண்டிருக்கையில் இவர்களின் ஆசைகளெல்லாம் சின்னத்தனமான ஆசைகளல்லவா?
தற்காலத்தில் ஒருவித முத்திரையைச் சுமந்துவரும் பொருட்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கும் மனிதர்களைக் காண்பது எனக்குச் சிரிப்பு மூட்டுகிறது. ஒரு குதிரைப்படத்தையோ, ஒரு வியாபாரக் கலைஞனின் முத்திரையையோ, பெயரையோ தமது பொருட்களில் சுமப்பதில் ஆலாதி ஆர்வம் இவர்களுக்கு. இப்பிரபஞ்சத்தையே எனக்காக விட்டுத்தந்துவிட்டு வெறும் நுகர்வோர்மயமாதலின் அட்டைப்பெட்டிக்குள் தாமே சென்று சந்தோசமாய் படுத்துக்கொள்கிறார்கள். இந்தச் சின்னத்தனமான ஆசைகள் எல்லாம் என்னிடம் இல்லை. நான் பேராசைபிடித்தவள். சூரியனின் கதிர்கள் எப்படி இந்த உலகத்தின் மீதுள்ள எல்லாவற்றின் மீதும் படுகிறதோ அப்படி இருக்கிறதென் ஆசைகளும். ஒற்றைப் பூவிலிருந்து அலைகடல், மலைத்தொடர், வானம், நிலவு என ஒரு பறவை தொட்டுவருகிறது. அதைவிட மேலானதொரு ஜென்மம் வேண்டிநிற்பவள் நான். என்னிடம் இந்த முத்திரை பொதிந்த பொருட்கள் ஏன் இல்லை என்றால் நான் என்ன சொல்வது சொல்லுங்கள்?
ம்.. இந்த உலகம் ஒரு உருண்டையாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? நானே ஒரு உலகம். எனது வாழ்வில் மாபெரும் காதல் கொண்டிருக்கும் ஒரு சுயபிரியை நான். எனது கதையையே இன்னும் மிகவும் இரசித்துக்கொண்டிருக்கிறேன். அதுவே இன்னமும் முடிவுக்கு வரவில்லை. புனிதப்போர்வைக்குள் நாம் குப்புறக் கிடத்தியிருக்கும் காதலையும், மணவாழ்வையும் கூட உலுப்பி எழுப்பி எனது உலகின் அருகில் வைத்திருக்கிறேன். காதலர்களும் பலபல உண்டெனக்கு. எல்லாரும் போல முதற்காதல் உண்டு என்றாலும் அது முடிந்த பின்னே நான் எந்தவித நடிப்புக்கும் என்னை ஒப்புக்கொடுக்காததால் கௌதமனும், திரிபுரனும், பாரதியும், பித்தனும், இரவிவர்மனும் என்னைக் காதலிக்கத்தொடங்கினர். இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். போதாதென்று எனக்கு ஒரு பெண் மேலும் பொல்லாத காதலுண்டு. கோதையென்ற அழகான பெயர் அவளுக்கு. இதை நீங்கள் கேவலாமாகவும் தவறென்றும் சொல்வீர்கள். எனக்குத் தெரியும். மனிதக்காதல் எல்லாம் வரவர மண்ணாங்கட்டியாகத்தான் எனக்கும் தெரிகிறது.
ஒரு நாட்டை என்னிடம் கையளித்தாலும் திருப்தி கண்டுவிடும் மனநிலையில் நான் இல்லை இப்போது. இத்தனை காதலர்கள் இருந்துமே என்னதான் நடந்துவிட்டது? மனம் திருப்தி கொள்ளவில்லை இன்னும். எனது ஆசைகளின் எல்லை எங்கென்று எனக்கே தெரியவில்லை. அதுதான் சொல்லியிருக்கிறேனே எல்லைக்கோடுகள் எல்லாம் இப்போது எனது குதிக்கால் வெடிப்புகள் ஆகிவிட்டன என்று. அதனால்த்தான் சொல்கிறேன். தற்போது நீங்கள் கேவலமாக யோசிப்பதையெல்லாம் மற்ற எண்ணங்களோடு சேர்த்து இதையும் கொஞ்ச நேரம் நிறுத்தி வையுங்கள். நீங்கள் என்னதான் எண்ணிக்கொண்டிருந்தாலும் அந்த எண்ணம் என்னையோ எனது ஆசைகளையோ எதுவும் செய்துவிடப்போவதில்லை. நீங்கள் சிறகுகளைப் புடுங்கிவிடும் போதெல்லாம் ஒரு விளக்குமாற்றுக் கட்டையின் மீதேறிக்கூட பறக்கத் தயாராகி விடுகிறேன். பேராசைக்காரி ஒரு சூனியகாரியைப் போன்றவள். இதைச்சொல்வதில் கூட எந்தத் தயக்கமும் எனக்கிருப்பதில்லை. சூனியக்காரியாக இருப்பது எத்தனை அழகு தெரியுமா
மிதமிஞ்சி ஒரு சூனியக்காரியை உங்கள் விமர்சனங்களால், அபிப்பிராயங்களால் அல்லது அதிகபட்சமாக உங்கள் தூசணங்களால் நாலுதடவை சொல்வதில் கொஞ்சம் பெருமையாக உணருவீர்கள். பிறகு? அதை நின்று கேட்கும் ஜடங்களுக்கு என்னதான் செய்வீர்கள்?
உடலை வைத்துச் சிந்திப்பவர்கள். உடலால் சிந்திப்பவர்கள். இவர்களெல்லாம் இந்தச் ஆறடி உடலைவிட்டு வெளிவரவே மாட்டார்கள். இருக்கட்டும். எனது இயல்பே என்னால் உடல்களை மட்டும் கிட்டப்பார்வையில் வைத்துப் பார்த்துக்கொண்டிருக்க முடியாமல் இருப்பதுதான். மேலே அமர்ந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான் அல்லவா பாரதி? நானோ அவனையும் சேர்ந்துக் கண்காணித்துக் கொண்டிருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதைச்சொல்வதில்கூட அத்தனை தற்பெருமை எனக்குண்டு. ஆஸ்தீகம் நாஸ்தீகம் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதில்லை நான் என்றாலும், இந்த சுயநல மனதுள் சலனம் இருக்கிறது பாருங்கள். அப்பப்பா! பொல்லாததது.
இந்த ஆறறிவு ஜீவன்கள் ஏன் எப்போதும் ஒரு வீட்டையோ நாட்டையோ கேட்கிறார்கள். இப்படிக் கொஞ்சமாய்க் கேட்காமல் பெரிய ஆசைகளை இவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டாமா? என்னைப் போல முழு உலக உருண்டையை விளையாடக் கேட்கலாம், சூரியகுடும்பத்துக் கோள்களை கேட்கலாம். அந்தக் கடைசி நட்சத்திரங்களுக்குப்பின் என்னதான் இருக்கிறது என்றறிய ஒரு சிந்தனைச் சிறகுவேண்டிப் புறப்படலாம். அதைவிட்டுவிட்டு ஒவ்வொரு பண்டிகைக் காலங்களுக்கும் கலர்கலராய் ஜன்னல் சீலைகளை மாற்றுவதில் ஆர்வமாய் இருக்கிறார்கள். மனித உயிரினங்களின் அதிகபட்ச வேண்டுதல் என்னவென்றால் தம் குட்டிகள் எல்லாம் தம்மைவிடப் பெரிய சுவர்கள் எழுப்ப வேண்டும் என்பதும், இன்னும் கூடுதல் வர்ணங்களில் ஜன்னல் சீலைகளை வாங்கிச் சேர்க்கவேண்டும் என்பதும்தான். நான் எழுதும்விதம் ஒரு மாதிரியாக இருப்பதாக உணர்கிறீர்களா? எந்தச் சந்தேகமும் வேண்டாம் உண்மையிலேயே இப்படியாகப்பட்டவள்தான் நான்.
எந்த மாற்றமில்லாமல் ஆனால் இன்னும் அதிகமாகத் திமிர், கர்வம், பேராசை, அலட்சியம் கொஞ்சம் பைத்தியக்கரத்தனம் என என் அடுத்த ஆண்டும் இப்படியாகவே மலரவிருக்கிறது. என்னை எனக்காகவே ஏற்றுகொண்டவர்க்கும், ஏற்றுக்கொள்ள மனமற்று என்ன செய்வதென்று தெரியாது இருப்போர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நல்லதும் கெட்டதும் யார் தீர்மானிப்பது சொல்லுங்கள். அது எங்கும் உண்டு. எதை நாடுகிறோம் என்பதே முக்கியம். பேசாமல் இந்த ஆண்டில் என்னோடு சேர்ந்து நீங்களும் பேராசைக்காரராகிவிடுங்கள். ஆசைதீரச் சிறகணிந்து வெளிநுகரப் புறப்படலாம். சேர்ந்தே பாதங்களின் கீழ் கிடக்கும் உருண்டையை சிறு பந்தினைப்போல உருட்டிஉருட்டி விளையாடலாம். புத்தாண்டு மலரட்டும்!
— கவிதா லக்ஷிமி – நோர்வே
1,389 total views, 3 views today