தற்கொலை – தடுப்பதற்கான முயற்சி
தப்பித்தலுடன் தொடர்பான ஒரு செயற்பாடே தற்கொலை எனலாம்.
தற்கொலை என்பது அந்த நேரத்திலான ஒரு முடிவாக இருப்பது மிகவும் அரிதாகும். பத்துப் பேரில் எட்டு பேர் தற்கொலை செய்துகொள்வதற்கான எண்ணம் இருக்கிறது என்பதைக் காட்டும் அறிகுறிகளைச் சிலருக்கோ அல்லது பலருக்கோ காட்டியிருப்பார்கள் என்கிறது ஆய்வு. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், தற்கொலை என்பது மனக்கிளர்ச்சியிலான ஒரு செயலாகத் தோன்றலாம், ஆனால் அது எழுந்தமானமானதொரு நிகழ்வல்ல, அது ஒரு செயல்முறை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தற்கொலையைப் பற்றிப் பேசுவதற்குப் பொதுவில் நாங்கள் எவருமே விரும்புவதில்லை. அத்துடன், எங்களுக்குத் தெரிந்தவர்கள் ஒருவரும் அந்த முடிவுக்கு ஒருபோதும் வரமாட்டார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம். ஆனால், எங்களுக்குத் தெரிந்தவர்களும் தற்கொலையைத் தெரிவு செய்துகொண்டுதான் இருக்கின்றனர். இருப்பினும், தற்கொலை ஒரு களங்கம் என்ற உணர்வு அல்லது அது அவமானம் தரும் ஒரு செயல் என்ற கருத்துப்பாடு எங்களைச் சங்கடப்படுத்துவதால் அதைப் பற்றி நாங்கள் அதிகம் கலந்துரையாடுவதில்லை. அதனால், ஒருவர் உணரும் வலி பற்றியோ அல்லது அவருக்குத் தேவையான உதவி பற்றியோ வெளிப்படையாகப் பேசுவதற்கான சந்தர்ப்பங்களை நாங்கள் இழந்துவிடுகின்றோம்.
தனது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமென ஒருவர் முடிவெடுப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். உண்மையில், அந்தக் காரணங்கள் பற்றிய ஒருவரின் உணர்வுகள்தான், அந்தக் காரணங்களைவிட மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன. குறித்த வலியைத் தொடர்ந்து தாங்கமுடியாது அல்லது நிச்சயமற்ற வாழ்வைத் தொடரமுடியாது என்பதின் அடிப்படையில் எழும் நம்பிக்கையின்மை, கையலாகதன்மை மற்றும் விரக்தி போன்ற தீவிரமான உணர்வுகளால் தற்கொலைதான் தீர்வென முடிவெடுப்பவர்கள் ஆட்கொள்ளப்படுகிறார்கள். வேறு சிலருக்கு சில வகையான மனநோய்களின் தாக்கம் தற்கொலை செய்வதற்கான தூண்டல்களைக் கொடுக்கக்கூடும். அப்படியான தூண்டல்களை குரல்களாக அவர்கள் கேட்கக்கூடும், அல்லது விம்பங்களாகப் பார்க்கக்கூடும்.
மோட்டார் வாகன விபத்துக்களுக்கு அடுத்ததாகப் பதின்மவயதினர் இடையேயான மரணத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது தற்கொலை என்பதைப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. வளர்ந்தோர் என்ற நிலையை இளையோர் அடைவதற்கான வாழ்க்கைப் பயணம் இன்றைய காலகட்டத்தில் சிக்கல்கள் நிறைந்ததாகவும், சவால்கள் மிகுந்ததாகவும் இருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். வீட்டிலும், பாடசாலையிலும், சமூகக் குழுக்களிலும் வெற்றிபெறுவதற்கு அவர்கள் எடுக்கும் முயற்சி அவர்களுக்கு அதிக மன அழுத்தத்தை கொடுப்பது வாஸ்தவம்தான்.
காரணம் எதுவாக இருந்தாலும், தற்கொலையை முடிவாகக் கருதுபவர்கள் பொதுவாகத் தாங்கள் இறப்பதை விரும்புவதில்லை. வாழ்க்கையில் அவர்களுக்குத் தேவையாகவிருக்கும் மாற்றத்தை அவர்கள் செய்வதற்கு எங்களால் உதவமுடிந்தால் அது அவர்களின் வாழ்வில் ஒரு திருப்புமுனை ஆகலாம்.
“இனியும் என்னாலை இதுகளைத் தாங்கேலாது,” “எதுவும் எனக்கு இனி முக்கியமில்லை”, “செத்துப்போனால் நல்லது, நான் செத்தாலும் ஒருத்தரும் கவலைப்படப்போறதில்லை”, போன்ற வலுவான வாய்மொழிகள் பெரும்பாலும் தற்கொலைகளுக்கான அறிகுறிகளாகக் காணப்படுகின்றன. இத்தகைய கருத்துக்களை நாங்கள் எப்போதும் சீரியசாக எடுத்துக் கொள்ளவேண்டும். நோய், மனச்சோர்வு, தோல்வி, நிராகரிப்பு, அடாவடித்தனம் போன்ற வலி அல்லது துன்பத்திலிருந்து விடுபடுவதற்காக ஒரு வழியைக் கண்டுபிடிப்பதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்பதை நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். சில வேளைகளில் பழிவாங்குவதற்காகவும் தற்கொலையைச் சிலர் தெரிந்தெடுக்கிறார்கள்.
அத்துடன், சூழவிருப்பவர்களில் அவர்களுக்கு நம்பிக்கையற்றுப் போய்விடுவதால், தாங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் உணர்வதால், குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து அவர்கள் விலகியிருக்க விரும்புவார்கள், பொதுவில் அனைத்து விடயங்களிலும் கவனமாக இருக்கும் ஒருவரிடம் பொறுப்பற்ற தன்மை போன்ற இயல்புக்கு மாறான ஒரு நடத்தை காணப்படலாம். வழக்கமான செயல்பாடுகளில் அவர்களின் ஆர்வம் குறைந்திருக்கலாம். நித்திரை குறைவடைதல், பசி குறைதல் போன்ற பிரச்சினைகள் அல்லது மதுபானம் மற்றும் போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரிக்கலாம். அவர்கள் அதிகளவில் எரிச்சல் அடையலாம். மேலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மதிப்புமிக்க உடைமைகளை அவர்கள் வழங்கக்கூடும்.
தற்கொலை ஒன்றை எச்சரிக்கும் இப்படியான அறிகுறிகளில் கவனம் செலுத்துவதன் மூலமும், அது பற்றிக் குறித்த நபருடன் வெளிப்படையாக நாங்கள் பேசுவதன் மூலமும் குறித்த மரணத்தை எங்களால் தடுக்கக்கூடியதாக இருக்கலாம். இவை மட்டும்தான், எச்சரிக்கை அறிகுறிகள் என்று சொல்லமுடியாது. வழமைக்கு விரோதமான செயற்பாடு எதுவாக இருந்தாலும் அது பற்றிய கவனிப்புத் தேவை.
தற்கொலை என்ற சொல் தற்கொலை செய்யும் உணர்வை ஒருவருக்குக் கொடுக்க மாட்டாது என்பதைவிட, ஏற்கனவே அப்படியான எண்ணம் உள்ளவருடன் அப்படிப் பேசுவது அதன் மூலமான இழப்பைத் தவிர்ப்பதற்கு உதவலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
தற்கொலை பற்றிய எங்களின் பயத்தை வெளிப்படுத்தாமல், அது பற்றிய எங்களின் தீர்ப்புகளை வழங்காமல், அது பற்றி அமைதியாகப் பேசுவது, தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக உணரும் ஒருவருக்குச் சற்று நிம்மதியைக் கொடுக்கலாம். உண்மையான அக்கறையையும் பேசுவதற்கான விருப்பையும் காட்டுவதன் ஊடாகத் தற்கொலை உணர்வுகளைப் பற்றி ஒருவரைப் பேசவைப்பது தற்கொலைக்கான அபாயத்தைக் குறைக்கும்.
தற்கொலை தொடர்பான எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் காண்பது என்பது ஒன்று, பின் அது தொடர்பாகச் செயற்படுவது என்பது இன்னொன்று என்பதால், தற்கொலை பற்றிக் கற்றுக்கொள்வது தற்கொலையைத் தடுப்பதற்கான முயற்சியின் முதல் படியாகும்.
தற்கொலைதான் தீர்வெனக் கருதுவதை மறுபரிசீலனை செய்து பிற தீர்வுகளை அவர்கள் தேடுவதற்கு நாங்கள் உதவலாம். குறித்த நபருடன் நேரடியாகப் பேசுவது சிறப்பானது. முன்அனுமானங்கள் எதுவும் இல்லாமல் அவரின் கரிசனைகளைக் காதுகொடுத்துக் கவனமாகக் கேட்பதுதான் அவருக்கு நாங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான உதவியாக இருக்கும்.
குறித்த நபருடன் பேசுவதற்குப் பாதுகாப்பான ஒரு இடத்தைக் கண்டறிவதுடன், பேசுவதற்கு அவருக்குத் தேவைப்படும் நேரத்தை வழங்குதல் மிகவும் அவசியமாகும். மேலும் அவர் பற்றிய எங்களின் அக்கறை மற்றும் அவரது அந்தரங்கம் தொடர்பாக எங்களின் மரியாதை குறித்து அவருக்கு உறுதியளித்த பின்னர், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றி அந்த நபரிடம் கேட்கலாம். “நான் உன்னில் கரிசனை கொண்டுள்ளேன். சமீபத்தில் நான் உன்னிடம் சில வேறுபாடுகளைக் கவனித்திருக்கின்றேன்,” எனக் கூறல் குறித்த நபர் தனது உணர்வுகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு ஊக்குவிக்கும். அத்துடன் தற்கொலை செய்வதைக் கருதுகிறாரா என்று அவரை நேரடியாகவே கேட்கலாம். அப்படியான எண்ணம் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டால், “எப்படி எங்கே அவர் வாழ்க்கையை முடிக்க விரும்புகிறார், அதற்கான திட்டம் வைத்திருக்கிறாரா?” எனக் கேட்கலாம்.
ஒருபோதும், அவரது நிலைமை விளங்குகிறது என்றோ அல்லது இப்படியான பிரச்சினையை இன்னொருவர் எப்படிக் கடந்திருக்கிறார் என்றோ கூறக்கூடாது. அதேபோல, “என்ன கதை கதைக்கிறாய், அது ஒரு முட்டாள்தனம், நல்லதை நினை, தன்னலமாக இருக்காதே, அப்படிச் செய்தால் குடும்பத்துக்கு வெட்கக்கேடு!” என்றெல்லாம் அறிவுரை வழங்குவதற்கு நாங்கள் முயற்சித்தால் அல்லது அவரின் உணர்வை மட்டம் தட்டினால் அந்த நபர் எதனையும் எங்களுக்குச் சொல்ல விரும்பமாட்டார். குறித்த நபரின் உணர்வுகளை நாங்கள் அங்கீகரிப்பது முக்கியமானது.
நாங்கள் செய்யக்கூடிய உதவி ஏதாவது இருக்கிறதா என்று அவரைக் கேட்கவேண்டும். உளவள ஆதரவு, நடைமுறை உதவி, ஆலோசனை அல்லது சிகிச்சையைப் (குடும்பம், நண்பர்கள், சமூக முகவர் நிலையங்கள், நெருக்கீட்டு மையங்கள், கவுன்சிலர்கள்) பெறக்கூடிய ஆதாரவளங்களைப் பற்றிப் பேசவேண்டும். எங்களை நம்புவதற்கும், தொடர்ந்து வாழ்வதற்காகப் போராடுவதற்குமாக அந்த நபரைப் புகழ்ந்து பேசுதலும் முக்கியமானது. இன்னொருவரின் பிரச்சினைகளை எவராலுமே தீர்க்கமுடியாது என்பதை நாங்கள் நினைவில் கொள்ளும் அதேவேளையில் எங்களின் புரிதலும் ஆதரவும் அவர்களுக்கு உதவக்கூடும் என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
முடிவில் அந்த நபருடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த ஒப்பந்தம் தற்கொலைக்கான தூண்டிகளை இனம்கண்டதும், அவற்றைக் கையாளும் உத்திகளை முயற்சிப்பதையும், அவர் நம்பக்கூடியவர்களை அல்லது ஆதாரவளங்களை அவர் அணுக வேண்டுமென்பதையும் வலியுறுத்துவதாக இருத்தல் வேண்டும். இவ்வகையில் பொறுப்புக் கூறல் என்ற எண்ணக்கரு ஒன்றை அவருக்குள் விதைத்துவிடல் ஒப்பந்தத்தைப் பேணவேண்டும் என்ற உணர்வை அவருக்குள் உருவாக்கலாம்.
அவர் தனியாக இல்லை. அவருக்காக நாங்கள் இருக்கிறோம். தற்கொலை செய்யவேண்டும் போல உணரும் தருணங்களில் அவர் எங்களுடன் பேசலாம் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் அவர் எப்படியிருக்கிறார் என்பதை அறிவதற்கு நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கவேண்டும்.
உளவளத்துணை என்பது ஒருவருக்கு அவரை பற்றிய தெளிவை ஏற்படுத்தி அதற்கமைய அவர் எதிர் நோக்கும் பிரச்சினையை அவரே தீர்த்து கொள்வதற்கு வழங்கப்படும் உதவியாகும். அதனை எங்களால் முடிந்தவரை செய்வதற்கு முயற்சிப்போம்.
— ஸ்ரீரஞ்சனி –கனடா
1,698 total views, 3 views today