பூனைக்கு மணிகட்டுவது யார்?
பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற சொற்பதத்தை பரவலாக பலர் கேட்டிருக்கலாம்.ஊரிலிருந்து வந்து 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இச் சொற்பதத்தை அறிந்தவர்களாகவும், அதன் உட்பொருளை அறிந்தவர்களாகவும் இருப்பார்கள்.புலம்பெயர் நாடுகளில் தமிழ்ச் சமூக மட்டத்தில் இச்சொல் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுத்தான் வருகின்றது.
இச்சொற்பதம் நேரடி எடுகோளாக பூனையையும் எலிகளையும் சார்ந்து நிற்கின்றது. நான் படிக்கிற காலத்தில் எனது பாடப்புத்தகத்தில் படிக்கும் கதையாகவே இது இருந்தது.
கதையின் சுருக்கம் இதுதான்“ஒரு ஊரில் ஒரு குடியானவன் இருந்தான்.அவன்; வைத்திருந்த நெல் மூட்டைகள் உட்பட உணவுப் பொருட்களை, அவன் வீட்டிலிருந்து எலிகள் சாப்பிட்டும், சேதப்படுத்தியும் வந்தன.இதனால் கவலையடைந்த குடியானவன் எலிகளை கொன்றொழிக்க பூனையொன்றை வாங்கி வளர்த்தான்.பூனையும் எலிகளைப் பிடித்து உண்ணத் தொடங்கியது.தமது உறவினர்கள் பூனையால் கொன்றொழிப்பதைக் கண்ட எலிகள் ஒன்றுகூடி தம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படியென ஆலோசிக்கையில்,சில எலிகள் பூனை எம்மை நோக்கி வருவதைக் கண்டறிய பூனைக்கு மணியைக் கட்டினால், பூனை வரும் போது அதன் கழுத்திலிருக்கும் மணி ஆடிச் சத்தம் வர அதைக் கேட்டு நாம் ஓடியொழியலாம் என முன்மொழிந்து ஆலோசனை வழங்க,மற்றைய எலிகளும் நல்ல ஆலோசனை என வழி மொழிந்தன.உடனேயே அப்படியானால் பூனைக்கு மணி கட்டுவது எந்த எலி என்ற கேள்வியை மாறி மாறி எலிகள் ஒருவரையொருவர் திருதிரு முளித்துக் கேட்டுக் கொண்டதுடன் „நீ“ என்று ஒன்றையொன்று மாறிச் சொல்லியனவே தவிர „நான் மணி கட்டுகிறேன்“ என்று எந்த எலியும் துணிந்து முன்வரவில்லை.அப்பொழுது பூனையின் மியாவ் மியாவ் சத்தம் கேட்க எல்லா எலிகளும் ஓடி மறைந்துவிடுகிறன.
இப்பொழுது புலம்பெயர் தேசத்தில் மனிதர்களுக்கு யார் மணிகட்டுவது என்பதில் ஒருவரையொருவர் நீ செய்யன் நீ செய்யன் எனச் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
புலம்பெயர் தேசங்களில் தமிழர்களால் நடத்தப்படும் கலை, இலக்கிய,சமூக அமைப்புக்கள் பற்றி ஒருவரை ஒருவர் புறணி பேசியும் குற்றம் சாட்டி வருவதையும் காணக்கூடியதாகவிருக்கின்றது.இவைகளில் அதிகமானவை எவர் பொதுநிலையிலிருந்து வழுவி தவறு செய்கிறார் என்றோ, எது பொதுநிலைளயிலிருந்து வழுவி தவறு செய்யப்படுகிறது என்பதையோ ஒருவர் மாறி ஒருவர் கதைத்துக் கொள்வதும்,தொலைபேசி வாயிலாக அதை கதைத்துக் கொள்கிறார்களே தவிர பெரும்பாலும் தவறுகள் எங்கு ஏற்பட்டதோ அந்த இடத்தையோ அந்த நபரையோ நாடி தமது எண்ணங்களை அபிப்பராயங்களை நேரடியாக வெளியிடுவதில்லை.காரணம் தாம் எல்லாருக்கம் நல்லபிள்ளைனயாக இருந்து கொண்டு மற்றவர்களைத் தூண்டிவிடுவதேயாகும்.அதே வேளை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களும் தம்மிடம் தவறு இருந்தும், அதை ஒப்புக் கொள்வதும், தவறுக்காக மனம் வருந்துவதையும் மன்னிப்புக் கேட்பதையும் கௌரவக் குறைச்சல் எனக் கருதி தாம் நியாயவாதிகள் போன்று தமது தவறுகளை மூடிமறைத்து தம்மிடம் எந்தத் தவறுமே இல்லையென்பது போல வாதிடுவதும்,குற்றச்சாட்டுகளை கொண்டு வந்தவரைப் பற்றி பலரோடு கதைத்து அவரை ஒதுக்கி வைக்க முனைவதும், ஒதுக்கி வைத்தலும் நடைபெறுகின்றது.
எனக்கு இதில் நிறைய அனுபவமுண்டு.என்னிடம் பலர் தொலைபேசி வாயிலாகவும் நேரிடையாகவும்“ அண்ணை அங்கை பிழை நடக்குது இங்கை பிழை நடக்குது, நீங்கள் எழுத்தாளர்தானே அதைக் கேட்க மாட்டியளா“ எனக் கேட்பார்கள்.அதற்கு நான் „ நான் ஏன் கேட்க வேணும் பாதிக்கப்பட்டவர் எவரோ, அவர்தான் பாதிப்புண்டாக்கியவரிடம் கேட்க வேண்டும் என்று சொல்லி விடுவேன்.அவர்கள் பூனைக்கு மணியை நான் கட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.அதே அவர்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை நேரிடையாகச் சந்திக்கும் போது „ நீங்கள் எங்கள் சமூகத்திற்காக எவ்வளவு உழைக்கிறீர்கள் „ எனப் புகழாரம் சூட்டி நடிப்பார்கள்.
.ஒரு நாள் எனக்கு அறிமுகமான ஒருவர், புலம்பெயர் தேசத்தில்; ஒரு திருமண வரண் தேடும் விளம்பரத்தில் சாதி விபரம் கேட்டு எழுதியதைச் சுட்டிக்காட்டி மிகக் கோபமாக அதை ஒருக்கா நீங்கள்தான் கேட்க வேண்டுமென்று என்னிடம் கேட்டார்.
நான் அவரிடம் சிரிப்புடன் கேட்டேன்,“நீங்கள்தான் குற்றச்சாட்டை முன் வைக்கிறீர்கள் நீங்கள் அதைக் கேட்பதில் என்ன தயக்கம்“ என்றவுடன், இ….ல்….லை என்று அவர் இழுக்க, அந்த ஊடகத்தில் தொலைபேசி இலக்கம் இருக்கிறது, மின்னஞ்சல் முகவரி இருக்கின்றது, தபால் முகவரியும் இருக்கிறது ஏதாவது ஒன்றுடன் தொடர்பு கொண்டு உங்கள் கருத்தை முன் வைக்கலாந்தானே என்று சொல்லிய நான் „உங்களுக்கு தலையிடி என்றால் நீங்கள்தான் மருந்து குடிக்க வேண்டும் என்றேன்.சிலர் எல்லாருக்கும் நல்ல பிள்ளையாக மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் விலாங்கு மீன் போலவும்,கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாகவும் நழுவித் தப்பித்து மற்றவர்களை மணிகட்டச் சொல்லும் துணிவற்றவர்களாக இருக்கிறார்கள்.
பிள்ளைகளோடு சம்பந்தப்பட்ட கலை,கல்வி நிறுவனங்கள் விடும் தவறுகளை பெற்றேராக அவர்களுக்கு சுட்டிக்காட்டத் தவறி தயங்கி, அடுத்தவர்களிடம் தமக்கேற்பட்ட பாதிப்பைச் சொல்லி மணிகட்டச் சொல்கிறார்கள்.நீங்கள் கேட்கலாந்தானே என்று கேட்டால், கேட்கலாம் – கேட்டால் பிள்ளைகளை பழிவாங்கிவிடுவார்கள்.இந்தப் பழிவாங்கலும் நேரிடையாக பழிவாங்கல் என்று தெரியாதவாறு அதில் ஒன்றை நியாயப்படுத்தி தம்மை அதிலிருந்து பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்கின்றனர்.அவர்கள் சொல்வதில் உண்மையில்லாமலும் இல்லை.தமது பிழையை உணர்ந்து ஒத்துக் கொள்ளாது, பெற்றோரிடம் தமக்கிருக்கும் அதிருப்தியை பிள்ளைகளிடத்தில் ஏதோ ஒரு வழியில் காட்டுவதும் இடம்பெறாமலில்லை.
எனவே பாதிக்கப்ட்டவர்கள் துணிவுடன் தாமே மணிகட்ட முன் வரவேண்டுமே தவிர மற்றவர்களைக் கொண்டு மணி கட்டுவதற்கு முயற்சிக்கக் கூடாது.இது கருத்தியல் ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் தவறேதான். அதே வேளை தவறை ஒப்புக் கொள்வதும் ஏற்றுக் கொள்வதும் தவறு விடுபவர்களின் பெரும்பண்பாகும்.கழுவின மீனிலை நழுவின மீனாக நடப்பதோ மற்றவர்களைக் கொண்டு மணி கட்டச் சொல்வதோ தவறாகும்.
— ஏலையா க.முருகதாசன்-யேர்மனி
5,037 total views, 9 views today