பாவை இலக்கியம்

பாவை இலக்கியங்கள் பாவைப் பாடல்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. தற்போது எமக்குக் கிடைக்கும் முன்னோர்களின் பாவை இலக்கியங்களாக 8 ஆம் நூற்றாண்டில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவையும், 9 ஆம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவையும் காணப்படுகின்றன. தற்போது செந்தமிழ்ப்பாவை, இருபாவை, தைப்பாவை, திருவருட்பாவை, சமணத்திருப்பாவை போன்ற பாவை இலக்கிய நூல்கள் கிடைத்திருக்கின்றன.

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் பெண்களின் பருவத்தை வகைப்படுத்துகின்றனர். அவையாவன 5 வயது தொடக்கம் 8 வயதான பெண்கள் பேதை எனவும், 9 வயது தொடக்கம் 10 வயது வரை பெதும்பை எனவும், 11 வயது தொடக்கம் 14 வயதுவரை மங்கை எனவும், 15 தொடக்கம் 18 வயது வரை மடந்தை எனவும், 19 வயது முதல் 24 வயது வரை அரிவை எனவும், 25 முதல் 29 வரை தெரிவை எனவும், 30 முதல் 36 வயது வரை பேரிளம்பெண் எனவும் அழைக்கப்பட்டனர். இங்கு பாவை எனப்படுவது எவ்வயதுப் பெண் எனப் பார்த்தால், பிங்கலந்தை நிகண்டு 5 முதல் 9 வயதுவரையான பெண்கள் பாவை எனப்படுகின்றனர் என எடுத்துக் காட்டுகின்றது. அக்காலத்தில் 12 வயதில் திருமணம் நடைபெறுவதனால், இப்பாவைப் பருவத்தில் பெண்கள் சிறந்த கணவரைப் பெறுவதற்காகப் பாவை நோன்பு நோற்று திருமணம் செய்வது வழக்கமாக இருந்தது. 5 தொடக்கம் 11 வயது வரையுள்ள பெண்கள் நோன்பு நோற்பவர்களாகக் காணப்படுகின்றார்கள். மார்கழி, தை ஆகிய இரண்டு மாதங்களிலும் இந்த நோன்பு நோற்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகின்றது. மார்கழி மாதத்தில் தொடங்கி தை மாதத்தில் முடிவதனால், மார்கழி நோன்பு என்றும் தைநீராடல் என்றும் அழைக்கப்படுகின்றது. தைநீராடலுக்குச் சான்றுகள் குறிஞ்சிக்கலி, நற்றிணை, ஐங்குநுறூறு, போன்ற சங்கப்பாடல்களில் காணப்படுகின்றன.

“வையெயிற் றவர்நாப்பண் வகையணிப் பொலிந்து நீ
தையில் நீராடிய தவந்தலைப் படுவாயோ|| என குறிஞ்சிக்கலியிலே காணப்படுகின்றது.

“பொய்தல் மகளையாய்ப் பிறர்மனைப் பாடிநீ
எய்திய பிறர்க்கீத்த பயம்பயக் கிற்பதோ

சிறுமுத்தனைப் பேணிச் சிறுசோறு மடுத்துநீ
நறுநுத லவரொடு நக்கதுநன் கியைவதோ”

தைநீராடிய தலைவியைப் பார்த்து என்னுடைய காதலை நீ ஏற்றுக் கொள்வதே நீ நோன்பு நோற்றதன் பயன் என்று தலைவன் கேட்கின்றான். திருமணமாகாத பெண்கள் சிறந்த கணவனைத் திருமணம் செய்ய பாவை நோன்பிருப்பார்கள். பாகவத புராணம் கோகுலத்திலுள்ள பெண்கள் கண்ணன் தமக்குக் கணவனாக வர வேண்டும் என்று யமுனையிலே நீராடி மார்கழிமாதம் நோன்பிருந்ததாகக் கூறுகின்றது. கபிலர் தன்னுடைய குறிஞ்சிக்கலியிலே பெண்கள் தமது சிறுவயதிலே பாவையை வைத்து பாவை நோன்பு நோற்றதைக் கூறுகின்றார். பெண் வீடுகளுக்குச் சென்று பிச்சை எடுத்து அதை சமைத்து பாவைக்கும் படைத்து தோழிகளுக்கும் கொடு;ப்பாள்.

இவ்வாறான பாவை நோன்பிருந்தமை பற்றிய இலக்கியங்களை தற்கால புலம்பெயர்வாழ்வில் உற்று நோக்கும் போது இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. பாவை நோன்பு நோற்கும் பெண்கள் பிச்சை எடுப்பது போல், ஐரோப்பியநாட்டிலும் ஒரு வழக்கம் இருக்கின்றது. திருமணத்திற்கு ஆயத்தமான பெண்களும் ஆண்களும் தம்முடைய சிநேகிதர்களுடன் சென்று நான் திருமணம் செய்யப் போகின்றேன் என்று பிறரிடம் கூறிப் பிச்சை எடுப்பார்கள். அப்பணத்தை தனது திருமணச் செலவுக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால், சிலர் தம்முடைய நண்பர்களுடன் உணவருந்தி அந்த நாளைக் கழிப்பார்கள். இதனை டீயஉhநடழச Pயசவல என்பார்கள். ஆண்கள் தம்முடைய ஆண் நண்பர்களுடனும், பெண்கள் தம்முடைய பெண் நண்பர்களுடனும் மகிழ்ந்து கொண்டாடுவார்கள். இதன் நோக்கம் திருமணத்தின்பின் தம்முடைய நட்பை இந்த அளவிற்கு நெருக்கமாகக் கொண்டாடுவதற்கு நேரமும் பொழுதுகளும் திருமணத்தின்பின் வரப் போவதில்லை. அதனால், திருமணத்தின் முன் தாம் தம்முடைய நன்றாகப் பழகிய நண்பர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடிக் கழிப்பது வழக்கமாக இருக்கின்றது. நாடுகள் வேறுபட்டாலும் பண்பாட்டிலே ஒற்றுமையைச் சில விடயங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.

அக்கால திருமண வயது 12 ஆக இருந்த போது பாவையர் 5 முதல் 11 வரையில் பெண்கள் சிறந்த கணவன் கிடைக்க நோன்பு நோற்றனர். இக்காலத்திலே திருமண வயது 18 ஆக உயர்ந்துள்ளது. இக்காலத்திலே மார்கழி நோன்பு நோற்கப்பட்டாலும் சிறப்பாக பாற்குடம் எடுத்தல் பாவை நோன்பிற்கு இணையாக அமைகின்றது. ஒவ்வொரு அம்மன் கோயில்களின் திருவிழாக்களிலும் பெண்கள் பாற்குடம் எடுக்கும் விழாவாக பாவையர் நோன்பு மாறியுள்ளது. திருமணமாகாத பெண்கள் தமக்கு சிறந்த கணவன் கிடைக்க வேண்டும் என்று பாற்குடங்களைத் தலையிலே ஏந்திய வண்ணம் ஆலயத்தைச் சுற்றிவந்து அந்தப் பாலை அம்மனுக்கு அபிசேகம் செய்வார்கள். இந்நாளில் அப்பெண் விரதம் இருத்தல் வழக்கமாகும். இந்த வழக்கம் புலம்பெயர்ந்த மண்ணிலும் காணப்படுகின்றது.
பெண்கள் இவ்வாறு திருமணம் செய்வதற்கு சிறுவயது முதல் தம்மை ஆயத்தமாக்குகின்றனர். அவ்வாழ்க்கை நல்வாழ்க்கையாக அமைவது அவசியம்.

-கௌசி

3,521 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *