நின்னை சரணடைந்தேன்
புத்தர் குறிப்பிட்ட நிர்வாணத்தின் வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் கவிஞன் பாரதி. அமர நிலை எய்துவோம் என்று தாரணியில் வாழும் மக்களை அழைக்கும் வல்லமை கொண்டவன் எனில், எப்பேர்ப்பட்ட அமர வாழ்வை பாரதி சுகித்திருக்க வேண்டும்.
நிரம்பி வழியும் இன்பத்தில் வெற்றிடத்தை கண்டு மோன நிலை கண்டவர். கண்ணிமையிலும் நுண்ணிய காதலை, எண்ணி எண்ணி மேன்மை கொள்ள எக்காலத்துக்கும் உகந்த காதல் அகராதியை செதுக்கியவர்.
தன்னை இழக்கும் நிலை தான் காதல் என இலக்கணம் வகுக்கிறார். அதனால் ஒன்றொடல்ல பலவற்றோடு காதல் கொள்கிறார். இப்பிரபஞ்சத்தோடு தன்னை லயிக்கிறார். இந்த லயிப்பின் விழிம்பில் கண்ணனை எங்கணும் காண்பதுவும், பராசக்தியை யாதுமாகி உணர்வதும் என மாறி மாறி பரவசமடைகிறார்.
பாரதியின் சிருங்கார சொல்லோவியங்களில் என்னை பெரிதும் கவர்ந்த குயில் பாட்டில் இருந்து சில அடிகளை முன்வைக்கிறேன்.
மன்னவனைக் கண்டவுடன் மாமோகங் கொண்டுவிட்டாய்.
நின்னையவன் நோக்கினான்;நீயவனை நோக்கி நின்றாய்;
அன்னதொரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர்,
மொழிகளின் தேவையை முற்றிலும் துறந்த காதல், கண்களின் சந்திப்பு மொழியில் கலக்கின்றன. அங்கே தீண்டப்படுவது உயிர். உயிர் தீண்டுதல் என்பதை உண்மையாக உணர்வதற்கு அதீத ஆழ்ந்த அமைதி வேண்டும். அந்த அமைதியில் ஆத்மாவின் தன்மை உணரப்படும். அத்தன்மையோடு ஒன்றிடும் வண்ணம் அத்தருணம் அமைந்தால் அது பேரின்பப் போழ்து. அக்கணம் மட்டும் அல்ல அந்த இனிய இன்ப நினைவை மீட்டிப் பார்க்கும் போதெல்லாம் உயிர் தீண்டப்படும். உடல் தீண்டும் முன்பே ஆவியில் கலக்க வேண்டும் என்ற பேருண்மையை சுவைசேர்த்து சொல்கிறார்.
ஆடவனாத் தோன்றி யதன்பயனை இன்று பெற்றேன்;
கண்டதுமே நின்மிசைநான் காதல்கொண்டேன்”
ஒரு ஆடவனைக் கண்டு நாணம் ஏற்படும் போது பெண்மை உணரப்படுவது போல, கண்களினூடே ஊடுருவி ஒரு பெண்ணின் மனதை கவரும் போது, ஒரு பெண்ணை பார்த்து காதல் வயப்படும் போது இளைஞன் அன்று தான் தன்னை ஆடவனாக உணர்வான் என்பது நம் சங்கத் தமிழ் இலக்கியங்களில் ஊறிக்கிடக்கின்றன.
“நின்னையன்றி ஓர்பெண் நிலத்திலுண்டோ என்றனுக்கே
பொன்னே,ஒளிர்மணியே புத்தமுதே,இன்பமே,
நீயே மனையாட்டி,நீயே அரசாணி,
நீயே துணைஎனக்கு,நீயே குலதெய்வம்.
ஆஹா , பெண்ணை போற்றி போற்றி கொண்டாடும் அழகியல் வாழ்வியலை ஆணித்தரமாய் அறிமுகப்படுத்தியவர் பாரதி. கண்கள் மட்டும் தான் உயிர் தீண்டியதா ? மேலுள்ள ஒவ்வொரு சொல்லிலும் வாசகர் உயிர் தீண்டப்படுகிறது.பாரதி தன் காதலியை குல தெய்வமாக பெரும்பாலான கவிதைகளில் போற்றுகின்றான். ஏனையோரிலிருந்து பாரதி வேறு பட்டு நிற்பதற்கு இது ஒன்று போதாதா ?
பூரிப்புக் கொண்டாய் புளகம்நீ எய்திவிட்டாய்.
வாரிப் பெருந்திரை போல் வந்த மகிழ்ச்சியிலே
நாணந் தவிர்த்தாய்;நனவே தவிர்ந்தவளாய்,
காணத் தெவிட்டாதோர் இன்பக் கனவினிலே
சேர்ந்துவிட்டாய்,மன்னன்றன் திண்டோளை நீயுவகை
ஆர்ந்து தழுவி அவனிதழில் தேன்பருகச்
‘சிந்தை கொண்டாய்
வேந்தன்மகன்,தேனில் விழும் வண்டினைப்போல்.
விந்தையுறு காந்தமிசை வீழும் இரும்பினைப்போல்,
ஆவலுடன் நின் யறத்தழுவி,ஆங்குனது
கோவை யிதழ்பருகிக் கொண்டிருக்கும் வேளையிலே
மனம் , வாக்கு, சித்தம், செயல் என எதிலுமே அன்பினைக் கைக்கொள்பவன் , காதலியை கையாழ்வதிலும் மெல்லியலிலைக் காட்டுவதில் உறுதி பூண்டவர் . ஆவிகலப்பு கண்களினூடு நிகழ்ந்தது, அடுத்து யாக்கையின் வேட்கை இதழ் வழி நிரம்புகிறது.
சில சொல்லாடல்கள் பாரதிக்கே உரித்தானவை போல தோன்றும். உதாரணமாக கண்ணம்மா என்றால் பாரதியே நினைவிற்கு வரும். அது போல ஆராத்தழுவி என்றாலே பாரதியின் சுக வாசம் வீசும். அன்போடு நெஞ்சம் உய்ய உயிர் கலந்து அணைக்கும் அதி உன்னத உணர்வினை ஆரத்தழுவி என்னும் ஒற்றை வார்த்தைக்குள் அடக்கும் வண்மைகொண்டவர்.
ஆவிக் கலப்பின் அழுத சுகந்தனிலே
மேவியங்கு மூடீ யிருந்த விழிநான்கு
இச்செயலை அமுத சுகம் என்று குறிப்பிடுகிறார். அழிந்து போகும் ஓர் பொருளில் பேரின்பம் நிலவ வாய்ப்பில்லை.ஆக்கைக்குள் மட்டும் அடங்கிய இன்பத்தில் அமுத சுகம் காண இயலுமா? அழியாத ஆன்மாவோடு கலந்திடும் அன்பினைத் தான் அமுத சுகம் என்று கருதியிருக்க கூடும்.
சாவிலே துன்பமில்லை;தையலே,இன்னமும் நாம்
பூமியிலே தோன்றிடுவம்,பொன்னே,நினைக்கண்டு,
காமுறுவேன்;நின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன்;
இன்பமுறு புன்னகைதான்
நின்று முகத்தே நிலவுதர,மாண்டனன் காண்.
மலை போலத் துன்பம் வந்தாலும், இன்பத்தை மட்டுமே எப்போதும் நுகர்ந்து கொண்டிருந்த பாரதி , சாவிலும் துன்பம் இல்லை என்கிறார். குயில் பாட்டின் காட்சிப் படி அந்தக் காதலன் , காதலியின் தேனிதழை பருகி பருகி இவ்வுலகை மறந்த உன்மத்த நிலையில் இரு ஆவியும் ஒன்றென கலந்து கண் மூடி இருக்கும் போது, திடீரரென்று கொலை செய்யப் படுகிறான்.இந்த சந்தர்ப்பத்தில், கோபம், பயம், கவலை என எதிர் மறை உணர்வுகள் பலதும் வரலாம். இருப்பினும் நம் பாரதிக்கு இன்பமே நிலவுகிறது. அந்த காதல் களியிலேயே மரணிக்கிறான். அதனால் மரணிக்கும் அவன் முகமும் மதி போல் அழுகுடையாகிறது.
காதல் அன்பினில் கலந்து வாழ்ந்தால் உலகில் துன்பம் இல்லை என்ற பேருண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்றே பல கவி வரைந்து, இன்பத்தின், அமைதியின், ஏகாந்தத்தின் பாதையைக் காட்டி அவ்வழி, பேரின்ப பெரு வாழ்வை வித்திட்ட காதலன் பாரதியியின் வேதாந்த வாழ்வினை நினைந்து மீண்டும் சரணடைகிறேன்.
1,611 total views, 3 views today