யேர்மனிய சுகாதாரச் செய்திகள்
— வ.சிவராசா – யேர்மனி
01-
நமது உடல் உறுப்புக்களில் இருதயம் மிகவும் முக்கிய உறுப்பாகும். இந்த இருதயம் நமது உடலின் செயற்பாட்டில் முதலிடம் பிடிக்கின்றது. உடல் உழைப்பால், மனவலிமையால் திடகாத்திரமாக வாழ்ந்த மனிதன் இன்று வேறுபட்ட வாழ்க்கைச் சூழலால் பல நோய்களையும் வரவேற்றுக்கொண்டான். யேர்மனியில் இதய அறுவை சிகிச்சை அதிகரித்துவருவதாக மருத்து நிறுவனம் ஒன்று அதன் ஆய்வில் தெரிவித்துள்ளது. அதாவது 40 – 79 வயதினரிடையே எடுக்கப்பட்ட கணிப்பின்படி சென்ற ஆண்டில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கையைப் பார்ப்போம்.
• 40 – 49 வயது – 11 வீதம்பேர்
• 50 – 59 வயது – 33 “
• 60 – 69 வயது – 29 “
• 70 – 79 வயது – 10 “
02-
நீரழிவு நோய் இன்று உலகில் அதிகரித்துவரும் நோய்களில் ஒன்றாகும். இது வயது வேறுபாடின்றி அனைவருக்கும் ஏற்படும் நோயாகக் கருதப்படுகின்றது. யேர்மனியிலுள்ள சுமார் 82 மில்லியன் சனத்தொகையில் 7 மில்லின் மக்கள் இந்த நோய்கு (Type -2) ஆளாகியிருக்கிறார்கள். வருடாவருடம் சுமார் 5 லட்சம் புதிய நோயாளிகள் உருவாகிவருகிறார்கள். வருடாவருடம் சுமார் 16 பில்லியன் யூரோ இதற்கு அரசு செலவழிக்கும் பணமாகும். சராசரியாக ஒருநோயாளிக்கு ஒரு வருடம் சுமார் 5.000-00 யூரோவைச் செலவிட வேண்டியுள்ளது. இதைவிட இந்த நோயாளிகளில் 5 பேருக்கு ஒருவர் விரைவாகவே இறப்பைத் தழுவிக்கொள்கிறார்கள். யேர்மனியின் மேற்குப்பகுதியில் 8.9 வீதமாகவும் கிழக்குப்பகுதியில் 11.6 வீதமாகவும் நோயாளிகளின் எண்ணிக்கை காணப்படுவதாகவும் சுகாதாரப்பகுதியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
03-
மனிதர்களை அழித்தொழிக்கும் நோய்களில் புற்றுநோய் ஒரு கொடிய நோயாகக் கருதப்படுகின்றது. பல உறுப்புக்களில் ஏற்படும் இந்த நோயை ஒழித்துக்கட்ட எத்தனையோ ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புக்கள், மருந்துகள் இருப்பினும் இந்த நோயை ஒழிக்கமுடியாமல் உலகம் திணறுகின்றது. யேர்மனியைப் பொறுத்த அளவில் பெண்களை எடுத்து நோக்கினால் இந்தப் புற்று நோயினால் பல ஆயிரக்கணக்கானோர் வருடாவருடம் இறந்துவிடுகிறார்கள். அதுவும் இந்த மார்பகப்புற்றுநோயினால்தான் மிகக்கூடுதலான பெண்கள் இறப்பதாக சுகாதாரப் பகுதியினர் அறிவித்துள்ளனர். இந்த நோயினால் யேர்மனியில் கடந்த பத்து ஆண்டுகளில் இறந்த பெண்களின் எண்ணிக்கையைப் பார்ப்போம்.
-மார்பகப்புற்றுநோய் (Chest) – 18.401 பெண்கள் இறப்பு
-மூச்சுக்குளாய், நுரையீரல் (Bronchi+Lung) – 16.369 “ “
-கணையம் (Pancreas) – 9.058 “ “
-பெருங்குடல் (Large in Testine) – 7.673 “ “
-கருப்பை (Ovaries) – 5.373 “ “
-உள்ளுறுப்புக்கள் (Without Localization) – 5.165 “ “
-வயிறு (Stomach) – 3.700 “ “
-மலக்குடல் (Rectum) – 2.945 “ “
-கல்லீரல் (Liver) – 2.697 “ “
-மூளை (Brain) – 2.691 “ “
4-
கண்ணுக்குக் கண்ணாடி அணிபவர்கள் எல்லோரும் கண்பார்வை தெரியாதவர்கள் என்று கூறமுடியாது. பார்வைக்குறைபாடு உள்ளவர்களும் முன்னேற்பாடாகப் பாதுகாத்துக் கொள்வதற்கும் பலர் கண்ணாடியை அணிகின்றார்கள. இன்றை வாழ்வியல் சூழலில் கண்பார்வை இழப்போர் தொகையும் கூடிவருவதாகத் தெரியவருகின்றது. யேர்மனியின் 82 மில்லியன் சனத்தொகையில் 41.1 வீதம்பேர் கண்ணாடி அணிகிறார்களாம். இத்தொகையில் 16 வயதுக்கு மேலான இளையோரை எடுத்து நோக்கினால் 5 பேருக்கு ஒருவர் கண்ணாடி அணிகிறார்களாம்.
5-
யேர்மனியில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது. மருத்துவம், உணவு, உடற்பயிற்சி, சமூகச்சூழல், பழக்கவழக்கம் போன்ற காரணங்களால் வயதானவர்களின் ஆயுள் கூடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு யேர்மனி மாகாணங்களைவிட கிழக்கு யேர்மனி மாகாணங்களில் வசிக்கும் முதியோரின் ஆயுட்காலம் கூடிக்கொண்டு வருவதாக அரச புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
06-
தற்போது உலகத்தைக் கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா நோயினால் நாளாந்தம் பல்லாயிரம் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. யேர்மனியில் இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் 50 வீதம்பேர் மனப்பயத்தால் பாதிக்கப்பட்டு கொரோனாவுடன் மனஅழுத்தமும்கூடி இறப்பைத் தழுவிக்கொள்கிறார்கள் என சுகாதாரப் பகுதியினர் அறிவித்துள்ளனர்.
1,824 total views, 6 views today