விசித்திர மனநோய்!

முஞ்சோசன் சின்ரோம் (Munchausan Syndrome)
ஒரு யேர்மனியருக்கே இந்நோய் முதலில் அறியப்பட்டது!
இந்த வினோதமான நோயைப் பற்றிப் பேசுவதற்கு எனது பாடசாலை அனுபவம் ஒன்றை தொடர்புபடுத்துவது இந்நோயின் ஒரு பகுதியை இலகுவாக புரிந்து கொள்ள உதவும்.
“எனக்கும் என் குழந்தைக்கு ஒரே வருத்தம், ஒரு மாதிரியாய் நெஞ்செல்லாம் அடைச்சுப் போய் நானும் அவளும் வீட்டில படுத்த படுக்கை தான்.” அந்தத் தாய் சொன்னதை மிகுந்த ஆதங்கத்தோடு நானும் கேட்டுக்கொண்டேன். நன்றாகப் படிக்கக் கூடிய குழந்தைக்கு இப்படியான நோய் வந்து சேர்ந்ததே என எனக்கும் கவலையும் யோசனையும் தான்.
குழந்தை பாடசாலையில் நன்றாக ஓடி விளையாடி, திடகாத்திரமாகவும் கற்பதை மிகுந்த சிரத்தையுடன் அவதானிப்பதையும் பார்த்த போது ஏதோ எங்கேயோ இடிப்பது போலிருந்தது. போதாக்குறைக்கு குழந்தையும் தனக்கெதுவும் உடல் வலி, மனக்கவலைகள் இருப்பது போலவும் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் தன்னுடைய தோழி ஒருத்திக்கு தனது தாய் பற்றிச் சொன்னது எதேச்சையாக என் காதிலும் கேட்டு நான் மேலும் ஜாக்கிரதையானேன்.
“அம்மா எனக்கு அடிக்கடி மருந்து தாறா, ஆனால் எனக்கு மருந்து குடிக்க விருப்பமில்லை.” ஆறு வயதேதான் என்றாலும் குழந்தை ஒரு வித கவனத்துடன் என்னைக் கண்டதும் தன் கதையை நிறுத்திக் கொண்டது.
ஆனால் அடுத்தடுத்த மாதங்களிலும் அடிக்கடி பாடசாலைக்குக் குழந்தை வராமல் இருப்பதும் அதற்கு தாய் ஒவ்வொரு நோய் நொடியென்று அளந்து விடுவதும் எனக்கேதோ ஒரு சந்தேகத்தைத் தர இதற்கென பதவியிலுள்ள அதிகாரியொருவருக்கு ஒருவருக்குத் தகவல் அனுப்பி விட்டு, அடுத்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தேன்.
அடுத்த தடவையும் ஒரு நோய் சொல்லப்பட்ட போது, அது நிச்சயமாக உண்மைக்குப் புறம்பாக இருக்கும் என்பது அவருடைய கதையைச் சுற்றி வந்த சம்பவங்கள் பறை சாற்றின. அதாவது குழந்தைக்கு வந்த நோயின் தீவிரத்தில் குழந்தையை மருத்துவ உலங்கு வானூர்தி மூலமாக ( Air lifted by the paramedics) வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாக சம்பவத்தை அந்தத் தாய் விபரித்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தைப் பற்றி சொல்லி இதனால் தான் குழந்தை பாடசாலைக்கு வரவில்லை என்பது குறிப்பிடப்பட்டது.
தாய் போனபின், சில சாதாரணமான கேள்விகளுக்கு குழந்தை பதில் அளித்தது. குழந்தைகளிடம் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை நேரடியாகக் கேள்வி கேட்கக் கூடாதென்பது (must not ask any leading questions) எமக்களிக்கப்பட்ட பயிற்சிகளில் ஒன்று.
எனினும் நன்றாகக் கதைக்கத் தெரிந்த, புத்திசாலியாகவும் இருக்கும் ஒரு குழந்தைக்கு தான் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட விடயம் தெரியாமல் இருக்கும் என்பதை என் மனம் ஒத்துக்கொள்ளவில்லை. அடித்து மட்டுமல்ல அவர்கள் வீட்டுக்கருகில் உலங்கு வானூர்தி இறங்கி ஏறும் வசதியெதுவும் இல்லை என்பது எமக்குத் தெரிந்திருந்தது. அயல் வீடுகளில் இருக்கும் எமது பாடசாலையில் கல்வி கற்பிக்கும் சில ஆசிரியர்கள் அப்படி எதுவும் அந்த குறிப்பிட்ட நாளில் நடைபெற வில்லை என்பதையும் உறுதிப்படுத்தியிருந்தார்கள்.
ஏற்கனவே என்னால் பதிவு செய்யப்பட்ட குறிப்புகளிலிருந்தும் சமூகநல அதிகாரியின் நேரடிக் கண்காணிப்பிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளிலிருந்தும் ,அவருடைய கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வாக்கு மூலங்களிலிருந்தும் அந்தத் தாய்க்கு ஒரு வித மன நோய் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த விசித்திர நோயால் பலர் பாதிக்கப்பட்டிருந்தாலும், முதன் முதலில் அதை மனநோய் வைத்தியர்கள் 18ம் நூற்றாண்டில் கண்டுபிடித்த போது முஞ்சோசன் (Baron Von Munchausen) என்கிற ஒரு ஜேர்மனியருக்கே இந்நோய் இருந்தது அறியப்பட்டதால் அவருடைய பெயரையே இந்நோய்க்கு வைத்து விட்டார்கள். இந்நோயின் அறிகுறிகள் பலதரப்பட்டதாயினும் முக்கியமானவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.
இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கு இல்லாத பொல்லாத வருத்தங்களை எல்லாம் இருப்பதாக நம்புவார்கள். அதுமட்டுமல்ல தம்மைச் சுற்றி இருப்பவர்களையும் நம்ப வைப்பதற்காக படாதபாடு படுவார்கள்.
தம்மைத்தாமே காயப்படுத்துவது உட்பட தமது சிறுநீர் மாதிரியை மாசு படுத்துவது, மருத்துவ சொற்களைப் பற்றி முன்கூட்டியே படித்து வைத்து வைத்தியர்களையும் குழப்புவார்கள்.
அடிக்கடி தமக்கு மருத்துவ சோதனைகள், இரத்தப் பரிசோதனைகள் தேவை என அடம் பிடித்துக் கொள்வார்கள். அத்துடன் வேறு வேறு மருத்துவர்களை அல்லது வெவ்வேறு வைத்தியசாலைகள், மருத்துவ நிலையங்களை பயன்படுத்துவது போன்ற செயல்கள் மூலம் நோய் அறிகுறிகளை சரியான முறையில் பார்த்து நிவர்த்தி செய்ய வைத்தியர்களை அனுமதிக்க மாட்டார்கள்.
இந்நோய்க்கான சரியான காரணங்கள் அறியப்படா விட்டாலும் ஒரு சில காரணிகள் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சியில் உயிரியல் மற்றும் உளவியல் காரணிகளின் பங்கு முக்கியத்துவம் வகிக்கிறது. குழந்தையாக இருந்தபோது துஷ்பிரயோகத்துக்கு ஆளாவது, மருத்துவமனையில் அடிக்கடி அனுமதிக்கப்பட்டிருப்பது, ஆளுமைக் கோளாறுகள் போன்றவை இவற்றுள் அடங்குகின்றன.
பொதுவாக இந்நோய் பெண்களை விட ஆண்களையே அதிகம் பாதிப்பதாய் இருப்பதும் கண்டு கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சை முறைகளை எடுத்துக்கொண்டால் உளவியல் சிகிச்சைகள், முக்கியமாக பேச்சுச் சிகிச்சை ஒரு முக்கிய சிகிச்சையாகும். இதில் நோயாளியை கண்டுபிடிப்பது மிகக் கடினமாக இருப்பதற்குக் காரணம் நோயாளிகள் பெரும்பாலும் தமது உடல் நோய்க்கான குணம் குறிகளை மிகைப்படுத்தியும், ஒன்றுக்கொன்று முரணான அறிகுறிகளை அல்லது இல்லாத ஒரு நோயை வைத்தியர்கள் நம்பும் படியாகக் கூறுவதும் தான். தமக்கு மனதில் உள்ள பாதிப்புகளை வெளியே காட்டாமல் அதே வேளையில் தம்மைச் சுற்றியிருப்பவர்கள் தம்மை அனுதாபத்துடன் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் சிந்தனை உள்ளவர்களாக இருப்பதும் இவர்களுக்கு கைவந்த கலையாக இருப்பினும் இவர்கள் ஒருவகையில் அனுதாபத்துக்குரியவர்களே.
— பூங்கோதை- இங்கிலாந்து
1,726 total views, 6 views today