உன்னால் முடியும் தம்பி
இதழில் கதை எழுதும் நேரமிது, என்ன சமையலோ, அக்கம் பக்கம் பாரடா, மானிட சேவை துரோகமா, புஞ்சை உண்டு, உன்னால் முடியும் தம்பி என பாடல்கள் அனைத்துமே இளையராஜாவின் டிரேட்மார்க் வசீகரங்கள்.புலமைப் பித்தன், முத்துலிங்கம் மற்றும் இளையராஜா பாடல்கள் எழுதியிருந்தனர்.
கமலஹாசன், ஜெமினி கணேசன், சீதா, மனோரமா, மீசை முருகேசன், சார்லி, ஜனகராஜ், நாசர், டெல்லி கணேஷ், ரமேஷ் அரவிந்த் என ஒரு நடிகர் பட்டாளமே படத்தில் நடித்தது.
உயர்ஜாதி என சொல்லப்படுகின்ற ஜெமினிகணேசனின் மகன் கதாநாயகன். தந்தை கண்டிப்பானவர். கர்நாடக சங்கீதத்தில் கொடிகட்டிப் பறப்பவர். கடுமையான சாதீயப் பார்வை கொண்டவர். கூடவே நேரம் தவறாமையை முழுமையாகக் கடைபிடிப்பவர். தனது மூத்த மகன் வாய்பேசாதவன் ஆனதால் கமலை தனது இசை வாரிசாகக் கொண்டு வர முயல்கிறார்.
கமலுக்கோ இசையை விட சமூகம் பிடித்திருக்கிறது. சாதீய முறை பிடிக்கவில்லை. வேறு சாதிப் பெண்ணை நேசிக்கிறான். நேரம் தவறாமையை விட நேயம் தவறாமையே அவனுக்கு முக்கியமாய்ப் படுகிறது. அதனால் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறான். தந்தையின் பெயரைப் பயன்படுத்தாமலேயே ஊரை தூய்மையாக்கி, குடிகாரர்கள் இல்லாத ஊராய் மாற்றி சிறந்த இந்தியனாய் பெயர் பெறுகிறார்.
மகனின் உயர்வைப் பார்த்த தந்தை , “நான் இவனுடைய தந்தை” என பெருமை கொள்கிறாள். மகன் காதலித்த கீழ்சாதி என அழைக்கப்படும் பெண்ணையே திருமணம் செய்து வைக்க ஒத்துக் கொள்கிறார்.
உன்னால் முடியும் தம்பியின் கதைக் களமும், வறுமையின் நிறம் சிவப்பு கதைக் களனும் கிட்டத்தட்ட ஒன்று தான். இசைக் குடும்பம். தந்தையின் கண்டிப்பு. இசை தெரிந்த மகன், இசையை விட்டு விலகிச் செல்கிறான். சமூகம் குறித்த பார்வை கொள்கிறான். என பல்வேறு ஒற்றுமைகள் இரண்டு பட களங்களிலும் நேர்ந்தன.
கலையைத் தாண்டி கே.பாலசந்தர் சமூகத்துக்கான பங்களிப்பாய்ச் செய்த படங்களின் பட்டியலில் இந்தப் படம் நிச்சயம் இடம் பிடிக்கும். நல்ல செய்தியைச் சொல்லி, வெற்றி பெற்ற சிறந்த படம் உன்னால் முடியும் தம்பி.
புதுப் புது அர்த்தங்கள்
சென்ற ஆண்டு உன்னால் முடியும் தம்பி என்றால் 1989ல் “புதுப் புது அர்த்தங்கள்”. ஒரே ஒரு படம் தான் இந்த ஆண்டு பாலசந்தரின் கைகளிலிருந்து கிடைத்தது. அது புதுப்புது அர்த்தங்கள்.
ரஹ்மான் சித்தாரா இணையுடன், கீதா, ஜனகராஜ், ஜெயசித்ரா, பூர்ணம் விஸ்வநாதன், சௌகார் ஜானகி, விவேக் மற்றும் இளையராஜா நடித்திருந்தார்கள்.
பாலசந்தர் தனது வழக்கமான பாணியை விட்டு விலகி, குடும்ப வாழ்க்கையின் எதார்த்தங்களின் அடிப்படையில் எடுத்த ஒரு படம் என இந்தப் படத்தைச் சொல்லலாம். பிரபல பாடகனான கணவன். கணவனை அதீதமாய் நேசிக்கும் மனைவி. கணவனுக்கு நிறைய பெண் தோழிகள் உண்டே என பயப்படும் மனைவி. அதனால் ஏற்படும் சிக்கல்கள்.
கணவனால் மன அழுத்தத்துக்கு உள்ளாகித் தப்பிக்கும் ஒரு பெண்ணும், கதாநாயகனும் சந்தித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்குள் காதல் உருவாகிறது. வாழ்க்கையின் உணர்ச்சிகரமான நகர்வுகளுக்குப் பின், இரண்டு தம்பதியரும் அவரவர் சொந்த வாழ்க்கையில் இணைகிறார்கள். சுபம் !!!
இசையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் பாடல்கள் படத்தின் மிகப்பெரிய ஹைலைட் ஆக இருந்தன. குருவாயூரப்பா குருவாயூரப்பா, கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே, கேளடி கண்மணி போன்ற பாடல்கள் காலத்தைத் தாண்டி காதுகளில் ரீங்காரமிடும் தன்மை கொண்டவை.
1990ம் ஆண்டும் பாலசந்தர் இயக்கத்தில் ஒரே ஒரு படம் தான் வெளியானது. அதிக எண்ணிக்கையில் படம் எடுப்பதை பாலசந்தர் நிறுத்தி விட்டு ஆண்டுக்கு ஒரு படம் எனும் அளவில் சுருக்கிக் கொள்ள ஆரம்பித்திருந்தார்.
ஒரு வீடு இரு வாசல், இது தான் பாலசந்தர் 1990ம் ஆண்டு இயக்கிய திரைப்படம். இரண்டு வெவ்வேறு கதைகளை இரண்டு படமாக எடுத்து அதை ஒரு நேர்கோட்டில் ஒரு படமாய் இணைக்கும் புதுமையான உத்தியை இந்தப் படத்தில் பாலசந்தர் பரிசோதித்துப் பார்த்தார்.
“என்னைப் பொறுத்தவரை நான் இயக்கும் எல்லா படங்களும் நல்ல படங்களே. சில படங்கள் ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போய்விடுகின்றன. அது அவர்களுடைய உரிமை. ஆனால் அதற்காக எனது பார்வையை நான் விட்டுக்கொடுக்க முடியாது” என்பார் பாலசந்தர். அனுராதா ரமணனின் கதைக்கு திரைக்கதை வடிவம் கொடுத்து பாலசந்தர் இயக்கியிருந்தார். படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால் நல்ல விமர்சனங்களைச் சம்பாதித்துக் கொடுத்தது. தேசிய விருதையும் சொந்தமாக்கியது.
2,010 total views, 2 views today