பட்டாம்பூச்சிச் சுமைகள்
ஒடிந்துவிடுவோமென்று
தெரிந்தும்
வலிந்து ஏற்றப்பட்டவற்றை
சுமந்து செல்கையில்
தன்னம்பிக்கையென்று
புகழப்படுவனவெல்லாம்
ஏதோவொரு நாளில்
உடைந்துபோகும் நொடிகளிலே
முட்டாள்தனமென
ஆகிவிடுகின்றது!
பட்டாம்பூச்சிச் சிறகில்
பாறாங்கல்லைக் கட்டிச்
சுமத்தலே அதன்
தன்னம்பிக்கையென்பதும்
ஏதோவொரு வகையில்
விதி மீறல்தான்!
அதை விதியென்று கூறிப்
பறக்கச் சொல்தலும்
கைதட்டி உற்சாகப்படுத்தலும்
எப்போதும் நியாயமாகிவிடாது!
சோதனைகளைத்
தாண்டி வருதலே
சாதனையென்று
கூறுவோர்க்குத்
தாண்டத் தாண்டச்
சோதனைகள் மட்டுமே
தொடர்தலென்பது கவனத்தில்
வராமலே போகலாம்!
சக்திக்கு மீறிய சோதனைகள்
சாதனைகளாகளாம்தான்!
எல்லாமும் எப்போதும்
சாதனையாவதில்லையென்ற
எதார்த்தத்தையும்
இந்த உலகம்
உணர்ந்தாக வேண்டியுள்ளது!
ஓட்டப் பந்தயத்தில்
ஓடி ஓடிக் களைத்து
வெற்றிக்கோட்டை அடைந்தே
இறந்தவன் நிலையை
வரலாறுகள் மட்டுமே பேசும்;
இறந்தவன் இறந்தவனாகவே
இழந்துவிடுகிறான்!
எல்லாப் புகழின் பின்னாலும்
மறை(ற)க்கப்பட்ட பெரும்வலிகள்
ஆழமாகவேயிருக்கும்
ஆறாத ரணங்களாய்!
ஏமாந்துபோன வலிகள்
பழகிப்போயிருக்கும்
அன்றாட நிகழ்வாக!
பட்டாம்பூச்சிச் சிறகில்
பாரமேற்றாதீர்கள்!
அவற்றிற்கு எந்தத்
தன்னம்பிக்கையும்
தேவையில்லை!
புழுவிலிருந்து பறத்தல்வரை
அவை சுயமாகவே
முன்னேற்றம் கண்டவை!
ஒடிந்துவிடுமென்று தெரிந்தும்
தைரியமளிக்காதீர்கள்!
அவற்றின் சுதந்திரம்
பறத்தலில்தான் உள்ளது!
பாரம் சுமப்பதிலல்ல!
அறியாமைகளை
எடுத்துரையுங்கள்!
தன்னம்பிக்கையளிப்பதாய்
நினைக்கும் உங்கள்
அறியாமைகளில்
சிறகுகள் ஒடிந்து உடைந்த பின்
பரிதாபப்பட்டுப் பேசுவதற்கு
எதுவுமேயில்லை!
உடைந்த சிறகுகளை
ஒட்ட வைத்துப் பறக்க
அவை இயந்திரப்
பட்டாம்பூச்சிகளல்ல!
இந்தச் சமுதாயத்தின்
சதிகளில் இரையாகிப்போன
பட்டாம்பூச்சிகள்!
பட்டாம்பூச்சிச் சிறகுகளில்
பாறங்கல் சுமைகள் ஏற்றாதீர்கள்!
இயல்பு மீறிச் சுமப்பது தன்னம்பிக்கையாகிவிடாது!
இயல்பு தொலைத்த
உலகமாய் இருந்தாலும்
சக்திக்கு மீறிய சுமைகள்
இயல்பு மீறிய கணக்கிலேயே
சேர்ந்துகொள்ளும்!
பட்டாம்பூச்சிகள்
பட்டாம்பூச்சிகளாகவே
வலம் வரட்டும்!
இயல்பு தொலைத்த
இழி நிலையில் வரும்
தன்னம்பிக்கை அவற்றிற்கு
ஒருபோதும் வேண்டாமே!
-பொலிகையூர் ரேகா-தமிழ்நாடு
1,883 total views, 3 views today