முகமூடி மனிதர்களுக்கு ஏன் மேலும் ஒரு முகக்கவசம்!

தங்கத்தை உலையில் போட்டு அதீத சூடாக்குவார்கள். அப்போது அதிலுள்ள துருக்களெல்லாம் விலகிப் போக, சுத்தமான தங்கம் பிரித்தெடுக்கப்படும். அனலடிக்கும் வெப்பம் நல்ல தங்கத்தை அடையாளம் காட்டும். கசடுகளை அதுவே பிரித்துக் காட்டிவிடும்.

ஒரு அழுத்தமான சூழலுக்குள் போகும்போது தான் உண்மையான நண்பர்களை அடையாளம் காண முடியும். சுயநலமெனும் துருக்கள் தங்கியிருக்கிறதா ? அன்பெனும் அறம் நிரம்பியிருக்கிறதா என்பதையெல்லாம் அழுத்தம் நமக்கு அறிவித்து விடும். எத்தனை சோதனைகளுக்கு உள்ளே நுழைந்து சென்றாலும் தங்கமாய் ஜொலிக்கும் குணமுடையவர்களே மானுடத்தை இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கோவிட் காலமும் நமக்கு பல முகமூடிகளை நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. கிருமிகளுக்காய் போடுகின்ற முகக் கவசம் அல்ல, அந்த மாஸ்க் நம் உயிரைக் காக்கிறது. ஆனால் சமூக விரோதக் கிருமிகள் தங்கள் முகத்துக்கு போடுகின்ற முகமூடி நமது உயிரை வலுக்கட்டாயமாய்ப் பறித்து எடுக்கிறது.

பசுத்தோல் போர்த்திய ஓநாய்களின் நடமாட்டம் இந்த கோவிட் காலத்தில் நிறையவே ஓடித் திரிவதைக் காண முடிகிறது. மனித நேயத்தின் துளி கூட இல்லாத கதைகள் இந்த பேரிடர் காலங்களில் நமக்குப் பேரிடியாக வந்து விழுந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

கோவிட் நோயாளிகளிடையே தீவிரமாய்ப் பணியாற்றுகிறார் ஒரு மருத்துவர். தனது குடும்பம், உறவுகள், எல்லாரையும் விட்டு விட்டு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காய்ப் பணியாற்றுகிறார் அவர். கடைசியில் வாளெடுத்தவன் வாளால் மடிவான் என்பது போல, கிருமியை விரட்டிக் கொண்டிருந்தவர் கிருமியாலேயே தாக்கப்பட்டார். தனது இளம் வயதிலேயே உயிரையும் இழந்தார். ஆனால் அவரது உடலை அடக்கம் செய்யக் கூட மக்கள் அனுமதிக்கவில்லை. தங்களுக்காய் உயிரைத் தியாகம் செய்த அவருடைய குடும்பத்தையும் அவமானப் படுத்தினார்கள். மனித நேயம் என்றால் என்ன விலை என கேட்கவும், சுயநல நத்தையோட்டுக்குள் அடங்கிக் கொள்ளவும் இந்த கிருமி அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தது.

சில பொய்களுக்குள்ளும் உண்மை கசிகின்றன!

நோயின் பாதிப்புக்குள்ளாகி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் குணமாகவில்லை என அறிவிக்கப்படுகிறார். சில நாட்களில் அவர் இறந்து விடுகிறார். அவரது உடலில் அறுவை சிகிச்சை நடந்ததற்கான அடையாளம் இருப்பதாக புகார் எழுகிறது. உறுப்புகள் திருடப்பட்டதாய் அச்சம் எழுகிறது. வாட்சப்களிலும், சமூக ஊடகங்களிலும் அதே போன்ற பல செய்திகள் உலவுகின்றன. சில செய்திகள் பொய்களுக்குக் கட்டிய சிறகுகளாய் இருக்கலாம், சில உண்மைகளின் கசிவுகளாகக் கூட இருக்கலாம் எனும் அச்சம் நிலவுகிறது. எரிகிற வீட்டில் புடுங்கற வரைக்கும் லாபம், எனும் சுயநல மனநிலை நோயை விடக் கொடியதாய் இருக்கிறது.

எனது நண்பர் ஒருவருக்கு நோய் பாதிக்கிறது. அவர் மருத்துவமனை ஒன்றுக்குச் செல்கிறார். பெரிய தனியார் மருத்துவமனை. ஐந்து இலட்சம் அட்வான்ஸ் கட்டச் சொல்கிறார்கள். கட்டுகிறேன், இப்போ அட்மிட் பண்ணுங்க பணம் ஏற்பாடு பண்ணிட்டு வரேன் என்கிறார் மனைவி. ‘அதெல்லாம் முடியாதும்மா, பணம் கட்டினா அட்மிட் பண்றோம், இல்லேன்னா கிளம்புங்க – நிறைய பேஷண்ட்ஸ் வெயிட்டிங்ல இருக்காங்க’ என்கிறது மருத்துவமனை. அவர் அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். மருத்துவ மனைகள் தங்கள் கைகளில் சாவுக்கான சானிட்டைசர்களை தடவிக் கொள்கின்றன.

சொல்லப் பட்ட நிகழ்வுகள் எல்லாமே உண்மையும், உண்மை சார்ந்தவைகளும் தான். நோய் பரவாமல் இருக்க முகத்துக்கு மாஸ்க் போடுங்கள் என்கிறார்கள். ஏற்கனவே முகமூடிகளுக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டவர்களுக்கு புதிதாய் மாஸ்க் எதற்கு என நாம் வியக்கிறோம்.

மனிதர்களின் முகமூடிகளைக் கிழித்து எறிகிறது மாஸ்க் !

எத்தனை மக்கள் சாகிறார்கள் என்பது முக்கியமில்லை ஒரு மருத்துவப் போருக்கான ஒத்திகை இது என ஆய்வுகளை சமர்ப்பிப்பவர்களும் உண்டு. பயமுறுத்தும் பயோ வார் தான் இது என சாதிப்பவர்களும் உண்டு. உயிர்களை ஒன்று, இரண்டு என எண்ணிக்கையில் பார்க்கின்ற சர்வாதிகார சிந்தனை. இத்தகைய கொடூர முகமூடிகள் சர்வதேசத்தின் மாபெரும் அவலம்.

எத்தனை மக்கள் சாகிறார்கள் என்பது முக்கியமல்ல, அதற்கான மருத்துவ உபகரணங்கள், தடுப்பு மருந்துகள், எல்லாமே எனது நிறுவனம் வழியாகச் செல்லவேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ செய்வேன் எனும் கார்ப்பரேட் இலாபக் கணக்கு ! இத்தகைய தொழில் நிறுவனங்கள் மனுக்குலத்தின் மாபெரும் துயரம்.

எத்தனை மனிதர்கள் சாகிறார்கள், வேணும்ன்னா கொஞ்சம் அனுதாபப்பட்டுக்கலாம், ஆனால் . நாம் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது. நாம் பாதுகாப்பாய் இருப்போம் எனும் மனநிலையுடன் இருக்கிறார்கள் ஏராளம் மனிதர்கள். மனிதத்தை கம்பிகளுக்குள் கட்டிப் போட்டிருக்கும் இத்தகைய மனிதர்கள், மனுக்குலத்தின் மாறாக் கவலை.

வெளிச்சம் விழுகின்ற மேடைகளில் இவர்கள் அரிதாரம் பூசிய அவதாரங்கள். அப்பழுக்கற்ற சொக்கத் தங்கங்கள். ஆனால் உண்மையின் அறைகளிலோ இவர்களின் முகப்பூச்சுகள் உருகி வழிகின்றன. முகப்பூச்சுகளுக்கு உள்ளே உறைந்து கிடக்கின்ற வன்மத்தின் முகம் வெளித்தெரிகிறது.

இவர்கள் முகமூடிகளை மாற்றி மாற்றி உண்மை முகங்களே அவர்களுக்கு அந்நியப்பட்டுப் போயிருக்கின்றன.

கண்ணுக்குத் தெரியாத கிருமியின் பாதிப்புகளுக்காய் போடுகின்ற முகக்கவசங்கள் ஆபத்தற்றவை. அவற்றைத் தேவைப்படும் போது கழற்றி விட முடியும். ஆனால் நிரந்தரமாய், தேவைக்கேற்றபடி மனிதன் அணிந்து கொள்கின்ற முகமூடிகள் ஆபத்தானவை. அவை மனிதத்தை மறுதலித்தவனின் போலி பிம்பங்கள்.

இந்த பெருந்தொன்றின் காலத்தில் பேரன்பு காட்டுபவர்களிடம் இருக்கிறது முகமூடியற்ற தெய்வீக முகம். ஏதோ கண்ணுக்குத் தெரியாத தேசத்திலுள்ள மக்களுக்காய் பிரார்த்தனை செய்வதில் அல்ல, கண்ணுக்கு எதிரே இருக்கின்ற ஏழைக்கு இரக்கம் காட்டுவதில் தான் அர்த்தமும் பயனும் உண்டு. இந்த பேரிடர் காலம் அத்தகைய நல்ல இதயங்களையும் அடையாளம் காட்டியிருக்கிறது.

வறுமையின் பிடியில் இருக்கும் மக்களுக்காய் உணவுகளைச் சமைத்துப் பரிமாறிய கனிவுள்ள மனங்கள் பல இந்த காலத்தில் அன்பின் அர்த்தத்தை அவனிக்கு உரக்கச் சொல்லியிருக்கின்றன. தெருக்கள் தோறும் திரிந்து, ஏழைகளுக்காய் இரங்கிய பலரை நான் நேரில் கண்டிருக்கிறேன். மனிதம் நீர்க்கலாம், தோற்காது ! என புரிய வைத்தவர்கள் அவர்கள்.

வேலைகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்த பலருக்காக பணமும், ஆறுதலும் அளித்த பலரை நாம் சந்திக்கிறோம். அன்பின் அட்சரேகை அறுந்து போகாமல், பூமிப் பந்தை இறுகப் பிடித்திருப்பவர்கள் அவர்கள் தான். அவர்களுடைய புன்னகையிலும், அர்ப்பணிப்பிலும் தான் இறைவன் இன்னும் பூமியை புதைக்காமல் இருக்கிறார்.

தங்கம் எப்படி அனலைக் கடந்து தனது அழகைக் காட்டுகிறதோ, அப்படி நாம் இந்த கடின காலத்தில் உண்மை முகத்தை அழகாய்க் காட்டவேண்டும். அந்த முகம் அன்பின் அகராதியாய், மனிதத்தின் விளைநிலமாய் இருக்க வேண்டும்.

பாறை எப்படி தனக்குள்ளிருக்கும் சிற்பத்தை உளியின் தாக்குதலுக்குப் பின் வெளிக்காட்டுகிறதோ, அப்படி இந்தப் பெருந்தொற்றின் உளியடி இதயங்களின் அழகை வெளிக்கொணர வேண்டும். அச்சத்தின் பிள்ளைகளாய் அல்ல, துணிச்சலின் தூதுவர்களாய் நாம் எழுந்து ஒளி வீச வேண்டும்.

இந்த பூமி அழகானது. இது வெறும் கரன்சிகளின் கட்டுகளுக்குள் அடைக்கப்பட வேண்டியதல்ல. நிறைவானவை வரும்போது குறைவானவை ஒழிந்து போகும். நிறைவு அன்பில் தான் வெளிப்படும். அந்த அன்பின் கதிர்களை நாம் விளையச் செய்ய வேண்டும்.

நமது அவசரத் தேவை! சமூக இடைவெளி. அது உடலுக்குத்தான்.
மனதுக்கு! இடைவெளியற்ற சமூகமும் தேவை.

-சேவியர்- தமிழ்நாடு

1,352 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *