சிவமயம் அல்ல! எல்லாம் பயமயம்!
„எல்லாம் சிவமயம் என்று சொல்லுவினம், ஆனால் எனக்கு எல்லாம் பயமயம். காலம் உன்னைக் காலால் உதைக்கும் என்று காலமான பாரதி சொன்னவர். காலணி காலால் உதைத்தால் காலில் அடிபடும் என்ற பயம் எனக்கு. கவிதை பயம் எனக்கு, கதை பயம் எனக்கு, பீமன்னிண்ட கதைக்கும், அனுமன்னிண்ட கதைக்கும் பயம், உதைக்கும் பயம், சிதைக்கும் பயம்.“ இப்படிப் பயத்தைப் பற்றி அடுக்கிக் கொண்டே போன தெனாலி படத்தில் வரும் கமல் ஹாசன் சொன்ன வசனங்களை நீங்கள் பார்த்து ரசித்திருப்பீர்கள், அல்லவா? உங்களுக்கு ஒன்று தெரியுமா? உண்மை சொல்லப் போனால் இந்த உலகில் வாழும் மக்களுக்குப் பல விதமான அச்ச உணர்வுகள் உள்ளன என்பது தான். அதிலும் சிலரின் அச்சங்கள் மற்றவர்களையும் அச்சம் கொள்ளச் செய்யும் என்பது தான் இதில் உள்ள சுவாரசியமே. அந்த வகையில் இன்று உங்களுக்கு 10 வகையான வித்தியாசமான அச்சங்கள் பற்றி அறியத் தருகின்றேன், படிக்கின்றீர்களா?
- சாலையினைக் கடப்பதற்கான அச்சம் (அகைரோபோபியா, Agyrophobia) – சாலையினைக் கடப்பது, குறுக்குச் சந்திப்புகளைக் கடப்பது போன்ற இடங்களில் பயம் கொள்வது அகைரோபோபியா ஆகும். கைரஸ் எனும் கிரேக்க வார்த்தையில் இருந்து இந்த வார்த்தை எடுக்கப்பட்டது. இதில் பலவகைகள் உள்ளன. இதுபோன்ற பயம் இருப்பவர்கள் அதிக போக்குவரத்து வாய்ந்த நகரங்களில் வசிப்பது மிகவும் கடினம்.
- சமையல் செய்வதற்கான பயம் (மஜைரோபோபியா, Mageirocophobia) – இது பெரும்பாலும் தனியாகச் சமைத்துச் சாப்பிடும் சிலருக்கு வரும் வாய்ப்புள்ளது. நன்றாகச் சமைக்கும் சிலரைப் பார்த்தால்கூட இவர்களுக்குப் பயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
- பொம்மைகளைப் பார்த்தால் பயம் (பேடியோபோபியா, Pediophobia) – இது சில பயமுறுத்தும் வகையிலான பொம்மைகள் மட்டுமல்ல எந்த பொம்மையைப் பார்த்தாலும் ஏற்படும் ஒருவிதமான பயம். இதனால் வெளியிடங்களில் பொருட்களை வாங்கச் செல்லும்போது பல பிரச்சினைகள் ஏற்படும். இதுபோல் குழந்தைகளைப் பார்த்தும் பயம் கொள்வோருக்கு பேடோபோபியா என்று பெயர்.
- சாப்பிடும்போது பேசுவதற்குப் பயம் (டெயிப்னோபோபியா, Deipnophobia) – சிலர் சாப்பிடும்போது பேசுவதற்குப் பயம் கொள்கின்றனர். சில சமுதாய ஒழுங்குமுறை கொண்ட மதிப்புமிக்க இடங்களில் சாப்பிடும்போது பேசும் பழக்கத்தினைத் தவிர்க்கின்றனர். பிற சாதாரண இடங்களில் இவர்களின் நிலை சிறிது கடினமானதுதான்.
- கண்ணாடியைப் பார்த்து பயம் (எயிசோப்ட்ரோபோபியா, Eisoptrophobia) – இதுபோன்ற பய உணர்வுகள் பகுத்தறிவற்றது என்று தெரிந்திருந்தும், சிலர் கண்ணாடியினை பார்த்தவுடன் பதட்டம் கொள்வர். சிலர் கண்ணாடி உடைந்தால் அது கெட்ட சகுனம் என்றும், சிலர் கண்ணாடிக்குள்ளும் ஒரு உலகம் உள்ளது என்றும் நினைக்கின்றனர்.
- சாத்தான்களைப் பற்றிய பயம் (டெமனோபோபியா, Demonophobia) – இயற்கையின் தீய படைப்புகளாகச் சாத்தான்களை நினைப்பவர்கள் இதுபோன்ற பயத்தைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கூட்டமாக இருக்கும்போது பேசிய சாத்தான் பற்றிய சிந்தனைகளை, அவர்கள் தனியாக இருக்கும்போது சிந்தித்து பயம் கொள்வர்.
- மாமியாரைப் பற்றிய பயம் (பேந்தெரபோபியா, Pentheraphobia) – இது பெரும்பாலான திருமணமானவர்களுக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மூளையில் தேவையில்லாத எண்ணங்கள் வரும், அதன் விளைவாக விவாகரத்துகூட ஏற்படலாம்.
- வேர்க்கடலை வெண்ணெய் வாயின் உட்புற தாடையின் மேற்புறத்தில் ஒட்டிக்கொள்ளும் என்ற பயம் (அராகிபியூடைரோபோபியா, Arachibutyrophobia) – சிலர் நாம் வெண்ணெய் அல்லது ஜெல்லி போன்ற பதார்த்தங்கள் வாங்கும்போது வேண்டாம் என்று கூறுவார்கள். அவர்களிடம் தான், இதுபோன்ற பயம் இருக்கும். அவை வாயில் ஒட்டிக்கொள்ளுமோ என்ற பயம் அவர்களிடம் இருக்கும்.
- உட்காருவதற்கான பயம் (கேதிசோபோபியா, Cathisophobia) – மூலம் சம்பந்தப்பட்ட நோய் பிரச்சினைகள் உடையவர்களுக்கு இதுபோன்ற பயம் எப்போதும் ஏற்படும். பள்ளி நாட்களில் உட்காருவது குறித்த தண்டனைகள் பெற்றவர்கள் இதுபோன்ற பயங்களுக்கு உள்ளாக வாய்ப்புண்டு.
- வாயசைக்கும் பொம்மையினைப் பற்றிய பயம் (ஆட்டோமடோனோபோபியா, Automatonophobia) – இதுவும் பொம்மை போன்றதுதான். சிலர் தனது கைகளின் மூலம் பொம்மையின் வாயினை மட்டும் அசைப்பார்கள், பின்னர் அதற்குத் தகுந்த குரலை எழுப்புவார்கள்.
நண்பர்களே, இந்த 10 அச்ச உணர்வுகள் போன்று இன்னும் எவ்வளவோ விதமான அச்ச உணர்வுகள் உள்ளன. இனி நீங்கள் கூறுங்கள். இதைப் போல் உங்களுக்கு ஏதாவது பயம் இருக்கிறதா? இதற்குரியபதிலை மட்டுமில்லாமல், எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக எனது முகநூல் பக்கத்தில் (www.facebook.com/scinirosh)
— Dr. நிரோஷன்.தில்லைநாதன்
2,086 total views, 2 views today