எனது நாடக அனுபவப் பகிர்வு – 3
ஆனந்தராணி பாலேந்திரா
‘மழை’ 1976
கடந்த இதழில் 1976ஆம் ஆண்டு க.பாலேந்திரா நெறிப்படுத்தி நான் நடித்த ‘மழை’ நாடகப் பின்னணி, அதனுடைய கதைச் சுருக்கம், முதலாவது மேடையேற்றம் பற்றி எழுதியிருந்தேன்.
‘மழை’ நாடகம், அரங்கு நிறைந்த ரசிகர்கள் மத்தியில் மேடையேறிக் கொண்டிருந்தபோது நாடகத்தில் ஒரு கட்டத்தில் அப்பாவும் மேடையில் இருக்க, திருமணங்களைப் பற்றிய உரையாடலைத் தொடர்ந்து, நிர்மலா என்ற மகள் பாத்திரத்தில் நடித்த நான் டொக்டர் ஜேம்ஸிடம் “ ஐ நெநன ய அயnஇ (எனக்கு ஒரு ஆம்பிளை வேணும்) அது நீங்களாகக்கூட இருக்கலாம் ” என்று கூறும் வசனம் டொக்டர் ஜேம்ஸ்ஐ மட்டுமல்ல சபையிலும் பலரை அதிர்ச்சிக் குள்ளாக்கியது என்றும் எழுதியிருந்தேன்.
44 வருடங்களுக்கு முன் ஒரு இளம்;பெண் மேடையில் இந்த வசனத்தைக் கூறியது அது நாடகமாயிருந்தும்கூட பலருக்கு ஏற்றுக்கொள்ள முடியாத, சங்கடத்தைக் கொடுத்த ஒரு விடயமாக இருந்தது. நாடகம் முடிந்தவுடன் சிலர் என்னிடம் நேரடியாகவே “ இந்த வசனத்தை எல்லாருக்கும் முன்னாலை சொல்ல உமக்கு கூச்சமாய் இருக்கேல்லையா” என்றும் “உமக்கு வெக்கமில்லையோ” என்றும் கேட்டார்கள். நான் பேசிய இந்த வசனங்கள் நாடகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. சர்ச்சைகள் வரும் என்றும் தெரியும். எதையும் மனம் விட்டுப் பேசாமல் உணர்ச்சிகளை அடக்கப் பழகிக்கொண்ட எமது சமூகத்தில் (இது இன்றும் பல இடங்களில் நடக்கிறது) இந்த வசனங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியதில் வியப்பேதுமில்லை.
நாடகம் முடிந்து நான் அப்பா அம்மாவுடன் வீடு திரும்பியபோது, அம்மா மட்டும் என்னிடம் மெதுவாகக் கேட்டார் “இந்த வசனம் கட்டாயம் பேசவேணுமோ” என்று. அவர் ரசிகர்களோடு இருந்து நாடகம் பார்த்தவர். வேறு என்னவெல்லாம் அவர் காதில் விழுந்ததோ எனக்குத் தெரியாது. அவரும் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. “இந்த வசனம் நாடகத்திற்குக் கட்டாயம் ” என்று மட்டும் நான் சொன்னேன். அதன் பிறகு அம்மா ஒன்றும் சொல்லவில்லை.
‘மழை’ நாடகம் இலங்கையில் மட்டும் கொழும்பு, யாழ்ப்பாணம், பேராதனை, திருகோணமலை ஆகிய இடங்களில் 12 தடவைகள் மேடையேறியது. எல்லா மேடையேற்றங்களிலும் நான் நடித்தேன். எல்லா மேடைகளிலும் சர்ச்சைக்குள்ளான வசனங்களைப் பேசினேன். சில மேடையேற்றங்களின் பின்னர் நான் பேசிய “I need a man அது நீங்களாவே இருக்கலாம் ” என்ற வார்த்தையை கொச்சைப்படுத்தி “ நான் வரவா ” என்று என்னிடம் கேட்டவர்களும் உண்டு. நான் அதைப்பற்றிப் பெரிதுபடுத்தவில்லை.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் ‘மேடை நாடக வரிசையில் ’ ‘மழை’ நாடகம் அப்போது அங்கு நாடகத் தயாரிப்பாளராகப் பணியாற்றிய கே.எம்.வாசகர் அவர்களால் தயாரிக்கப்பட்டு 23-09-1978 இல் ஒலிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. நாங்கள் நால்வருமே நடித்தோம். வானொலிக்காக பாலேந்திரா இதனை ஒரு மணித்தியாலமாக சுருக்கிய போதும்; நான் பேசிய சர்ச்சைக்குரிய வசனங்கள் எதுவுமே நீக்கப்படவில்லை.
1982ஆம் ஆண்டு நானும் பாலேந்திராவும் திருமணம் செய்து இலங்கையை விட்டு புலம்பெயர்ந்த பின்னர் லண்டனில் ‘மழை’ நாடகம் மீள் தயாரிப்பாக பாலேந்திராவினால் தயாரிக்கப்பட்டு 09-11-1985ல் மேடையேறியது.
இதில் நானும் பாலேந்திராவும் அதே பாத்திரங்களில் நடித்தோம். எம்முடன் மு.நேமிநாதன், தே.ரங்கன் ஆகியோர் நடித்தார்கள். அந்த நேரத்தில் நாடக நிகழ்வினை விளம்பரப்படுத்துவதற்கு தமிழ் பத்திரிகைகள், வானொலி தொலைக்காட்சி எதுவுமே லண்டனில் இருக்கவில்லை. கைத்தொலைபேசி கூட பெரிதாக பாவனையில் இல்லை. நாடக மேடையேற்றத்திற்கான துண்டுப் பிரசுரங்களை வடிவமைத்து அந்த நேரத்தில் இருந்த ஓரிரு கோயில்களில் அவற்றை விநியோகித்தும் சிலருக்கு தபாலில் அனுப்பியும் எமது நாடக மேடையேற்றம் பற்றி அறியப்படுத்தினோம். மண்டபம் நிறைய பார்வையாளர்கள் வந்தது எமக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. ‘மழை’ நாடகத்துடன் ‘பார்வையாளர்கள் ’ என்ற நாடகமும் பாலேந்திராவின் நெறியாள்கையில் அன்று மேடையேறியது. இந்த நாடகத்திலும் நான் நடித்தேன். நான் ஒருவர் மட்டுமே பெண் நடிகை.
தொடர்ந்த நாடக மேடையேற்றங்களே தீவிர நாடக இயக்கத்தை வலுப்படுத்தும் என்பதில் பாலேந்திராவிற்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த வகையில் ‘மழை’ நாடகம் இலங்கை, கனடா, ஒஸ்ரேலியா, நோர்வே, பிரான்ஸ், ஜேர்மனி, ஹொலன்ட், சுவிற்சலன்ட், இந்தியா ஆகிய நாடுகளில் மேடையேறியது. 40 தடவைகளுக்கு மேல் மேடையேறிய இந்த நாடகத்தில் நானும் பாலேந்திராவும் அதே பாத்திரங்களிலேயே நடித்தோம். அப்பா, டொக்டர் பாத்திரங்களில் வேறு நடிகர்கள் மாறி மாறி நடித்தார்கள்.
புலம்பெயர் நாடுகளில் ‘மழை’ நாடகத்தை மேடையேற்றியபோது சர்ச்சையான வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக பெரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை என்றுதான் கூறுவேன்.
‘மழை’ நாடகத்தை சுவிற்சலன்ட்டில் 1994 இலும் பின்னர் சென்னையில் 2010இலும் மேடையேற்றியபோது இந்நாடகத்தை எழுதிய பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் வந்திருந்து பார்;த்து பாராட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சுவிற்சலன்ட்டில் நான்கு நகரங்களில் எமது நாடக விழாக்கள் அடுத்தடுத்து நடைபெற்றபோது அவர் எம்மோடு தங்கியிருந்து எமது எல்லா நாடகங்களையும் பார்த்து ரசித்தார்.
அடுத்த பதிவில் நான் நடித்த, ஈழத்து எழுத்தாளரும் கவிஞருமான தர்மு சிவராம் எழுதிய ‘நட்சத்திரவாசி’ நாடக அனுபவங்களை பகிரவுள்ளேன்.
1,459 total views, 2 views today