என்னைக் காணும் போதெல்லாம் துரத்தியது!
எனது பாடசாலை நாட்களில் ஆங்கிலப் பாடத்திடம் அகப்பட்டு நான் பட்ட அவஸ்தைகளைப் பற்றி பல தடவைகள் எழுதியிருக்கின்றேன்…இது அதைப்பற்றியது மட்டுமல்ல!
ஆங்கிலம் அப்போது எனக்கொரு வேண்டா விருந்தாளி…ஏன், என் வீட்டு முடக்கில் உள்ள விடுகாலி நாயைப் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்…
என்னைக் காணும் போதெல்லாம் துரத்தும்…நானும் ‘அப்பாடா, இன்று தப்பிவிட்டேன்’ என்று வீடு வந்து சேர்ந்துவிடுவேன்…திரும்பவும் அடுத்த நாள் துரத்தலும் தப்புதலும் தொடரும்…
ஆங்கிலமும் அப்படித்தான்…க.பொ.த சாதாரண தரத்துடன்(பத்தாம் வகுப்பு) இந்தக் கழுதையை எப்படியாவது கழற்றி விட வேண்டும் என்ற திடகாத்திரத்துடன் எப்படியோ சமாளித்துச் சமாளித்து ஆறாம், ஏழாம் வகுப்புகளைத் தாண்டிவிட்டேன்…எட்டாம் வகுப்பில்(என நினைக்கின்றேன்) எனக்காக பிசாசே காத்திருந்தது !
மகேசன் மாஸ்டர் என யாழ் இந்துவில் சிறந்த ஆங்கில ஆசான் ஒருவர் இருந்தார், அவர் எனக்குக் கற்பிக்கவில்லை, அவரைப்பற்றி அடுத்த வகுப்பு நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். நல்ல மனிதருங்கூட! அவர், எமது பேச்சு திறமையை வளர்ப்பதற்கு, ஒவ்வொரு கிழமையும் எல்லா வகுப்பினரையும் அழைத்து, பிரார்த்தனை மண்டபத்தில் வைத்து, ஒரு பெட்டிக்குள் எல்லோரது பெயரையும் எழுதிப்போட்டு, அதைக் குலுக்கி எடுக்கும்போது எவரது பெயர் வருகிறதோ அந்தந்த மாணவர்கள், எல்லோரினதும் முன் நின்று ஆங்கிலத்தில் எதையாவது பேசவேண்டும் என்று கூறினார்.
ஆங்கிலத்தில் திறமையுள்ள மாணவர்கள் நீயா? நானா? என் பெயர் வரக்கூடாதா? என்று ஏங்கித் தவித்தார்கள்…
எனது நிலைமை மிகவும் கவலைக்கிடம்…தமிழிலேயே நாலு வசனம் சொல்வது பிரச்சனையாக இருந்தபோது…ஆங்கிலத்தில்? அதுவும் எல்லோர் முன்னிலையில்?
இருதயம் நெஞ்சாங் கூட்டிலிருந்து வெளியே வருவதும் போவதுமாக இருந்தது…பயத்தை வெளியே காட்டினால் அந்த மனுசன் நேராகவே என்னை அழைத்துப் பேசவிடலாம் என்பதற்காக, அமைதியாக பிரார்த்தனை மண்டபத்தில் முன்னிருந்த கடவுளை நினைத்து, மனதிற்குள், தெரிந்த தேவாரங்களையெல்லாம் பாடினேன்…அப்பர் சுவாமிகள் ‘சொற்றுணை வேதியன்’ பாடி உயிர் தப்பியது படித்திருக்கின்றேன், அதை நான் நம்பவில்லை! நான் அன்று தப்பியபின்தான் தேவாரத்தின் மகிமை முற்றாக விளங்கியது !
இப்படியான இக்கட்டான நிலைமையில் இனிமேலும் அகப்படக்கூடாது என்பதற்காக திட்டங்களை தீட்டினேன்…அந்தக் காலங்களில் கர்த்தால்ஃ பகிஷ்கரிப்பு அடிக்கடி நடக்கும், எனவே ஆங்கிலப் பேச்சு உள்ள நாட்களில், காலையில், எனது கிராமத்தில் பஸ்தரிப்பு இருக்கும் இடத்தில் உள்ள கட்டட சுவர்களில் ‘கர்த்தால்ஃபகிஷ்கரிப்பு’ என சுவரொட்டிகளை கண்டால் அதைச் சாக்காக வைத்து பாடசாலைக்குப் போகாமல் வீடுக்குத் திரும்பிவிடுவேன். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சாக்கு! இப்படி சிலவாரங்கள் போன பின் ஏதோ காரணத்திற்காக ஆங்கிலப் பேச்சை மகேசன் மாஸ்டரால் தொடர முடியாமல் போய்விட்டது…’மக்கள் சேவை மகேசன் சேவை’ என்பார்கள் ஆனால் மகேசன் மாஸ்டரே மக்கள் சேவையைச் செய்தது எமது பாடசாலை மாணவர்களிற்கு கிடைத்த வரப்பிரசாதம்!
என்னுடைய அன்றைய பதட்டத்திற்கு என்ன காரணம் என்று எண்ணியபோது முக்கியாமாக இரண்டு விடயங்கள் எனது மனதில் தென்பட்டது எல்லோர் முன் நின்று பேசுவதற்குள்ள கூச்ச சுபாவம், பேசும் பொருள் தெரியாமை ! பேசும் பொருள் தெளிவாகத் தெரியுமாயின் கூச்சத்தை ஓரளவு சரிப்படுத்திக் கொள்ளலாம்,
அன்று, நாய் துரத்தும் போது தப்பியது போல, எப்படித் தப்பலாம் என்று யோசித்து நேரத்தை வீணடித்தேனே தவிர, யாரிடமாவது கெஞ்சிக் கேட்டாவது ஆங்கிலத்தில் ஐந்து வரிகளை எழுதிப் பாடமாக்கி, ஒரு கண்ணாடி முன் நின்று அதைச் சொல்லிப் பார்த்திருக்கலாம் என்று என் மூளைக்கு அப்போது தோன்றவில்லை.
மகேசன் மாஸ்டர் தன் வகுப்பில் படித்த மாணவர்களை இதற்காகத் தயார் படுத்தினார் என்று பின்பு அறிந்துகொண்டேன் ஆனால் எனது வகுப்பு ஆங்கில ஆசிரியர் அதை எமக்குச் செய்யவில்லை…என்னைப் போன்ற ‘தப்பினான் கம்பெனி’ மாணவர்களும் ஆசிரியரின் உதவியை நாடவில்லை. ஆங்கிலம் எட்டாப்பழம் என்று புறக்கணித்து விட்டோம்!
பல வருடங்கள் கழித்து வெளிநாடுகளிற்கு வந்த என்னைப்போன்ற பலர் ஆங்கிலத்தை ஓரளவு எழுதிப் பேசி ஏதோ வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றோம். ஏன், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்றவர்கள் என்றுமே கற்றிராத மொழிகளைப் பயின்று அந்நாடுகளில் தொழில் புரிகின்றார்கள். விமானத்தில் வெளிநாடு வரும் போது ஆங்கிலமும், வேறு மொழிகளும் திடீரென்று என்ன தலையில் புகுத்தப்பட்டதா? இல்லை! ‘கட்டாயம்’ என்று வரும் பொழுது எல்லாம் ஒழுங்காக மூளையில் ஏறிவிடும்…இதையே எந்தவித அழுத்தமுமின்றி பாடசாலைச் சூழலில் கற்பது எவ்வளவு இலகுவான விடயம் – இதை, நான் அன்று தப்பித் தப்பி வாழ்ந்தது போல, அதே மன நிலையுடன் வாழும் இன்றைய மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் – தயவு செய்து, தப்பி ஓட எண்ணாதீர்கள், ஒரு சவாலாக எடுத்து முயற்சி செய்யுங்கள், எதையும் முழு விருப்புடன் எதிர்கொள்ளுங்கள்! எல்லோரும் எல்லாவற்றையும் இலகுவாகக் கற்கலாம் என்று கூறவரவில்லை, ஆனால் அநேகமான விடயங்கள் எமது முயற்சியின்மையால் தான் முடியாமல் போகின்றது.
வெளிநாடுகளுக்கு வந்தவர்களிலும் சிலர் இன்னமும் மொழிப் பிரச்சனையில் இருந்து தப்பித்து ஓடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள், இலங்கையில் இருந்து இங்கிலாந்து வந்தவுடன் எனது ஆங்கிலப் பிரச்சனை திடீரென்று தீரவில்லை, அப்படியே தான் இருந்தது – எனக்கு(எமக்கு) நானே கற்பிக்க வேண்டிய நிலை…வானொலியிலும், தொலைக்காட்சியிலும் செய்திகளை ஒழுங்காகக் கேட்கும்படி இங்கிருந்த உடன் பிறவா சகோதர் கூறினார், அது மிகவும் உதவியாக இருந்தது ஆனால் சுவாரசியமாக இருக்கவில்லை! எனவே, நானாக ஒரு வழி கண்டுபிடித்தேன், எனக்கு விருப்பமான கால்பந்து விளையாட்டுகளை தவறவிடாது தொலைக்காட்சியில் பார்பேன், அடுத்தநாள் காலையில் அந்த விளையாட்டு அறிக்கையை (match report) மூன்று நான்கு பத்திரிகைகளில் வாசிப்பேன், இப்படி வாசிக்கும் போது கால்பந்துப் போட்டியில் நடந்த முக்கிய நிகழ்வுகளை ஒவ்வொருவரும் எப்படி விபரித்திருக்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ள உதவியாக இருந்தது. இப்படி எமக்கு விருப்பமான விடயங்களுடன் கற்றலை இணைத்தால் அது இலகுவாக இருக்கும் என்பது எனது புரிதல். நிபுணர்களாக வராவிட்டாலும், நாளாந்த வாழ்க்கையை நம்பிக்கையுடன் நடத்த உதவியாக இருக்கும்.
பின்பு பார்த்துக் கொள்வோம் என்று தள்ளிப்போடாமல், பாடசாலை நாட்களிளிலேயே இயலுமானத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.
ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்களுக்கு வேலைப்பழு அதிகம் என்பது யாவரும் அறிந்ததே, நீங்கள் எல்லா மாணவர்களையும் தனித்தனியே கவனிக்கமுடியாது – இயலுமாயின், உதவி தேவைப்படும், கேட்கத் தயக்கப்படும், என்னைப்போன்ற மாணவர்களை இனங்கண்டு, தனியே அழைத்து, அவர்களுக்கு தேவையான உதவியும், சிறிது உற்சாகமும் கொடுங்கள். (இக்கட்டுரை படித்து முடிக்கும்போது ஸ்ரீதேவி நடித்த English Vinglish ஞாபகம் வந்தாலும் தப்பில்லை.-ஆர்.)
‘Running away from any problem only increases the distance from the solution. The easiest way to escape from the problem is to solve it’
— கனகசபேசன் அகிலன்- இங்கிலாந்து
1,479 total views, 3 views today