கடுகுக்கதைகள்
- மனப்பாங்கு
இந்த சின்ன விடயத்தை எல்லோரும்
பெரிதா எடுத்தது பிடிக்கவில்லை என்றார்.
பல மணித்தியாலமாக கோபத்துடன்,
யார் யார் எல்லாம் இந்த விடயத்தை
பெரிதாய் எடுத்தவை என்று குறைபட்டார்.
எனக்கு அவரைப்பார்க்க சரியான
பாவமாய் இருந்தது… இருந்தும்
அந்த சின்ன விடயம் என்னவென்று
அறிய வேண்டி அவரிடமே,
அந்த சின்ன விடயம் என்ன என்று
கேட்டும் விட்டேன்… உடனே
கோபம் கொண்டு, பார்த்தியா நீயும்
அந்த சின்ன விடயத்தை பெரிது படுத்திறாய்
என்றாரே பார்க்கலாம்!
- சோடி
வீட்டில அப்பிள் ரீவி ரிமோற்றை காணேல்லை.
இவள் சின்னவள்தான் எங்கேயோ போட்டிட்டாள்.
தேடச் சொன்னால், தேடினால் தொலைந்தது
கிடைக்கவா போகிறது என்ற அலட்சியமான பதில்.
தொலைந்ததுகூட பரவாயில்லை, ஆனால்
இந்த அலட்சியமான பதில் இருக்கிறதே…
கோபத்தில இரண்டு சாத்தவேணும் என்று துடிப்பு,
அநியாயத்திற்கு இந்த நாட்டில அதுவும் முடியாது.
அப்படி இருந்தும் கிட்டப்போய் ஒரு கிள்ளுப் போட்டன்.
அதற்கு அவள் என்னை முறைத்து,
‘எத்தனையோ பேர் ரீவியை தொலைத்துப் போட்டு
ரிமோற்றை என்ன செய்யிறது என்று தெரியாமல்
யோசித்துக்கொண்டு இருப்பினம்.
அவையிட்டை கேட்டுப் பாருங்கோ,
இங்க கத்திறதை விட்டுட்டு’ என்றாளே பார்க்கலாம்!
கலப்படம்…
தேனை அபகரித்தான்
குப்பிகளில் பதுக்கினான்
தேனீ ஒன்று தடுமாறி
குப்பியில் விழுந்தது
மூழ்கி மூச்சு நிற்கும்
கடைசி நொடியில்
மனிதனைப் பார்த்து
பரிதாபமாய் கேட்டது
மனிதா இதிலுமா!
மடமை…
படிக்கட்டுகள்
மாடிக்கு போகுது
என்றார்கள்
நானும்…
ஏறிக்கொண்டு இருக்கின்றேன்
மாடியில்
என்ன இருக்கென்று தெரியாமலே!
முரண்பாடு…
குழந்தை உண்ண மறுத்தது
பாட்டிக்கு ஊட்டிடுவேன் என்று
அம்மா பயமுறுத்தினா
பாட்டியும் ஆ என்றார்
உடனே குழந்தை ஆஆ என்றது
அப்புறம் பள்ளியில்…
எள் என்றாலும்
எட்டாய் பகிர்ந்து உண்
என்று பாடம் படித்தது!
— தமிழினி பாலசுந்தரி – நியூஸ்லாந்து
1,411 total views, 2 views today