யாழ் மருதனார்மட சந்தையில் கொரோனா தொற்று

மக்கள் விழிப்பு, சமூகப்பொறுப்புடன் செயற்படவேண்டும்
வலி கிழக்கு மக்களுடன் நெருங்கிய தொடர்புடைய மருதனார்மடம் சந்தையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் வலி கிழக்கு மக்கள் அதிக சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்த வேண்டும் என தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
எமது வலிகாமம் கிழக்கில் இருந்து பெருந்தொகையான விவசாய உற்பத்திப் பொருட்கள் மருதனார் மடம் சந்தைக்கே எடுத்துச்செல்லப்படுகின்றன. எமது பிரதேச சபையின் எல்லைப்பகுதியே மருதனார் மடம். வலி கிழக்கில் 18 ஆயிரம் விவசாயிகள் உள்ள நிலையில் அவர்களில் அதிகளவானோர் சந்தைத்தேவைக்கு மருதனார் மட சந்தையுடன் நேரடி தொடர்புபட்டுள்ளனர். இதனால் வலிகாமம் கிழக்குப் பகுதி மக்கள் உயர்ந்த அளவில் சமூகப்பொறுப்பினை கொண்டு செயற்பட்டால் மட்டுமே தம்மையும் ஏனையோரையும் பாதுகாக்க முடியும்.
தற்போது வலிகாமம் கிழக்கு பிரதேசத்தில் மருதனார்மடம் சந்தையுடன் தொடர்புபட்ட 25 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
எமது பிரதேச மக்களில் பலர் மருதனார்மடச்சந்தையுடன் நேரடியாகத்தொடர்பு பட்டுள்ள நிலையில் நிலைமை சிக்கலடைந்தால் ஒத்துழைப்புடன் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றி கோப்பாய் பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சிவசங்கரியுடன் பேசியுள்ளேன். எதிர்வரும் சுகாதாரத்துறை முடிவுகளின் அடிப்படையில் எமது பிரதேச சபை தொழிற்படும்.
சந்தையுடன் தொடர்புபட்டவர்களை கண்டறிவது கடினமான பணியாகும். வியாபாரிகளை இலகுவில் கண்டறிய முடியுமாயினும் சந்தைக்கு விற்பனைப்பொருட்களைக் விற்க வாங்கச் சென்று திரும்பியவர்களை அடையாளப்படுத்துவது சவாலான பணியாகும். அவ்வாறு தொடர்புபட்டவர்கள் முதலில் கிராமசேவகர்களிடம் தங்களைப் பதிவு செய்துகொள்ளுங்கள். அயலில் எவராவது தம்மை வெளிக்காட்டாது இருப்பார்கள் ஆயின் அதுபற்றி பொதுசுகாதாரவைத்திய அதிகாரி பணிமனைக்கு நேரடியாக அறிவிக்கமுடியும். பிரதேச சபையின் கவனத்திற்கும் கொண்டு வரப்படும் போதும் அது சுகாதாரத்தரப்பினருக்குப் பரிமாறப்படும்.
ஏலவே சுகாதார அதிகாரிகள் எழுமாறாக தொற்றுப் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களுக்கு சகல வழிகளிலும் நிறுவனங்கள், அதிகாரிகள், மக்கள் ஒத்துழைக்க வேண்டும். கொவிட் சோதனைக்கு நானும் உட்பட்டேன். அது ஒன்றும் கஸ்டமாது அல்ல. வலி கிடையாது. சாதாரணமாக எறும்பு கடித்ததைப்போலவே இருந்தது. எனவே யாரும் அச்சம், அலட்சியம் காரணமாக இருந்துவிடக்கூடாது. எனவே நாம் சமூகப்பொறுப்புணர்வை நிலைநிறுத்தி செயற்படுவோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்ததவிசாளார் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

1,385 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *