மலையகத்தில் ஊடுறுவும் கொரோனா…
மூச்சி விடும் தூரத்தில் தான்
முகங்கள் லயங்களில் காட்சியளிக்கும்.
மாலினி.மோகன்-
கொட்டகலை.இலங்கை
மலையகம் ஒரு மகிழ்ச்சி நிறைந்த திடல். இதன் இயற்கை அம்சங்களை மனநிறைவோடு ரசிக்காதவர் எவருமில்லை. சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கும் பேரழகி தான் மலையகம் எனும் எழிலரசி. இப்படிப்பட்ட அழகிய மலையகம் இன்று ஆர்ப்பரிப்பு அடங்கிபோய சீண்ட ஆளின்றி அநாதையாய் கொரோனாவினால் கூண்டுக்கிளி போல் பதுங்கிவிட்டது ..
தெருக்கள் எங்கும் அமைதியாய் காட்சிகொடுக்க ஆட்கள் நடமாட்டம் குறைந்து கடைதெருக்கள் கதவுகள் மூடப்பட்டு பொருட்கள் வீடுகளுக்கு door delivery செய்யப்படுகிறது. இது நகர்புறங்களில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட , தோட்டப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு பொருட்களை கொண்டு விற்பனை செய்யும் நடைமுறை மிக மிக குறைவாகவே உள்ளது. இப்படியான நிலைமையில் எம் மலையக மக்கள் வெளியில் நடமாட வேண்டிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது என்பது முடியாத காரியம்.
நெருக்கமான லயங்களே மலையகத்தின் அடுக்கு மாடி வீடுகளாக, அங்கே ஒருவருக்கொருவர மூச்சி விடும் தூரத்தில் தான் முகங்கள் காட்சியளிக்கும். இப்படி இருக்கையில் கொரோனாவை விரட்டியடிக்க 1 மீட்டர் இடைவெளி பேணுவது எப்படி சாத்தியமாகும். தோட்டப்புறங்களில் இரு வீடுகளை இணைக்கும் ஒற்றை சுவரும், பொதுவில் அமைக்கப்பட்ட மலசலகூடங்களும், பல லயங்களுக்கு ஒரு நீர்குழாய் என அமைக்கப்பட்ட விடயங்களும் சமூக இடைவெளியை எப்படி ஏற்படுத்தும்..
மலையகத்தின் பொது சுகாதார கட்டமைப்பு வசதிகள் இன்னும் பூரணப்படுத்தாத நிலையில் மக்கள் சுகாதாரம் பேணுவதும் சாத்தியமற்ற நிலையிலேயே உள்ளது. முதலாவது தொற்று கடந்த மார்ச் மாதம் ஏற்பட்டு முழு நாடும் முடக்கப்பட நிலையில் மலையகத்தில் எவ்வித பாதிப்புமின்றி எம்மக்கள் இருந்தனர்.அதே போன்று கடற்படையினரினூடாக தொற்று பரவியபோதும் நம்மக்கள் இக்கட்டுக்குள் சிக்கவில்லை ஆனால் மாறாக இபோது கொரானாவின் இரண்டாம் அலையில் மலையகமும் சிக்கிதவிக்கின்றது. இதனால் மக்களின் இயல்பு நிலை சற்று ஆட்டம் கண்டுள்ளது. நான்கு சுவர்களுக்குள் உள்ளே மனிதனின் வாழ்வு சிக்கிக்கொண்டுள்ளது. கொரோனா தடுப்பு சுவராய் இருக்கும்மட்டும் இது தொடர்ந்து கொண்டே இருக்கும். மகிழ்ச்சி நிறைந்த மலையகம் இன்று மந்த நிலையில் கொரோனாவின் வீரியத்தை விரட்டியடிக்க போராடிக்கொண்டிருக்கிறது.
சமூக தொற்று பரவிவிடும் என்ற அச்சம் தலைதூக்கியுள்ளது. உயிராபத்து உணரப்படுகின்றது. ஏனெனில் தலைநகரம் அபாய பிரதேசமாக இனங்காணப்பட்டுள்ள நிலையில் அது அங்கிருந்து வந்தவர்களால் மலையகத்துக்குள்ளும் ஊடுறுவி இருக்கிறது.
மினுவாங்கொட ஆடைதொழிற்சாலைகளிலும்,பேலியகொட மீன்சந்தை யிலும் மலையக இளைஞர்கள் பெருமளவில் தொழில்புரிகின்றனர். இவர்களினூடாகவே சாமிமலை,மஸ்கெலியா,கந்தப்பளை,புபுரஸ்ஸ, மாத்தளை போன்ற பகுதிகளுக்கு பரவியுள்ளது. தொற்றின் தீவிரம் உணராமல் கிடைக்கின்ற சகலவழிகளையும் பயன்படுத்தி நம் இளைஞர்கள் மலையகத்திலுள்ள தமது இருப்பிடங்களுக்கு கிளம்பி சென்றுள்ளனர். என்றாலும் பாருங்கள் ..”தீபாவளிக்கு வராதீர்கள் “ “சமூகதொற்றை கட்டுபடுத்த உதவுங்கள்” என பல தரப்பிலிருந்தும் விடுக்க பட்ட வேண்டு கோளையும் புறந்தள்ளி பலர் பல்வேறு உபாயங்களை கைகொண்டு தோட்டபகுதிகளுக்கு வந்துள்ளனர். வந்தது மாத்திரமன்றி அதனை மிக பெரிய வீரபிரதாபமாக சொல்லிக்கொண்டும், கோவில், நண்பர்கள், உறவினர்கள்வீடுகள், கடைதெருக்கள் என சுற்றிக்கொண்டு திரிகின்றனர். உழைத்து வந்த பணத்தில் தீபாவளியை கொண்டாடியும் தீர்த்தனர்.
எவ்வளவு அபாயத்தை நாம் எதிர்கொண்டிருக்கின்றோம் என்று தெரிந்தும், அரசாங்கம் மற்றும் சுகாதார திணைக்களம் பல்வேறு பாதுகாப்பு நிபந்தனைகளை விதித்தும் மலையக மக்களின் காதுகளுக்கு மட்டும் அது எட்டாதது போல் எமக்கென்ன நேரும் என்ற அகந்தையில் மலையகத்தின் பல்வேறு பகுதிகளிளும் உள்ள மக்கள் தீபாவளியை எந்தவித பயமுமின்றி கொண்டாடியமை வியக்கவைத்து. சமூக இடைவெளி இன்றி புடவை கடைகளிலும், மதுபான சாலைகளிலும் நிறைந்து வளிந்தனர்.
மேலும் கொரோனாவின் முதல் கட்டத்தின் போதும் அரசாங்க சேவையாளர்கள் அனைவரும் வீட்டிலிருக்க, பெரும்பாலான தோட்டத்தொழிலாளிகள் மட்டும் கொழுந்து பறித்து நாட்டுக்கு வருமானத்தை உழைத்து கொடுத்தனர். இரண்டாம் மூன்றாம் அலைகளின் போதும் இவர்கள் வெளியில் நடமாடி நாட்டுக்கு கொரோனாவுடன் போராடி உழைத்து கொடுத்து கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் போது தோட்டத்தொழிலாளிகள் நிறைந்து வாழும் மலையகத்தை கொரோனா வெகுவில் தாக்கி செல்வது சாத்தியமானதே.
இலங்கையில் இதுவரையில் 18402 கொரோனா நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதுடன்,
489 நோயாளிகள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 12587 நோயாளிகள் குணமடைந்துள்ளதுடன், 69 பேர் இன்றுவரையில் உயிரிழந்துள்ளனர். எம் மலையகத்தில் ஹட்டன் பகுதியில் ஒக்டோபர் 27ம் திகதி 10 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட பட்டு ஹட்டன் பகுதி முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டது. அவ்வாறே தலவாக்கலை, கொட்டகலை, மஸ்கெலியா, பொகவந்தலாவ, பகுதிகளிலும் பல கிராமங்கள், தோட்டபுறங்கள் தனிமைப்படுத்தப்பட்டது. இதுவரையில் மலையகத்தில் மட்டும் பல கொரோனா தொற்றாளிகள் கண்டு பிடிக்கப்பட்டு RT-PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அந்த பகுதிகள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மலையக பெருந்தோட்டத்துக்குள் கொரோனா புகுந்து விட்டால் கண்ணாடி பாத்திரகடைக்குள் புயல் வந்தது போலிருக்கும்.இலங்கையில் மட்டுமல் எமக்கு கைகொடுக்கும் புலம்பெயர்ந்த தமிழ் உறவுகளையும் இக்கொரோனா தாக்குவது ‘யாரிடம் நோவோம் யார்க்கெடுத்துரைப்போம்’; என்று ஏங்கவைக்கிறது.
1,407 total views, 3 views today