ஜெனீவா களம் இம்முறை யாருக்கு சாதகமாக அமையப்போகின்றது?

ஜெனீவாவை இலக்கு வைத்து மூன்று பிரதான தமிழ்க் கட்சிகள் இணைந்து நான்கு அம்சக் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருக்கும் அதேவேளையில், “ஜெனீவாவுக்கு அஞ்சப் போவதில்லை” என வழமையான பாணியில் இறுமாப்பாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. ஜெனீவாவில் புதிய பலப்பரீட்சை ஒன்று ஆரம்பமாகிவிட்டது என்பதற்கான முன்னறிவித்தலாக இது உள்ளது.

பத்து வருடகாலமாக ஜெனீவாவில் முடியாமல் போனதை இவ்வருடத்தில் செய்துவிட முடியுமா? என்பதுதான் இலங்கையின் இறுமாப்புக்குக் காரணம். அதேவேளையில், முதல்முறையாக இணைந்து தமிழ்த் தரப்பினரும், சர்வதேசத்தை தமக்குச் சாதகமாக மாற்றலலாம் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவே தெரிகின்றது. இந்தப் பின்னணியில், பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகப் போகும் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் யாருக்குச் சாதகமாக அமையப்போகின்றது என்பதில் அனைவரது கவனமும் குவிந்திருக்கின்றது.

மனித உரிமைகள் பேரவையிலுள்ள 47 நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் 4 அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கிய மகஜர் ஒன்றை தமிழ்க் கட்சிகள் அனுப்பிவைத்திருக்கின்றார்கள். இதில் 24 நாடுகளின் ஆதரவு கிடைத்தால், நிலைமையைத் தமக்குச் சாதகமாகக் கொண்டுவரலாம் என்பது தமிழ்த் தரப்பின் நம்பிக்கை. தொடர்ச்சியான இழுபறிகளுக்கு மத்தியில் பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் இதற்கான உடன்படிக்கை முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகின்றது. அதேபோல அவர்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளும் முக்கியமானவை.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை அமைப்பின் தலைவர் வி.எஸ்.சிவகரன் கிளிநொச்சியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றிலேயே, பொதுவான கோரிக்கை ஒன்றை முன்வைப்பதற்கான இணக்கம் தமிழ்க் கட்சிகளிடையே முதலில் ஏற்படுத்தப்பட்டது. அந்தக் கூட்டம் கூட, கடுமையான வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில்தான் நடைபெற்றது. இறுதியில் கொழும்பு, யாழ்ப்பாணம் என தொடர்ச்சியாக இடம்பெற்ற சந்திப்புக்களின் பின்னர் நான்கு விடயங்களை உள்ளடக்கிய கோரிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோர் உட்பட மேலும் சில தேசியக் கட்சிகளின் தலைவர்களும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்த ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளனர். இது இப்போது பேரவையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டுவிட்டது.

தமிழர் தரப்பின் இந்த இணக்கப்பாட்டுக் கோரிக்கையில், “பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையை இணங்க வைத்து நடவடிக்கைகளை எடுப்பதற்கு கடந்த பத்து ஆண்டுகளாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் போதும். எதனையும் இலங்கை செய்யப்போவதில்லை. இனியும் இதில் மனித உரிமைகள் பேரவையில் சாதித்துச் செயலாற்றுவதற்கு எதுவுமில்லை. ஆகவே காலத்தை மேலும் வீணடிக்காமல், விடயத்தை ஐ.நா பொதுச் சபையிடமோ, பாதுகாப்புச் சபையிடமோ, சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றத்திடமோ கையளிக்க நடவடிக்கை எடுங்கள்” என வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

கடந்த பல வருடகாலமாக ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களினால் இலங்கை நிலையில் மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்திவிட முடியவில்லை. தீர்மானங்கள் கொண்டுவரப்படும்போது அதற்கு இணை அனுசரணை வழங்குவதாகக் கூறி, களத்தில் இறங்கும் இலங்கைத் தரப்பு, தீர்மானத்தில் இருக்கக்கூடிய கடுமையான தன்மையைக் குறைப்பதில் வெற்றிபெறுகின்றது. பின்னர் அதனைக்கூட நிறைவேற்றுதில்லை. அதனால், நிலைமாறுகால நீதி என்பது தமிழர்களுக்குக் கிட்டாத ஒன்றாகவே இருந்துவருகின்றது.

ஜெனீவாவில் நிறைவேற்றப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் நிறைவேற்றுவதற்கு, குறிப்பிட்ட நாட்டின் ஒத்துழைப்பு – இணக்கப்பாடு அவசியம். இலங்கையின் ஒத்துழைப்பு இல்லாத நிலையில், அதனை நிறைவேற்றச் செய்வதற்கான பொறிமுறை எதுவும் ஜெனீவாவிடம் இல்லை. அதனை இலங்கை தனக்கான வாய்ப்பாகவே இதுவரையில் பயன்படுத்திவந்திருக்கின்றது. வெறுமனே ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குள் இருந்துகொண்டு எதனையும் சாதிக்க முடியாது என்ற கருத்து வலுவடைவதற்கு இதுதான் காரணம்.

இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கினாலும், அதனை நிறைவேற்ற ஒருபோதும் ஒத்துழைக்கப்போவதில்லை என்பது கடந்த வருடங்களில் உணர்த்தப்பட்டுவிட்டது. அதனால்தான் “பிரச்சினையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்” என்ற கருத்து வலுவடைந்து வந்தது. அதனை இதுவரையில் ஏற்றுக்கொள்ளாமலிருந்த கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.சு.சுமந்திரனும் அதனை இப்போது ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியிருக்கின்றார்.

இந்த நிலையில், தமிழ்த் தரப்பினரால் தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கை, பேரவையின் உறுப்பு நாடுகளால் புறக்கணித்துவிடக்கூடிய ஒன்றாக இருக்கப்போவதில்லை. புதிய தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருவதற்காக திட்டமிடும் பிரதான நாடுகள் இந்தக் கோரிக்கையிலுள்ள அம்சங்களை உள்வாங்க வேண்டிய அழுத்தங்களுக்கு உள்ளாவார்கள் என எதிர்பார்க்கலாம். பிரதான 3 தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டிருப்பதால், இந்தக் கோரிக்கை வலுவானதாகவே இருக்கும்.

தமிழ்க் கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் 4 முக்கிய விடயங்கள் உள்ளடங்குகின்றன.

  1. இலங்கையை இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்த குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் வேறு பொருத்தமானதும் செயற்படுத்தக்கூடியதுமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கும் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ. நா. பொதுச்சபை, ஐ. நா. பாதுகாப்புச்சபை போன்றவை எடுக்க வேண்டுமென்று இப்புதிய தீர்மானத்தில் உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்.
  2. ஐ. நா.மனித உரிமைப் பேரவையின் தலைவர் இவ்விடயத்தை மேல் கூறப்பட்டபடி நடவடிக்கைக்காக மீளவும்செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  3. ஐ. நா. மனித உரிமை உயர் ஸ்தானிகரின் அலுவலகம் இலங்கையில் தொடர்ந்து நடைபெறுகிற மீறுதல்களை கண்காணிக்கவும் இலங்கையில் அவ்வலுவலகமொன்றை ஸ்தாபித்தல் வேண்டும்.
  4. மேலே 01 இல் கூறியதற்கு பங்கமில்லாமல் ஐ. நா. பொதுச் சபையின் உப பிரிவாக, சீரியா சம்பந்தமாக உருவாக்கப்பட்ட சாட்சிகளை சேகரிக்கிற பொறிமுறை போன்றதொன்றை (ஐஐஐஆ) கடுமையான 12 மாத அவகாச நிபந்தனையோடு ஏற்படுத்துதல்.

தமிழ் அரசியல் அரங்கில் பிரதான மூன்று கட்சிகள் இணைந்து ஜெனீவாவை நோக்கி இவ்வாறான கோரிக்கை மனு ஒன்றை முன்வைத்திருப்பது முக்கியமான ஒரு முன்னேற்றம்தான். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பிரச்சினையைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை எந்தளவுக்கு ஏற்கப்படும் என்பதும், அதற்கான நடைமுறைச்சாத்தியங்கள் எந்தளவுக்கு இருக்கின்றன என்பதும் ஆராயப்பட வேண்டியவைதான்.

எப்படியிருந்தாலும், மனித உரிமைகள் பேரவையில் தமிழத் தரப்பினர் நம்பிக்கையிழந்துவிட்டார்கள் என்பதை இது சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியிருப்பதுடன், அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டிய தேவை இருப்பதையும் உறுதியாகச் சொல்லியிருக்கின்றது. தமிழ்க் கட்சிகளின் இந்தக் கோரிக்கை மனு பேரவையின் உறுப்பு நாடுகள் மத்தியில் எந்தளவுக்குச் செலுத்தப்போகின்றது? ஜெனீவாவில் வரப்போகும் பிரேரணையில் அந்தக் கோரிக்கையின் அம்சங்கள் உள்வாங்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

— கொழும்பிலிருந்து ஆர்.பாரதி

1,182 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *