சுவாமி விவேகானந்த சரிதம்
சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த தினத்தை ஒட்டி மிக சிறப்பானதொரு நிகழ்வினை வழங்க வேண்டும் என்று இலங்கை இராமகிருஷ்ண மடத்தின் பிராதன ஸ்வாமிஜி எண்ணம் கொண்டார். இதற்காக விவேகானந்தர் வாழ்க்கை வரலாற்றினை நாடக வடிவில் அமைக்க வேண்டும் என்றும் விரும்பினார். அவ்வெண்ணத்தினை பூர்த்தி செய்வதற்காக சபையில் எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஸ்வாமிஜியை சந்திக்க எனக்கு அழைப்பும் விடுவிக்கப்பட்டது.
இலங்கைக்கு வந்து சிறு காலமேயான சுவாமிஜியிடம் எனக்கும் அறிமுகம் அதுவரை நிகழவில்லை. அந்த நாள் என் வாழ்வில் மறந்திட முடியா மலர்ச்சியை தரும் என அன்று நான் அறிந்திருக்கவில்லை.
வாசலில் நின்று மிக்க மரியாதையுடன் என் பெயரை சொன்னேன் .ஸ்வாமிஜி என்னைக் கண்டும் சிறிதேனும் என்னைப் பொருட்படுத்தவில்லை.
அதன் பின் என்னை சிபாரிசு செய்த குழுவில் இருந்து அதிபர் வந்தார். சுவாமிஜிக்கு என்னை அறிமுகப் படுத்தினார். அக்கணத்தில் இருந்து குறைந்தது 30 நிமிடங்களாவது வைத்த கண் வாங்காமல் ஆச்சர்யத்தின் உச்சத்தில் என்னை பார்த்திருந்தார்.
உடனடியாக நூலகத்தில் இருந்து விவேகானந்தர் குறித்தான பல நூல்கள் வரவழைக்கப்பட்டு என்னிடம் கையளித்தார். அவரது அளவிலா வியப்பிற்கு என்ன காரணம் என அன்று நான் அறிந்திருக்கவும் இல்லை.
விவேகானந்த சரிதத்தை 20 நிமிடங்களுக்குள் என்னிடம் சுருங்கச் சொன்னார். அத்தனையையும் மன நூலில் குறித்துக் கொண்டேன்.
இதுவே சுவாமி விவேகானந்த சத் சரிதம் உருவான முதல் சம்பவம். சிவன், கிருஷ்ணன், அம்பாள் என புராண கதைகளை தழுவிய நாட்டிய நாடங்களை சிறு சிறு முயற்சிகளாக செய்து கொண்டிருந்த வேளை, 90 நிமிட முழு நாட்டிய நாடகத்தினை மேடையேற்றுவது என்பது எனது முதல் அனுபவம்.
தரப்பட்ட நூல்களின் தூய்மை தெரிந்து ஆழ்ந்த பொருள் அறிந்து, அதன் உண்மை விளக்கம் உணர்ந்து இந்நாட்டிய நாடகத்திற்கான பாடல்களையும், இயலாக்கத்தினையும் நானே வழங்கலாம் என்று ஆவல் கொண்டேன். 7 நாட்களுக்குள் நாட்டிய நாடகத்திற்கான இயலாக்கம் அமையப்பெற்றது.
இதற்கான இசையை வழங்க இந்தியாவில் இருந்து திரு உன்னிகிருஷ்ணன் நந்தகுமார் , மாயவரம் . தி. விஸ்வநாதன் , திரு ராமநாதன் கலையரசன் ஆகியோர் இலங்கை வந்து இசைப்பணி ஆற்றினர்.
சத்திய சீலமும், சங்கீத ஞானமும் , நித்திய வலிமையையும், நீங்காத தியானமும் , தத்துவக் கேள்வியும் என வளர்ந்திட்ட நரேந்திரனின் இளமை காலம் முதல் சமாதி எய்திய நிலை வரை காட்சி அமைப்பு வழங்கப்பட்டு இருந்தது. எல்லையயற்ற பரமானந்த்தை உடல் தங்கிடும் சக்தியை உடல் இழப்பதை அறிந்து , மனித உடல் மறைந்தது. ஆனால் ஐயனின் பொன் மொழி அகலாது அருள்கிறது.
சிகாகோ மாநகரில் ” அமெரிக்க வாழ் சகோதர சகோதரிகளே “என்று தன் உரையை ஆரம்பித்ததும், வான் பிழக்க வாழ்த்தொலியில் , நான்காயிரம் நடு நிலையில் , ஊன் மறந்து உணர்வு எழுந்து ஆன்றோர் ஆர்ப்பரித்த கரவொலியை , ஆழ் கடல் அமைதி போல் ஏற்று கொண்ட மகான் .
வெறும் வயிற்றில் ஒட்டாது மெஞ்ஞானம் , பசியறுத்து பாரத பிணியறுப்போம் என தனவந்தர்கள் பார்வையை ஏழைகள் மீது சாய்த்து லோக வேதாந்த தேச பக்தர் சுவாமி விவேகானந்தர் எனப் பெயர் பெற்றவர்.
சொந்த உறவுக்கும் பந்த பாசத்திற்கும் முந்தும் பதவிக்கும் சொத்து பணத்திற்கும் சிந்தை குலைந்தாடி விந்தை புரிந்தாடும் மானிடரை உய்விக்க வந்த பரம ஹம்சர் கண்டெடுத்த ஞான சிற்பி.
உருவ வழிபாட்டின் உன்னதத்தை விளக்கியவர்.
பதினெண் ஆற்றல் நிறை ஞான பிரகாசன். பாரா முகத்தையும் தாங்கும் ஆன்மீக சாதகன்
காற்றிலா வெளியிடை தீப சுடர்போல் மாற்றிலா மனத்திடை மருந்தவர்.
ஓராயிரம் இதழிடை அம்புஜம் போல் ஒப்பிலா ஒளியிடை ஆதவன்.ஆத்ம ஜோதியே நிஜம் என்று அறிந்தவர்.
குரு ராமகிருஷ்ணா பரமஹம்சரிடத்தே நிர்விகல்ப அனுபூதி எய்தியவர். நாடு தோறும் மனித சக்தியின் தெய்வீக சுடர் ஏற்றிட பணி புரிந்தவர்.தேச சஞ்சாரி, ஆத்ம சாதகர் !
இந்த நாட்டிய படைப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற திருப்தி எல்லை அற்றதாய் அமைந்தது. அதற்கு மூல காரணம்
- பங்குபற்றிய 30 மாணவர்களிடையே பாரியளவிலான மாற்றத்தை உணர்தோம். நெறியாள்கை , பயிற்சி காலங்களில் விவேகானந்தர் அருளிய மொழியை மாணவர்களிடையே வித்திடும் பொழுதும், ஒத்திகை காலத்தை 21 நாட்கள் என ஆக்கி தினமும் மாணவர்கள் தியானம் செய்யும் வழக்கத்தை 21 நாட்களும் அமைத்ததாலும் இந்த மாற்றம் உருவாகி இருக்கலாம்.
- பார்வையாளர்களில் பலரும் ராமகிருஷ்ண மிஷன் பக்தர்களாக அமைந்ததால் , கண்ணீர் மல்க வெண்ணுள்ள வாழ்த்துகளை வழங்கி மகிழ்ந்தனர். அப்பொழுது பிராதன ஸ்வாமிஜி என்னருகே வந்தார் .சந்தித்த முதல் நாள் அவர் கொண்ட உச்ச வியப்பிற்கான காரணத்தை தெரிவித்தார்.நாம் தினம் போற்றும் மகானின் வாழ்க்கை சரிதத்தை வயதிலும் மிகவும் குறைந்த ஒருவரிடம் கை அளிக்கிறோமே, இலங்கையில் மூத்த நடன ஆசிரியர் ஒருவர் என்னை சந்திக்க வருவார் என்று காத்திருக்கும் போது ஒரு சிறு பிள்ளை வந்து நிற்கிறதே என்பதே என் பயமும் வியப்பும் , ஆனால் இன்று உங்கள் கீர்த்தி எத்தனை பெரிது என்று நிரூபித்தீர்கள் . இராமகிருஷ்ண மிஷன் என்றுமே உங்களை போற்றும் என வாழ்த்துக்களை அள்ளி வழங்கினார்.இதுஅபிநயக்ஷேத்ராவின் கன்னிப் படைப்பிற்கு கிடைத்த பேராதரவு என்று ஏற்றுக்கொண்டோம். அதுவே ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து பல நாட்டிய நாடகங்களை உருவாக்க உரமானது
பொங்கும் விரிக்கடல் போன்ற சரிதம் உண்மை ஒன்றே வலிமை தர முடியும் என்று உரைத்த சரிதம் இந்து தர்மத்தை உலகம் உணர்ந்திட செம்மை செய்திட்ட உயரிய சரிதம்
வெற்றி வேண்டும் எனில் தீவிர சங்கல்பம் வேண்டும் என்று உணர்த்திய சரிதம் , சுவாமி விவேகானந்த சரிதம்.
இதனை , குருவின் அருளால் நாட்டிய படைப்பாகிட்ட சந்தர்ப்பம் அமைந்தது அம் மகானின் அருள் அன்றி பிறிதில்லை.
1,337 total views, 6 views today