சிறுகதை: லால்பகதூர் முரளி

  • மாதவி

முளைத்து மூன்று இலை விடவில்லை. திருட்டு முழி வேறை. அதிபர் அறைக்கு முன்னால் நிற்கும் முரளியைப் பாரர்த்து வரும், போகும் வாத்திமார் எல்லம் பொரிஞ்சு தள்ளிக்கொண்டு போகினம்.

படிக்கவந்தால் காவாலிப் பசங்கள் உருப்படியாக பெட்டையளையும் படிக்கவிடமாட்டேன் என்கிறாங்கள். அக்காதங்கச்சியுடன் பிறக்கவில்லையா? இது ஒரு ரீச்சரம்மாவின் இடிமுழக்கம்.
என்னதான் முரளி செய்துபோட்டான். பள்ளிக்கூடம் முழுக்க திட்டித்தீர்க்குது. அது சரி இந்த விசையம் எப்படி எல்லாருக்கும் தெரிந்தது. அது போகட்டும் எப்படி அதனை சட்டென்று கண்டுபிடித்தார்கள். அப்படி என்றால் கண்டுபிடித்தவர்கள் கூட்டத்திலும் ஒரு கறுப்பாடு இருக்கத்தானே வேண்டும்.

இது வாத்தியாற்ரை வேலை மட்டும் இல்லை, கூடப்பிறந்த அண்ணன் சேரனும்; சேர்ந்துதான் போட்டுக்குடுத்திருக்கவேண்டும்.

இல்லையேல் வைச்ச இடத்தில் எடுப்பது போல் அப்படி அந்த நேரத்தில் எவருக்கும் அந்த எண்ணம் வந்திராது.
கூடப்பிறந்த அண்ணன் என்று சொன்னேன். அவனும் முரளியும் ஒரே ஊர் மட்டுமல்ல நல்ல நண்பர்களும்தான். ஆனால் முரளி செய்தது தப்பு என்றுதான் அப்ப எல்லாரும் சொல்லுகினம்.

பாடசாலைக்கு அதிகாலையில் வரும் மாணவர்களும் இருக்கினம் மணி அடிக்கைக்கை உள்ளுக்கு வேர்த்து விறுவிறுக்க வந்த அமரும் மாணவர்களும் இருக்கினம். முரளிக்கு அப்படி ஒருநாளும் வேர்த்தது கிடையாது.

அவன் தாய்தகப்பன் மலைநாட்டில் படிப்பிக்கினம் பெரியதகப்பனோடுதான் அவன்; இருந்து படிக்கிறான். சாப்பாடு மத்தியானம் பாடசாலை விடுதி கிடைக்கும். எல்லோரும் தாய் செய்துகொடுத்த தனித்துவமான உணவை பாசலாக கட்டிவந்து மத்தியானம் சாப்பிடுவார்கள். இவன் மட்டும் விடுதியில் ஒரே உணவு 4 வாரமும் சலிப்போடு சாப்பிடுவான்.
15 வயது அவனுக்கு தாயின் அரவணைப்பு இல்லை. எந்த உறவாக இருந்தாலும் தாய் போல் வருமா? 5 பிள்ளைகள் இருந்தாலும் 5 பேருக்கும் தாய் ஒரேமாதிரியா உணவு பாசல் கட்டிக்கொடுப்பாள். இடியப்பம் என்றாலும் ஒருபிள்ளைக்கு சம்பலும் இடியப்பமும், ஒரு பிள்ளைக்கு தேங்காய்ப்பூவும் சீனியும் போட்டு கலந்து இடியப்பம். மற்றப்பிள்ளைக்கு சொதி வேண்டும். கோர்லிக் போத்தலில் சொதிவிட்டு கொடுப்பாள் . மற்றப்பிள்ளை கொஞ்சம் அடம்பிடித்தால் முட்டைபொரித்து இடியப்பம் கொடுப்பாள். இப்படித்தான் முரளியோடு படிப்பவர்கள் மதியம் சாப்பிடும் போது விரிக்கும் உணவுப்பாசல் எல்லம் பாசக்கதைசொல்லும்.
முரளியின் நண்பன் சேரன் இருவரும் ஒரே வகுப்பு ஒன்றாக வாங்கில் இருபுறமும் காலைப் விரித்து போட்டுக்கொண்டு நடுவில் பாசலை விரித்து வைத்து உண்பார்கள். முரளிக்கு விடுதிச்சப்பாடு. சேரன் வீட்டுச்சாப்பாடு. சேரவீட்டில் 4 பெண் சகோதரங்கள். சேரன் மட்டும்தான் ஒரு ஆண்பிள்ளை. அவனுக்கு எல்லோரும் செல்லம். சேரனுக்கு எப்பவும் ஸ்பெசல் உணவுதான்.

வழமைபோல் அன்றும் இருவரும் உணவு பொட்டலைத்தை விரித்து சாப்பிட்டார்கள். அங்கு உணவு கட்டுவது வாழையிலையில் என்றாலும் அதனைச் சுற்றி பாசல் கட்டுவது தினசரிப்பேப்பரில்தான். இருவரும் பாசலை விரிக்கிறார்கள் சோறும் முட்டைப்பொரியலும் உருளைக்கழங்கு கறியும். என்னடா இருவருக்கும் இன்று ஒரேமாதிரி சாப்பாடு என்று நினைத்துக்கொண்டு சாப்பிட்டு முடித்தான் சேரன். சேரன் சாப்பிட்டு முடிப்பதற்குள் முரளி சாப்பிட்டுவிட்டு மைச்சான் இந்த பாசல் சுத்தின பேப்பரையும் எறியடா.. என்று விட்டு கைகழுவ ஏதோ காதலியைக் காண ஓடுவது போல் ஓடினான்.

சேரன் அவனது பேப்பரையும் எறிவதற்கா எடுத்தான். ஒரு கணம் திகைத்துப்போனான். சேரனின் பேப்பரில் பாதியில் பாதப்பிரதமர் லால்பகதூர் இருந்தது… மறுபகுதி முரளியின் பாசல் பேப்பரில் சாஸ்த்திரி காலமானார் இருந்து. இப்போது அவன் மனம் முன்னோட்டம் செய்தது.

ஒரே சாப்பாடு சோறு உருளைக்கிழங்கு சரி.. அது எப்படி சைவ உணவு கொடுக்கும் விடுதியில் முடைப்பெரியல் முரளிக்கு வந்தது.
கண்கள் அகன்றது. மீண்டும் கசக்கிய அந்த சாப்பட்டு கட்டியபேப்பரை ஆய்வு செய்தது. ஆம் ஒரு பேப்பர் பாதியாக கிழத்து கட்டப்பட்ட சாப்;பாட்டு பாசல்கள்தான் அவை. அப்படி என்றால் இந்த சாப்பாடு எங்கள் வீட்டில் இருந்து வந்திருக்கவேண்டும். எனக்கு சாப்பாடு கட்டித் தந்தவள் கடைக்குட்டி வசந்தி
.
இரவு முழுவதும் ஒன்றும் பேசவில்லை. மறுநாள் காலை எழுந்ததும் வந்தியின் கொப்பிகள் புத்தகம் எல்லாம் தேடினான் ஒன்றும் தென்படவில்லை.
பாடசாலைக்கு அன்று நேரத்தோடு சென்றுவிட்டான் சேரன். வசந்தியும் எப்பவுமே 2வது றிப்பில்தான் காறில் பாடசாலை செல்வாள்.
சேரன் உளவுப்படையில் சேரந்தவன் போல் வசந்தியின் வகுப்பறையை நோட்டமிட்டபடி இருந்தான். வசந்தியின் வகுப்பறையில் இருந்து முரளிவெளியே வருவதை கண்ட சேரன். மெதுவாக சென்று பாரத்தான். எவரும் இல்லை. வசந்தி இருக்கும் மேசையின் புத்தகம் வைக்கும் தட்டை எட்டிப் பார்த்தான்.
ஒரு ஆங்கிலக் கொப்பி பிறவன் பேப்பரால் அழகாக உறைபோட்டிருந்தது. அதனுள் அழகிய தமிழ் எழுத்துக்கள் முத்து முத்தாகத் உறைக்குள்ளால் வெளியே தெரிந்தது. கொப்பி உறையைத் திறந்து பார்த்தான் அசந்துபோனான். வசந்திக்கு முரளி எழுதிய கடிதம். அந்தக்கடிதம் வாசித்தபோது அது முதல் கடிதம் அல்ல பதில் கடிதம் என்பதும் பரிந்து.
அவன் வாசித்துக்கொண்டு இருக்கும்போதே பல மாணவர்கள் சூழ்ந்கொண்டார்கள். டேய் வசந்திக்கு ஆரோ லவ்லெட்டர் குடுத்தினமாம் என்ற செய்தி பாடசாலை எங்கும் பரவியது. அது மட்டுமல்ல சாப்பாட்டு பாசல் கதை தெரியவர முரளிக்கு முன்னால் லால்பதூர் பெயரும் ஒட்டிக்கொண்டது.
இப்போ முரளி அதிபரின் தண்டனைக்காக் காத்து நிற்கிறான். போபவர் வருபவர்; எல்லாம் அவன் செய்தது எதோ கொலைக் குற்றம் போல் அவனைத் திட்டி தீர்த்துகொண்டு செல்கிறார்கள்.
காலம் ஓடியது. வசந்திக்கும் முரளிக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் அனந்தமா இன்று வாழ்கின்றார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் அல்ல வேறு வேறு நபர்களை திருமணம் செய்து ஆனந்தமாக வாழ்கிறார்கள்.
இப்போது அவர்களக்கு வயது 70 . இருவரும் வட்சொப்பில் தினமும் கதைக்கிறார்கள், கதைப்பது மட்டுமல்ல வீடியோ கோலும் மாதம் ஒருமுறை எடுத்து கதைக்கிறார்கள். இன்றும் பாடசாலை நண்பர்களுக்கு லால்பகதூர் முரளி என்றால்தான் சட்டெனத்;தெரியும்.

எந்த அதிபரும் இப்போ அவர்களைத் தண்டிப்பதில்லை.
அவர்களை மட்டுமல்ல. இளையவர்கள் வட்சப வைபர் என்றும் zoom என்றும் எதில் காதல் செய்தாலும் எவரும் கண்டுகொள்வதில்லை. இப்போ இலங்கையில் அதிபெரும்பான்மை வாக்குகளால் பல குற்றங்கள் குற்றமில்லை என்று ஆவதுபோல், காதல் என்பதும் உலகில் பெரும்பான்மை வாக்குகளால் குற்றமில்லை என்றாகிவிட்டது.

1,353 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *