கோவிட் கால காதல் கடிதம்.

என் பிரிய காதலியே!

உனைச் சந்தித்து வெகு காலமாகிறது. காலம் நம்மை குவாரண்டைன் சுவர்களுக்குள் அடைத்து நிறுத்தியது. டிஜிடல் திரைகளின் வெளிச்சப் புள்ளிகள் காட்டும் உனது பிம்பத்தை நீ என நான் ஒத்துக் கொள்வதில்லை. உன் வாசனை வீசும் காற்றை நுகர்ந்து, உன் அருகாமையில் வெட்கப்படும் பூக்களின் தோல்வியை ரசித்து, உன் விழிகளின் விபரீத அசைவுகளை வியந்து ரசிப்பதைத் தான் நான் ‘சந்திப்பு’ என்கிறேன். அவற்றை இந்த வெளிச்சத் திரைகளின் நெட்வர்க் நாணம் தருவதேயில்லை.

கோவிட்டின் நாட்டியக் கால்களிடையே நசுங்கிப் போன காதலர்களின் கனவுகள் எத்தனை எத்தனை ? குவாரண்டைன் கோட்பாடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்க முடியாமல் அலறிய காதல் பறவைகள் எத்தனை எத்தனை ? யாரும் நினைத்திருக்கவில்லை. தங்களுக்காய் கடல் விரித்து வைத்த மணல் வெளிகளை தீண்டமுடியாக் காலம் வரும் என யாரும் நினைத்திருக்கவில்லை. தங்களுக்காய் அரும்புகள் விரும்பிச் சிரிக்கும் பூங்காங்களில் புக முடியாத காலம் வருமென யாரும் நினைத்திருக்கவில்லை.

இந்தக் கோவிட்டின் ஆட்டம் நம்மை வெளிச்சத்தின் பெருவெளியிருந்து, இருட்டின் தனி அறைகளுக்குள் தள்ளி விட்டது. ஒரு பெருங்கடலை எப்படி ஒரு சிப்பியின் ஓட்டுக்குள் சிறை வைப்பது. ஒரு பெருங்காற்றை எப்படி ஒரு சங்கின் காதுக்குள் ஒளித்து வைப்பது ? ஒரு பெருமழையின் சீற்றத்தை எப்படி ஒரு சிறு தாவரத்தின் மெல்லிய இலையில் பூட்டி வைப்பது. காதலும் அப்படியே ! எப்படித் தான் என் சுனாமிக் காதலை ஒரு சுருக்குப் பைக்குள் திணித்து வைப்பேன்.

உனக்கான சிந்தனைகளின் நீட்சியில், நமக்கான தடைகள் வந்து நிற்கின்றன. உனது குரலோசைகளைக் கூட வீடுகளின் அறைகளுக்குள் ரகசியமாய்க் கேட்கும் அவஸ்தை எனக்கு. தனிமைக் காதலர்களின் தேசிய கீதத்தையே இந்த ஊரடங்கு வந்து ஒரேயடியாக உயிரடக்கிவிட்டதே. ஒரு ஸ்மார்ட் போனின் வீடியோ காலில் தீர்ந்துவிடுமா என்ன ஒரு பெருங்கனவின் தாகம் ?

உன் உயிர்த்தீண்டல் கொண்டு வரும் ஒரு கண காதல் பிரவாகத்தை, ஸ்மார்ட்போனின் காலாவரையற்ற பிரயோகங்கள் கூட பிரதியெடுக்க முடியாது. சீண்டலின் வெப்பத்தை, பேட்டரியின் வெப்பம் தாக்குப் பிடிக்க முடியாது. எத்தனை செல்பிக்கள் வந்தாலும் உனது புன்னகையின் புனிதத்தை எனக்குள் பதியமிட முடியாது. இப்படித் தான் புலம்பிக் கொண்டிருந்தேன், கவிதைகளால் அமைக்கப்பட்ட கட்டுரைகளிலும், கட்டுரைகள் போல் கட்டவிழ்ந்து புரண்ட கவிதைகளிலும்.

ஏதோ தளர்வுகளின் சாளரம் வழியே மெல்லமாய் கனவுகளின் சிறகுகள் உள் நுழைகின்றன. சமூக இடைவெளியின் இறுக்கங்கள் மெல்ல மெல்ல தளர்ந்து கொண்டிருக்கின்றன. எப்படித் தவித்தேன் நான் ! ஒரு நூலிழை இடைவெளியைக் கூட பிரபஞ்ச அவமானமாய்க் கருதியவன் நான். ஒரு மயிரிழை விலகலைக் கூட மலையளவு என்றவன் நான். இங்கே இருவருக்கு இடையே ஆறடி இடைவெளி என்றார்கள். ஆறடி இடைவெளி ஒரு சவப்பெட்டியைச் சுமக்கும் இடைவெளியல்லவா ? உனக்கும் எனக்கும் இடையே கிடக்கும் இந்த ஆறடி இடைவெளி நம் ஆனந்தம் செத்ததன் அடையாளமா ?

எச்சில்கள் தானே காதலின் ஈர வரம் ! உதடுகளில் மின்னும் ஈரத்தின் கவிதைப் பதிவுகள் தானே காதலின் உன்னத காவியம். அதையே சானிடைசர்களால் தடைசெய்வது காதலுக்கு எதிராய் சாத்தான் நிகழ்த்தும் நீள் யுத்தமா ? எச்சில்களின் வழியே காதல் பரவியதைத் தடுத்து கொரோனா பரவ வழிவகை செய்தது காதல் தேசத்தின் மேல் தொடுக்கப்பட்ட மிகப்பெரிய வன்முறை அல்லவா ?

அதைக் கூட மன்னித்து விடலாம். உன் பேரழகின் இதழ்களை மாஸ்க்களின் விரல்கள் ஒளித்து வைத்திருப்பதை எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாது. ஆயிரம் கதைகள் சொல்லும் உனது முகத்தின் அசைவுகள் இப்போது புதைகுழிக்குள் முனகும் விதைகளைப் போல மௌனிக்கின்றன. உன் கண்களின் பாஷைகளை மட்டுமே பார்க்கும் எனக்கு, உன் கன்னத்தின் ஓசை தெரியாமலேயே போய்விடுகிறது.

தங்கத்தில் போட்டால் கூட இந்த மாஸ்க் என்பது காதலர்களின் மிகப்பெரிய எதிரியே. அந்த கூர்நாசியின் எழிலை குதறித் தள்ளி, அந்த இதழ்களின் இளமையை இருட்டறையில் அடைத்து, இரு விழிகளுக்கு மட்டுமே அழுத்தம் கொடுக்கும் அழகிய அவஸ்தை அது. உன் ஈர நாவு தீண்டும் ஓர உதடுகள் தானே என் இதயத்தின் துடிப்பை இரட்டிப்பாக்கிக் கொண்டிருந்தது. உன் சிரிப்பின் ஆயுதம் தானே என் பிடிவாதங்களின் கடிவாளங்களை அறுத்தெறிந்து கொண்டிருந்தது. இப்போது மாஸ்க்களின் மயானத்தில் அல்லவா காதலின் சடுகுடு ஆட்டம் ?

இதயங்களுக்கு இடப்பட்ட திரைகளை அவிழ்த்து விட்டு, காதலின் இராகம் மீட்டும் நமக்குள் இந்த முகத்தின் முகமூடி சீனச் சுவரைப் போல நீள்கிறது.

இந்தக் கடிதம் என் புலம்பலின் பிரதிநிதி. தேக்கி வைத்திருந்த ஏக்கங்களின் மடை திறப்பு. பதுக்கி வைத்திருந்த பாசத்தின் நாலு கால் பாய்ச்சல்.

காதலுக்கு இந்தக் காத்திருப்பு அவசியமே. !

நமது காதல், நேசத்தின் அடர்த்தியில் நெய்யப்பட்டிருக்கிறதா, அல்லது வெறும் சிற்றின்பத்தின் சுவர்களால் கட்டப்பட்டிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளும் காலம் இது. சிற்றின்பச் சருகுகள் இந்த இடைவெளியின் வெப்பத்தில் சாம்பலாகி மறைந்திருக்கும்.

நமது காதல் இதயத்தின் ஆழத்தில் நடப்பட்டிருக்கிறதா, அல்லது விரல்களின் நுனியில் இடப்பட்டிருக்கிறதா என்பதை அறியும் காலம் இது. இதயத்தில் வேர்விட்ட காதல் மழை பொழிகையில் மீண்டும் துளிர்க்கும். விரல் நுனியில் இடப்பட்டிருக்கும் காதல் இந்த சானிடைசர் காலத்திலேயே சறுக்கிப் போய்விடும்.

நமது காதல் ஒற்றைச் சிந்தனையில் வாழ்கிறதா, அல்லது அலைபாயும் மனதுக்குள் அழிகிறதா என்பதை அறியும் காலம் இது. உண்மைக் காதல், விஸ்வரூபமாய் தொடரும். மற்ற காதலோ மறந்து போன பரண்களுக்குள் புரண்டு கொள்ளும்.

இந்தக் காலம் காதலின் பரிசோதனைக் காலம். இந்தக் காலம் காதலைச் செதுக்கும் காலம். உலையில் இடுகின்ற தங்கம், உருகினாலும் தங்கமாய் வழியும். ஆபரணமாய் அழகாகும். உலையில் விழுகின்ற துரும்போ காணாமல் போய்விடும். பயனற்று மறையும். இந்தக் காலம் உண்மைக் காதலை இதயத்துக்கு உணர்த்தும், பொய்யான காதலின் விறகுகளை எரிக்கும்.

பிரிய காதலியே, எனைப் பிரியாக் காதலியே…

இந்த காலம் உனக்கும் எனக்குமான புனிதக் காதலை அர்த்தமாக்கியிருக்கிறது. உனக்கும் எனக்குமான ஆத்மார்த்தக் காதலை ஆழப்படுத்தியிருக்கிறது. அதற்காய் நான் கோவிட்டுக்கு நன்றி சொல்கிறேன்.

இதுவும் கடந்து போகும். சில காலங்கள் விரைவாக விலகும். சில காலங்கள் நத்தை போல நகரும். எது எப்படியெனினும் விலகாத நிலைகள் என்று எதுவுமே இல்லை. இந்த கொரோனா காலமும் அப்படியே…. விலகும், அகலும்.

உனக்கான என் காதல் இப்போது புதையலாய் காத்திருக்கிறது. நாளைய வெளிச்ச விழுதுகள் அதில் விழும்போது ஒளியின் பிரதிபலிப்பு பல மடங்கு அதிகமாய் இருக்கும். காரணம் நான் காதலிப்பது உனது சுவாசத்தில் நிலைப்பதற்காக, தற்காலிக இன்பங்களில் தலைசாய்ப்பதற்கல்ல.

காத்திருக்கிறேன்.. இந்த காதலர் தினத்தில், என் காதலின் வனத்தில் உன் நினைவுகளெனும் சிட்டுக் குருவிகளைப் பறக்க விடுகிறேன். அடுத்த முறை நாம் அந்த நினைவுக் குருவிகளின் இசைகளை தலைகோதும் தருணங்களோடு சந்திப்போம்.

உண்மைக் காதலுடன்
உன் காதலன்

1,420 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *