மூடநம்பிக்கைக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?
Dr.நிரோஷன் தில்லைநாதன்-யேர்மனி
„வெளியே செல்பவரைக் கூப்பிடாதே“, „நிலத்தில் படுத்து இருப்பவரைக் கடந்து செல்லாதே“ மற்றும் „அடடா, பல்லியே சொல்லிவிட்டது. அப்போ நல்ல சகுனம் தான்!“ என்று பெரியோர் சொல்வதை நீங்கள் அடிக்கடி கேட்டு இருப்பீர்கள். இவ்வாறான மூடநம்பிக்கை எனப்படும் அறிவுக்குப் பொருந்தாத, பழக்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து அல்லது கோட்பாடுகள் எமது தமிழர்களால் மட்டும் நம்பப்படுவது அல்ல, ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் விதம் விதமான வகைகளில் காணப்படுகின்றது. மூடநம்பிக்கை எவ்வாறு உருவானது என்பதைப் பார்ப்போம். எமது முன்னோர்களின் காலத்தில், அதாவது அறிவியல் சரியாக வளர்ச்சி அடையாத காலத்தில், நடந்த ஏதாவது ஒரு சம்பவத்திற்குக் காரணம் தெரியாமல் அவர்கள் அறிந்ததை, தெரிந்ததை வைத்துக் கூறப் பட்ட விளக்கங்கள் தலைமுறை தலைமுறையாகக் கொண்டு செல்லப்பட்டு, இன்று மூடநம்பிக்கையாகக் கருதப்படுகின்றது. ஆனால், எல்லா மூடநம்பிக்கையும் அர்த்தம் இல்லாத நம்பிக்கை என்று சொல்லமுடியாது! அறிவியல் சாரம் உள்ள எவ்வளவோ நம்பிக்கைகளும் உண்டு. இன்று சில மூடநம்பிக்கைகளும் அவற்றின் அறிவியல் சார்ந்த அர்த்தங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்.
- ஆடி மாதத்தில் திருமணம் வைத்தால் அல்லது கணவன் மனைவி அந்நேரம் சேர்ந்தால் ஆகாது
இந்த மூடநம்பிக்கைக்கு அர்த்தம் என்னவென்று எவரிடமும் கேட்டால், ஆடியில் பிறக்கும் குழந்தை எதிர்காலத்தில் திருடன் ஆகிவிடும் என்று சொல்லி மழுப்பி விடுவார்கள். ஆனால் இதன் அறிவியல் ரீதியான காரணம் மிகவும் அர்த்தமுள்ளது ஆகும். பொதுவாக ஆடி மாதத்தில் கணவன் மனைவி சேர்ந்தால் அடுத்த வருடம் சித்திரை, வைகாசி மாதங்களில் குழந்தை பிறப்பதை எதிர் பார்க்கலாம். எனவே அந்த மாதங்களில் இருக்கும் உச்ச வெயிலை ஓர் சிறு குழந்தையால் தாங்க முடியாது. அது முன்னோர்களுக்கு நன்றாகவே தெரிந்து விட்டது. ஆனால் கணவன் மனைவியிடம் வெயிலைக் காரணமாகச் சொன்னால் விடவா போகிறார்கள்? இல்லையே, எனவே இப்படி ஒரு திருடன் கதையைக் கட்டிவிட்டார்கள்.
- இரவு நேரங்களில் மரத்தின் கீழ் நிற்க வேண்டாம் அல்லது மரத்தின் கீழ் தூங்கினால் பேய் பிடித்து விடும்
இந்த நகைச்சுவையான மூடநம்பிக்கைக்குக் கூட ஓர் சிறப்பான அறிவியல் ரீதியான அர்த்தம் உள்ளது. பொதுவாகப் பகல் நேரத்தில், சூரிய ஒளி இருக்கும் வரை தாவரங்கள் கரியமிலவாயு (உயசடிழn னழைஒனைந) உள்ளெடுத்து ஆக்சிசனை (ழஒலபநn) வெளியிடுவன. ஆனால் இதுவே சூரிய ஒளி இல்லாத இரவு நேரத்தில் இந்தச் செயற்பாடு எதிர்மாறாக ஆகிவிடும். இரவில் ஆக்சிசனை உள்ளெடுத்து கரியமிலவாயு வெளியிடப்படுகிறது. எனவே இரவு நேரங்களில் நாம் ஒரு மரத்திற்குக் கீழ் நிற்கும் போது அல்லது தூங்கும் போது அந்த மிகவும் ஆபத்தான கரியமிலவாயு சுவாசிக்க வேண்டி வந்துவிடும். ஆனால் இப்படி அறிவியல் விளக்கம் கொடுத்தால் யார் தான் கேட்கப் போவது, எனவே பேய், பூதம், பிசாசு பிடித்து விடும் என்று சொல்லி பயம் உறுத்தி விட்டார்கள்.
- எங்கும் செல்லும் போது பூனை குறுக்கே சென்றால் போகின்ற வேலை நடக்காது
நான் எவ்வளவோ ஆராய்ந்து பார்த்தேன், ஆனால் இதற்கு அறிவியல் ரீதியான காரணத்தை என்னால் கண்டே பிடிக்க முடியவில்லை நண்பர்களே. எனவே, நான் நினைப்பது இது தான்: முன்னொரு காலத்தில் ஒரு பாட்டி நடந்து சென்ற போது ஏதாவது ஒரு கெட்ட சம்பவம் நடந்து இருக்கும். உடனடியாக அதற்குக் காரணம் என்னவென்று தேடிய பாட்டி, தற்செயலாகக் குறுக்கே சென்ற பூனை மேலே பழியைப் போட்டிருப்பார். பூனை குறுக்கே சென்ற காரணத்தால் தான் இந்தச் சம்பவம் நடந்து விட்டது என்று கூறி, இதைத் தலைமுறை தலைமுறையாகச் சொல்லி வந்திருப்பார்கள். ஆனால் அதற்கு அந்தப் பூனை என்ன செய்வது? அது ஏதும் உணவைத் தேடி அவ்வழியாகச் சென்று இருக்கும்.
ஆக மொத்தத்தில் எனது கருத்து என்னவென்றால்: எல்லா மூடநம்பிக்கையும் முட்டாள் தனமான நம்பிக்கை கிடையாது. அதே போன்று எல்லா மூடநம்பிக்கைக்குப் பின்னாலும் அறிவியல் ரீதியான அர்த்தமும் இருக்காது . எது சரி, எது தவறு என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்!
சரி, இனி நீங்கள் கூறுங்கள். உங்களுக்கும் ஒரு மூடநம்பிக்கைக்குப் பின்னால் இருக்கும் மூல காரணம் என்னவென்று தெரியுமா? இதற்குரிய பதிலை மட்டுமில்லாமல், எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக எனது முகநூல் பக்கத்தில் (www.facebook.com/scinirosh)
1,731 total views, 6 views today