உன்னையும், என்னையும் பெற்றது காதல்
இந்த உலகம் அன்பினை காதலாக நுகர்கின்றது. யோகிகள் அன்பையும் காதலையும் ஒன்றாகவே பார்க்கின்றனர். காதலின் அடியாழத்தில் அன்பும், அன்பின் மேற்பரப்பில் காதலும்
பின்னிப்பிணைந்து கடலும் அலையும் போல இயங்குகின்றன. அலைகள் கரையைத் தழுவித் தழுவி மீள்கின்றன, அலைகின்றன. ஆனால் கடலின் ஆழ் மையமோ சாட்சியாக அமைதியாக வீற்றிருக்கின்றது. அலைகள் தரையைத் தொட்டவுடன் ஆழத்தை நோக்கி நகர்கின்றன. பின்னர் ஆழத்திலிருந்து அலைகள் உருவாகி கரையை நோக்கி வருகின்றன. இரண்டும் ஒரே இணைப்பின் இரு வேறுபட்ட வெளிப்பாடுகள் மட்டுமே. சிறு அணு முதற்கொண்டு அனைத்தும் இம்மியளவும் பிசகாத அன்பினால் இணைக்கப்பட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.
காதல் போயின் சாதல் என்பார்கள். தன்னைத் தானே இரசிக்க வைக்கும் மந்திரம் இந்த காதல். வெறும் இரசாயனங்களில் மாறுதல் மட்டுமல்ல மிகப்பெரும் மனோ சக்திநிலை கொண்டது காதல். அவளாக அவனும், அவனாக அவளும் மாறிப் போவதும், இறந்தகாலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் ஒருங்கே கற்பனைகளோடு கரைந்து போவதும் இக்காதலில் தான்.
ஆண்டாள் கண்ணன் மேல் கொண்ட காதலும், மாணிக்க வாசகர் சிவன் மேல் கொண்ட காதலும் தான் இன்று கொண்டாடப்படும் திருப்பாவை, மற்றும் திருவெம்பாவை. சரணாகதி அர்ப்பணிப்பு என்பது மனதினை பீடிக்கும் மலக்குற்றங்களை நொடியில் களையக் கூடியது. இது அவ்வளவு இலகுவான இடத்தில் நிகழ்வது என்றால் அது ஆழமான காதலில் தான். இங்கு ‘நான்’ என்பது அழிந்து ‘நீ’ ஆகுறது. ‘எனது’ என்பதும் ‘உனது’ ஆகிறது. உனக்கு பிடித்ததே எனக்கும் பிடிக்கிறது. ஏன் வாழ்வும், ஆன்மாவும் மொத்தமாக சமர்ப்பணம் ஆகிறது. முற்றிலுமாக கரைந்து போகவும் முடிகிறது. காதலில் மட்டும் எப்படி இது சாத்தியம். இது என்ன மாய மந்திரம்?
பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள். காதல் தன்னையே மறக்க வைத்துவிடும். அக்கம் பக்கம் மறந்துவிடும், பகை, நட்பு மறந்துவிடும், அட அம்மா அப்பாவையே மறந்து விடும். அதனாலேயே காதல் கண்ணை மறைக்கும் என்பார்கள். அது தனிப்பட்ட உலகில் வாழ வைத்துவிடும்.
அசாத்திய துணிச்சல் காதலித்துக் கொண்டிருப்பவர்களிடமே அதிகம் காணப்படுகிறது. இதுவரை பயம் கொண்ட விடயங்களை சந்திக்க துணிதல் முதற் கொண்டு தன் இணைக்கு ஆபத்து வரும் காலத்தில் தன் உயிரையே பணயம் வைப்பது மற்றும் “நிலவை பிடித்துத் தரவா?”, “மேகத்தில் வீடு கட்டவா?” என தன் தகுதியை உயர்த்தி எடை போடுவதும் இக்காதலே. காதலிப்பவர்களிடம் மென்மையான இளகிய சுபாவம் வந்துவிடும். ஏனோதானோ என திரிபவர் கூட காதலில் விழுந்தால் நடை உடை பாவனையில் மாறிவிடுவர்.
இது பலருக்கு வினோதமான சிறை, தானே தன்னை உள்ளே வைத்து பூட்டிக் கொண்டு திறப்பும் தன்னிடமே இருக்கும் போது வெளிவர முடியாமல் தவிக்கும்படி செய்துவிடும் இக்காதல். இதயம் பாரம் கொண்டு அறுந்து வயிற்றுக்குள் விழுந்து விடுமோ என்பது போன்ற பற்பல மாயையினைத் தரும். காதல்தான் இலகுவில் பந்தங்களை உருவாக்குகிறது, அந்த நிலை முறிவடையும் போது ஏற்படுத்திய பந்தத்தால் மீள முடியாது தன்னையே கருக்கிவிடவும் கூடியது.
உண்மையில் ஆழமான காதலின் நிலையில் மனம் அற்றுப் போகின்றது. ஒருவருக்குள் ஆணும் உண்டு, பெண்ணும் உண்டு. ஆணானவன் தனக்குள் உள்ள பெண்மையை உணர இன்னொரு பெண்ணின் துணை நாடுகிறான். அது போலவே பெண்ணும் தனக்குள் இருக்கும் ஆணை உணர்ந்து முழுமை பெற இன்னொரு ஆணின் துணை தேடுகிறாள். அதனாலேயே அணைக்கும் போதோ, முத்தத்தில் மூழ்கும் போதோ கண்கள் தாமாகவே மூடிக் கொள்கின்றன. எதிரே இருப்பவர் மறைந்துவிடுகிறார். மனமும் கரைந்து விடுகிறது. தனக்குள் ஆணும் பெண்ணும் சேர்ந்த முழுமை உணரப்படுகிறது. ஏனெனில் உயிர்கள் ஆணும் பெண்ணுமான பூரணத்தில் இருந்தே தோன்றியவை. முழுமை நிலையை அடையும் தேடல் இயற்கையாகவே அமையப் பெற்றது. அதனை தனக்குள் தனிமையில் தன்னிச்சையாகவே உணர இறைத் தியானம் உதவும். பூரண இறைநிலையை அகத்தில் கண்டு அப் பூரணமாகவே மாறி விட முடியும். சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு எதிர்பாலினத்தில் ஈர்ப்பு ஏற்படும். இருப்பினும் கரைந்து போகச் செய்யும் இதுவும் தியான நிலையே. இந்நிலை அற்ற காதலும், கல்யாணமும் வெறும் வெற்றுச் சடங்குகளே.
கனிந்து கரைந்த காதல் கடைசிவரை குறைவுபடாமல் வளருமாயின் அதன் தன்மை எவ்வளவு உன்னதமானது. கண்டதும் காதல் கல்யாணத்தோடு ஆவல்கள் குறைந்திட பின் “நான் இப்படித்தான் விரும்பினால் கூட இரு இல்லா விட்டால் போய்க்கொண்டே இரு” என்பது போன்ற தளர்வற்ற இறுக்க நிலை. கைக்குக் கிடைக்கும் வரை உள்ள ஏக்கமும் எதிர்பார்ப்பும் தம்முடையதாகிவிட்ட பின்னர் காட்டப்படுகின்ற அலட்சியம், ‘நீயும் நானும் வேறா இருவரும் ஒன்றல்லவா’ என்ற உணர்வை கொடுத்து விட்டு ‘உன் வீட்டார்’, ‘என்வீட்டார்’ என்ற பாகுபாடு, என் உணர்வுகளை மட்டும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்ற சுயநல எதிர்பார்ப்பு, அடிதடி, கண்டிப்பு, தண்டிப்பு இவையெல்லாம் காதலை கருக்கிவிடக் கூடியவை. இவை இருக்குமிடத்தில் ‘காதல்’ எனும் அற்புதம் தங்குவதில்லை.
சுக்கிலமும், சுரோணிதமும் வெறுமனே கலப்பது அல்ல காதல். சூரியன் போன்ற தூய ஒளியை அகமும், புறமும் பரவச் செய்வது காதல். காமம் என்பது கள்ளுண்டவர்க்கும் வரும், கஞ்சா உண்டவர்க்கும் வரும். அதற்கு காதல் எனும் ஒப்பனை தேவையில்லை. பண்போடு நாகரிகமான அணுகுமுறையோடு கூடிய காதல் அனைவராலும் வாழ்த்தக் கூடியதும், நீடூழி வாழக் கூடியதுமாகும். அக்கறையோடு கூடிய காதல் அசாத்தியமான பல மாற்றங்களைக் கூட செய்துவிடும். எப்பேற்பட்ட சண்டாளனையும் சாதுவாக்கிவிடும்,
யோகியர் பார்வையில் பற்றறுப்பதே முதல் நோக்கம் என்றாலும். பற்று என்பது எது எனத் தெரிந்தால் தானே அதை அறுப்பதற்கு. ஆடவன் மேலும், மயக்கும் மங்கை மேலும் வைக்கக் கூடிய காதலை இன்னும் ஆழமாக ஆண்டவன் மேலே வைத்து விடுகின்றனர். அதாவது மானிடரிடையே காணப்படும் உலக இன்பங்களை நிரந்தரமாக பிடித்து வைக்க முடியாது ஆகையால் அவற்றை ‘சிற்றின்பம்’ என்றும், அதை இறை நிலையில் பிடித்து வைத்தல் சாத்தியமாகையால் அதனை ‘பேரின்பம்’ என்றும் அழைக்கின்றனர். ஆனால் மானிடரிடையேயான காதல் பற்பல மாயையில் சிக்க வைக்கும் என்றாலும் மேற்குறிப்பிட்ட காத்திருப்பு, கரைதல், தன் அகப்பார்வை, நுண்ணறிவு, இறுக்கமற்ற மனது, ஒரு விடயத்தில் மனம் ஒன்று குவிதல், தியாகம், வைராக்கியம் போன்ற நற்பண்புகளின் அறிமுகத்தை வழங்குகிறது. காதல் கற்பிக்கும் நல் விடயங்கள் ஏராளம். எனினும் இறைநிலையை அடையும் நோக்கமுடையவர்கள் இந்த சிறு விடயங்களில் தேங்கிவிடுவதில்லை. நிரந்தரமான விடயங்களிலேயே கவனத்தை செலுத்துகின்றனர்.
உண்மையில் பேரின்ப ஜோதியில் கரைந்து விட சிற்றின்பங்களை துறந்து தன்னையே உருக்கிக் கொண்டு நீண்ட காலம் காத்திருக்கும் யோகியர் கூட மிக ஆழமான காதலர்கள் எனலாம்.
கரிணி- யேர்மனி
1,449 total views, 3 views today