“குதியைச் சரியாக் கழுவு மேனை. கழுவாட்டில் சனியன் ஒட்டிக் கொண்டு வந்திடும் “

சந்திரவதனா.யேர்மனி

;…“சுத்தம் சுகம் தரும்“

வாழ்வில் சில பழக்கவழக்கங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுத்து விட முடிவதில்லை. எனது இந்தப் பழக்கமும் அப்படித்தான்…“சுத்தம் சுகம் தரும்“

இது எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒரு மந்திரம் போல அம்மாவின் வாயிலிருந்து ஒலித்துக் கொண்டேயிருந்தது. கூடவே “பொய் சொல்லாதே. களவெடுக்காதே. பிச்சையெடுக்காதே“ என்றவைகளும் அவ்வப்போது மந்திரமாக ஒலித்தன.
இந்தச் சுத்த விடயத்தை மந்திர உச்சாடனத்துடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், செயலிலும் அம்மா எப்போதும் கையாண்டு கொண்டே இருப்பா. கூட்டல், கழுவல், துடைத்தல் என்பன ஓயாது எங்கள் வீட்டில் நடந்து கொண்டேயிருக்கும். அண்டை அயலிலுள்ளவர்கள் (எல்லோரும் சொந்தக்காரர்கள்தான்) அவ்வப்போது இதையிட்டு “சுந்தரி, நீ இப்பிடி காலநேரம் பாராமல் கூட்டிக் கூட்டிக் கொண்டேயிருக்கிறது நல்லதில்லை. வீட்டிலையுள்ள செல்வமெல்லாம் அப்படியே போயிடும்“ என்று அம்மாவை எச்சரிப்பார்கள். அதையெல்லாம் அம்மா காதுகளில் வாங்கிக் கொள்வதேயில்லை. வீட்டில் ஒரு தூசியோ, துரும்போ இருக்கக் கூடாது என்பது அவ தனக்குள் வகுத்துக் கொண்ட எழுதாத சட்டம்.
இந்த அதீத சுத்தப் பழக்கம் விரும்பியோ விரும்பாலோ அம்மாவிடமிருந்து பிள்ளைகள் எங்களுக்கும் தொற்றி விட்டது. இதன் காரணமோ என்னவோ தெரியாது சின்ன வயதிலேயே நான் எதற்கும் அரியண்டப் படுவேன். சின்ன ஊத்தையும் என்னைத் தொந்தரவு செய்யும். அடிக்கடி கை கால்களைக் கழுவிக் கொள்வேன்.
எனது இந்தக் கை, கால்களை அடிக்கடி கழுவும் பழக்கத்துக்கு எனது பெத்தம்மாவும் (அம்மம்மா) ஒரு காரணம். யார் வெளியில் போட்டு வீட்டுக்கு வந்தாலும் ஒவ்வொரு பொழுதிலும் எனது பெத்தம்மா “மேனை, காலைக் கழுவிப் போட்டு வா மேனை“ என்பா. இதற்காகவே பெத்தம்மா வீட்டு முன்றலில் நிற்கும் ஒற்றைப்பனையின் கீழ் தண்ணீர் நிரம்பிய ஒரு வாளியும் ஒரு கிண்ணமும் வைக்கப்பட்டிருக்கும். வெளியில் போய் விட்டு வரும்போது, காலைக் கழுவாது வீட்டுக்குள் நுழைந்தால் சனியனும் சேர்ந்து வீட்டுக்குள் நுழைந்து விடும் என்பது பெத்தம்மாவின் வாதம். அதையும் சும்மா சாட்டுக்குத் தண்ணியை ஊற்றி விட்டு வர அநுமதிக்க மாட்டா. “குதியைச் சரியாக் கழுவு மேனை. சரியாக் கழுவாட்டில் சனியன் குதியோடை ஒட்டிக் கொண்டு வந்திடும் “ என்பா. அதனால் இப்போது ஜேர்மனியிலும் கூட அடிக்கடி கால்களைக் கழுவிக் கொள்கிறேன்.
அத்தோடு பிரச்சனை முடிந்தால் பரவாயில்லை.
சாம்பல் போட்டு, தேங்காய்ப்பொச்சால் சட்டி பானை மினுக்குவதைத் தவிர்த்துக் கொள்வேன். தவிர்க்க முடியாமல் கட்டாயம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் பழைய பொச்சைத் தொடவே மாட்டேன். புதிய பாவிக்காத பொச்சாகத் தேடி எடுத்துத்தான் மினுக்குவேன். அந்தப் பழைய பொச்சைத் தொட எனக்கு அவ்வளவு அருவருப்பு.
அதே பிரச்சனை இங்கு ஜேர்மனியிலும். சமையலறையில் கழுவுவதற்குப் பாவிக்கும் ளுpழபெந ஐத் தொடுவதற்கு எனக்கு விருப்பமில்லை. அடிக்கடி புதிதை மாற்றிக் கொள்வேன். ஆனாலும் அதில் கிருமிகள் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அதனால் ஒவ்வொரு முறையும் அதைப் பாவித்த பின் கைகளை சோப் போட்டுக் கழுவிக் கொள்வேன். அது மட்டுமல்ல. வேறெதைத் தொட்டாலும் கைகளைக் கழுவுவேன். கணவருடன் சேர்ந்து சமைக்கும் பொழுதுகளில் அவருக்கு இது எரிச்சலை ஏற்படுத்துவதை அவதானிப்பேன். அதற்காக எனது கைகளைக் கழுவாமல் என்னால் சமையலைத் தொடர முடிவதில்லை.
கிணற்றடியைச் சுற்றியிருக்கும் தண்ணீர்ப் பாத்திகள், வாய்க்கால்களில் சரக்கட்டைகளோ, அட்டைகளோ ஓடுவதைக் கண்டால் தாங்க முடியாத அருவருப்பு உணர்வு எனக்குள் தோன்றும். பாத்திகளைப் பாய்ந்து தாண்டியே செல்வேன்.
எப்போதும் செருப்புப் போட்டிருப்பேன். செருப்பில்லாமல் நடக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் எனக்கு மிகக் கடினமானவையாகவே இருக்கும். அதற்கு எனது அப்பாவும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்பா “உள்ளங்கால்களினூடும் உள்ளங்கைகளினூடுந்தான் அதீதமாகக் கிருமிகள் உடலுக்குள் போகின்றன. அதனால் எப்போதும் செருப்புப் போட்டிருப்பது நல்லது“ என்றும் “மலசலகூடங்களின் பிடிகளில் கண்டிப்பாக கிருமிகள் இருக்கும். அதனால் எப்போதும் மலசலகூடத்துக்குப் போய் விட்டு வந்தால் கைகளை சோப் போட்டுக் கழுவ வேண்டும் “ என்றும் சொல்வார்.
மிகச் சின்ன வயதிலேயே எனது மூளையில் பதிந்து போன இந்த விடயங்கள் எப்போதும் எனக்குள் ஒருவித எச்சரிக்கை உணர்வைத் தந்து கொண்டேயிருப்பதால் நான் செருப்பின்றி வெறுங்கால்களுடன் நடப்பதில்லை.
இந்தச் செருப்பு விடயம் சில சமயங்களில் எனக்குப் பெரும் பிரச்சனைகளைக் கூடத் தந்திருக்கின்றன. நான் வீட்டுக்கென எப்போதும் பிரத்தியேகமான செருப்புகளை வைத்திருந்தாலும் செருப்புடன் வீட்டுக்குள் நடந்தால் வீடு அசுத்தமாகி விடும் என்பது போல என் மேல் அவ்வப்போது சிலர் கோபப்பட்டிருக்கிறார்கள். வெறுங்கால்களுடன் ஊத்தை இடங்களில் நடந்து விட்டு, கால்களைக் கழுவாமல் வீட்டுக்குள் திரிபவர்கள் கூட எனது சுத்தமான செருப்பால் வீடு அழுக்காகிறது என்று முகத்தைச் சுழித்திருக்கிறார்கள். “இவ என்ன லண்டனிலை பிறந்தவவோ? பரிசிலை பிறந்தவவோ?“ என்று கூட கோபம் கலந்த நையாண்டியுடன் என்னைப் போகவிட்டுச் சிலர் கதைத்திருக்கிறார்கள். எனது புகுந்தவீட்டில் கூட இது எனக்குச் சங்கடங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும், எதற்காகவும் யாருக்காகவும் என்னால் தவிர்க்க முடியாத ஒன்று செருப்புப் போடுவது. இப்போது, இங்கே ஜேர்மனியிலும் பலர் வீடுகளுக்குள் செருப்புப் போடுவதில்லை. அதனால் எங்கு போவதாயினும் ஒரு சோடி சுத்தமான செருப்பை அதாவது வீட்டுக்குள் மட்டும் போடும் செருப்பைக் கொண்டே செல்கிறேன்.
அதே போல “மலசலகூடங்களின் பிடிகளில் கண்டிப்பாகக் கிருமிகள் இருக்கும். அதனால் எப்போதும் மலசலகூடத்துக்குப் போய் விட்டு வந்தால் கைகளை சோப் போட்டுக் கழுவ வேண்டும்“ என்று அப்பா சொன்னதை நான் மறப்பதேயில்லை. இந்தக் கொரோனாப் பிரச்சனைக்கு முன்னமே என்னதான் உயிர் போகும் பிரச்சனையென்றாலும் மலசலகூடக் கதவுப் பிடிகள், மலசலகூடப் பொத்தான்கள் எதைத் தொட வேண்டிய தேவைகள் வந்தாலும் கைகளை சோப் போட்டுக் கழுவி விடுவேன். யாருக்குக் கை கொடுக்க வேண்டிய தேவை வந்தாலும் கொடுத்த பின் அவர்களுக்குத் தெரியாமல் எப்படியாவது கைகளைக் கழுவி விடுவேன்.
இப்படி எனது சுத்த விடயம் பற்றி தினமும் 2-3 தடவைகள் குளிப்பதிலிருந்து இன்னும் நிறையவே சொல்லிக் கொண்டு போகலாம். இதனால் ஹநானே ஒரு பிரச்சனை´ என்பது போல என்னைப் பார்த்தவர்கள், கேலி பண்ணியவர்கள் எல்லாம் இப்போது கோரோனாப் பயத்தில் என்னைப் போல இல்லாவிட்டாலும் அடிக்கடி கைகளைக் கழுவுகிறார்கள்.“

1,523 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *