மலையகத்தின் இன்றைய கல்வி நிலை
மலையக பெருந்தோட்ட மக்கள் சமூகமே இலங்கை பொருளாதார அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பு நல்குகின்றது என்றால் அது மிகையல்ல. அதுபோல தற்போது கல்விதுறை விருத்திக்கும் மலையகம் தன் பங்கை சற்று பெருக்கிக்கொண்டுள்ளது என்றுதான் கூற வேண்டும். 1940 களில் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட முறையான இலவச கல்வித்திட்டத்துக்குள் மலையக தோட்டப்புற பாடசாலைகள் சுமார் 30 வருடங்கள் கடந்த பின்னே இணைய முடிந்தது. இருந்த போதும் கல்வித்துறையில் இன்னோரன்ன பல சாதனைகளை படைத்து தன் தடத்தை அழுத்தப்படுத்தி வருகின்றது.. இத்தாமதமே மலையக கலவியின் வெற்றிக்கு வளர்ச்சிப்படிக்கட்டுக்கள்.
எம் மலையக பிள்ளைகளை சாதிக்க தூண்டும் திறவு கோல் அவர்களின் சிந்தனை தான். தன்னை சார்ந்தும் தன் சமூகம் சார்ந்தும் அவர்கள் சிந்திப்பதால் அடிமைகளான காலம் போய் இன்று பல துறைகளில் பற்பல பரிமாணங்கள் பெற்று மிளிர்கிறார்கள். இதற்கு கல்வியே, கல்வி தரும் அறிவே மூலக்காரணம். எனவே இலங்கை மலையக கல்வியின் வளர்ச்சிக்கு நீண்டகாலம் காத்திருக்க தேவையில்லை. அதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளில் தட்டிக்கொடுத்தாலே போதும். வளங்களை பெற்றுக்கொடுத்தாலே போதும்.. கட்டிடம் இல்லாத, கதிரை, மேசை இல்லாத , போதியளவு ஆசிரியர்கள் இல்லாத எத்தனையோ பாடசாலைகள் எம் மலையகத்தில் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. என்றாலும் அவர்கள் சாதிக்க தவறுவதில்லை. இச்சாதனைகளை இரட்டிப்பாக்க மலையகத்தை, மலையக பாடசாலைகளை செழிப்பாக்குங்கள் போதும். நாளை தலைநிமிரும் எம் மலையக சமூகம்.
ஒரு சமூகத்தின் நிலைமாற்றத்தில் அல்லது சமூக நகர்வில் கல்வி கற்றோர்கள் குறிப்பாக பட்டாதாரிகள் எண்ணிக்கை மிக முக்கியம் ஆகிறது. மலையகத்தை அடையாளப்படுத்தும் பல பட்டதாரிகள் வைத்தியதுறை, சட்டத்துறை, பொறியியல் துறை, வணிகதுறை கணக்கியல் துறை என தமது தடத்தை பதித்துள்ளனர். மேலும் மிகச்சிறந்த எழுத்தாளர்களும் எமது சமூகத்தை முன்னேற்றும் வகையில் உருவாகியுள்ளனர். அந்தவகையில் பாடசாலை தவிர மாணவர்கள் வெளிவாரியாகவும் தனது கல்வியை தொடர்ந்து பட்டங்களை பெற்று மலையக கல்வியை இன்னும் வளர்ச்சி கட்டத்தில் வைக்கின்றனர். உதாரணமாக ONLINEகற்கைகள் , வெளிவாரி கற்கை நெறிகள், NVQ டிப்ளோமா, போன்ற பல.
தற்போது மலையக சூழலில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு துறை சார்ந்த சாதனைகள் தலைதூக்குகின்றன. உதாரணமாக மலையகத்தை பிறப்பிடமாக கொண்ட தர்ஜினி சிவலிங்கம் . இவர் இலங்கையின் தேசிய வலைப்பந்தாட்ட அணியின் நம்பிக்கை நட்சத்திரமாய் ஜொலிக்கும் மலையகப் பெண். இவர் “வேர்ல்ட் போஸ்ட் சூட்டர் அவர்ட்” பெற்ற பெண்மணி. மேலும் லபுக்கலை பெரட்டாசி தோட்டத்தை சேர்ந்த சின்னக்கருப்பன் பவானிஸ்ரீ என்ற சிங்கப்பெண் அண்மையில் நடந்து முடிந்த தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் கத்திச்சண்டை போட்டியில் வெற்றிபெற்றார். இவ்வுலகத்தில் நம் மலையகத்தின் சொத்து சுழற்பந்து வீச்சாளர் ,முத்தையா முரளிதரனை தெரியாதோர் யாருமுண்டா? .. இதுவே மலைகத்தின் வளர்ச்சிக்கு சான்றல்லவா.மேலும் நுவரெலியா பிரதேசத்தின் லபுக்கலை கொண்டகலை தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட மாதவன் ராஜ்குமாரன் தெற்காசியாவை வென்ற கட்டழகராக திகழ்கிறார்.
மேலும் தமிழ் எழுத்து துறையில் இளைப்பாறிய மல்லிகப்பூ சந்தி திலகர் ஐயா, அண்மையில் காலமான மல்லிகை சி குமார் , அமரர் சாரல் நாடன் ஐயா ,குறிஞ்சி தென்னவன் ஐயா, சிவனு மனோகரன் ஐயா, சி.வி.வேலுப்பிள்ளை ஐயா, போன்றோரும் இன்னும் தனது பணியில் சிறந்து விளங்கும் மலையகத்தின் மைந்தன் மொழிவரதன் ஐயா, வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற தெளிவத்தை ஜோசப் ஐயா ( இவர் ஊவாவை பிறப்பிடமாக கொண்டாலும் மலையகம் பற்றியே அதிகம் பேசியவர்). மேலும் சு. முரளிதரன் ஐயா, லெனின் மதிவாணன் ஐயா, ஆர். சிவலிங்கம் ஐயா என பெருந்தகைகள் பலரும் தடம் பதித்துள்ளனர்.
1965 ஆம் ஆண்டுதான் மலையக மாணவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்பு கிட்டியது என மலையக வரலாறு பேசும். இவ்வாண்டுதான் மலையகத்திலிருந்து நேரடியாக பல்கலைக்கழகத்துக்கு 8 பேர் தெரிவாகினர். அதிலிருந்து தொடர்ந்து வந்த ஆண்டுகளின் மலையக மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி வெறும் 1 மூ சதவீதமாகும். படிப்படியான முன்னேற்றம் கண்டு இன்று சுமார்
10 மூவீதத்துக்கு மேல் மலையக மாணவர்கள் தெரிவாகுகின்றனர். இது எம் கல்வியின் வளர்ச்சி போக்கை காட்டுகிறது. 2017ஃ2018 பல்கலைக்கழக அனுமதி மொத்தம் 31451 ஆக இருக்க இதில் எம்மலையக மாணவர்கள் 3232 இது மொத்தத்தில் 10.28 வீதமாகும். அதுபோல 2018ஃ2019 இல் மலையக மாணவர்கள் அனுமதி 3247 ஆகும்.
எனவே கடந்த ஆண்டறிக்கைகளை ஆய்கையில் எமது மலையக கல்வி வெற்றி கண்டுள்ளதோடு தனக்கென ஓர் இடத்தை தக்கவைத்துள்ளமை அறியமுடிகின்றது.
2019 தரவுகளின்படி இலங்கையில் மலையக்கல்வி ஓர் தனி இடத்தை எட்டிப்பிடித்துள்ளமை கண்கூடு. கல்விக்கான குறைபாடுகள் நீக்கப்பட்டு நவீன வசதிகள் மலையகத்தின் வசமானால் காலப்போக்கில் கல்வியில் முதலாம் இடம் மலையகத்தை வாவென அழைப்பதும் சாத்தியமே
3,495 total views, 3 views today