பெருநினைவின் சிறு துளிகள்
பல இடிதாங்கிய மடி ஒன்று நாம் கடந்துவந்த காலத்தை படிப்பதற்கும்; அவற்றை எதிர்கால சந்ததியினர் அறிவதற்குமான ஒரு சிறந்த படைப்பே பெருநினைவின் சிறு துளிகள் எனும் இந்நூல்.
இந்த நூலை ஆக்கியவர், திருமதி.சிவா தியாகராஜா (23.04.1934) ஈழத்தில் பருத்தித்துறை, புலோலி மேற்கு, அத்தியடியைப் பிறப்பிடமாகக்கொண்டவர். இவரது முழுப்பெயர் சிவகாமசுந்தரி. இவரை சிவா,சுந்தரி,மொறிஸ் அம்மா என்றெல்லாம் அழைப்பார்கள். 1998 இலிருந்து யேர்மனியில் வாழ்ந்துவரும் இவர் 1999 இலிருந்து தமிழாலய ஆசிரியராகப் பணியாற்றி புலத்திலும் தமிழ் வளர அருந்தொண்டு புரிந்தவர். தேசப்பற்று மிகுந்த இவர் தனது எட்டுப்பிள்ளைகளில் மூவரை (பிறேமராஜன் (தீட்சண்யன்) பரதராஜன் (மொறிஸ்) பாலசபாபதி (மயூரன்) ஈழவிடுதலைப்போருக்கு ஈந்தவர்.
விடுதலைப் போர்மூண்ட காலத்தில் தன் பிள்ளைகளை மட்டுமன்றி களத்தில் நின்ற பிள்ளைகளையும் தனது பிள்ளைகளாகக் கண்டவர். இந்நூலை வாசிக்கும் போது அன்றைய போர்க்கால சூழல் நம் கண்முன்னே விரியும்.
இதில் அவரது எழுத்தும் நடந்த கதைகளைச் சொல்லும் விதமும் யுத்தகாலத்தை நேரில் அனுபவித்தவர்கள் மட்டுமன்றி அறியாதவர்களும் நேரில் காண்பது போன்று விபரித்து உள்ளார்.
தனது மகன் மாவீரனானபோது இராணுவ முகாமுக்கு அவன் வித்துடலை பெறச் சென்ற காட்சியின் சிறுதுளியை இங்கு பகிருகின்றேன்.
‘எனக்கு என் பிள்ளையின் வித்துடல் வேண்டும்’ நான் மந்திகை இராணுவ முகாம் நோக்கிச் செல்வதற்குத் தயாரானேன். இராணுவம் நிச்சயம் என்னை ஏதாவது செய்து விடும் என்று எல்லோரும் அச்சப் பட்டார்கள். நான் எல்லோரையும் அமைதிப்படுத்திவிட்டு இராணுவ முகாம் நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
இராணுவ சென்றிப் பொயின்ருகளிலிருந்து துப்பாக்கி முனைகள் என் பக்கம் திரும்புவது எனக்கு நன்றாகத் தெரிந்தது. அடுத்து வரும் நிமிடங்களில் எதுவும் நடக்கலாமென்பதை நான் நன்கு உணர்ந்து கொண்டேன். ஆனாலும் என்னைத் தைரியமாக இயங்க வைக்கும் ஏதோ ஒரு சக்தி அப்போது என்னை ஆட்கொண்டிருந்தது. எதற்கும் முகம்
கொடுக்கத் தயாராகவே நான் முகாம் நோக்கி நடந்து கொண்டிருந்தேன். அரைவாசித் தூரம் நடந்து கொண்டிருக்கும் போதே இராணுவக் கொமாண்டர்கள் முகாம் வாசலுக்கு வந்து என் வருகையைப் பார்த்துக் கொண்டு நிற்பதைக் கண்டேன். வாசலை அண்மித்ததும் “நான் மொறிஸின் அம்மா” என்றேன்.
நாம் வாழும் காலத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கும் ஒரு வீரத்தாயின் வரலாறு. அதுமட்டுமின்றி பிள்ளைகளின் விடுதலை வேட்கையை காட்ட ஒரு குறிப்பு இதோ.
“நான் போர் முனையில் குருதி வெள்ளத்தில் நிற்கிறேன். மீண்டும் நிச்சயமாகத் திரும்பி வருவேன். ஆனால் உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே” – கப்டன் மொறிஸ் (பரதன்) இது அவன் சொன்ன வரிகள். அந்த வரிகளை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன் அவை வெறும் வரிகள் அல்ல. அது அவனது மனதினுள் இருந்த உண்மையான எதிர்வு கூறல், அவன் அதனைக் கூறும்போது சிரித்த முகத்துடனேதான் கூறுவான்.அதனால் அதன் கனத்தை அப்போது என்னால் உணர முடியவில்லை. இப்போது எல்லாவற்றையும் யோசித்துப் பாரக் கிறேன். என்கிறார் இந்நூல் ஆசிரியர்.
இந்நூலில் ஒவ்வோரு சம்பவம் விரியும் போதும் ரோஜாப்பூச்சம்பலும் இடியப்பமும், மூலவருத்தத்திற்கு கத்தாழைச் சாறு இப்படி நம் மண்ணின் பாரம்பரிய மருத்துவம் மற்றும் உணவு வகைகள் என்று பல பயனுள்ள தகவல்களும் கிடைக்கின்றன. இப்படியான தகவல்களை அவரது பெத்தப்பாவும் பெத்தம்மாவும் என்ற அத்தியாயத்தில் அறியலாம்.
வயது போய்விட்டது இனி நமக்கு என்ன, என்று இருந்துவிட்டுபோவோம், என எண்ணும் சராசரி மனிதரை விட எங்கள் அன்னை உச்சத்தில் இருப்பது கண்டு அவரை வெற்றி மணி வாழ்த்தி மகிழ்கின்றது. இப்படி ஒரு அரிய நூலை வெளியிட்ட மன ஓசை நிறுவனத்திற்கும், அன்னையின் படத்தை அட்டைப்படத்தில் அற்புதமாக வரைந்த ஓவியர் மூனா அவர்களுக்கும், வெற்றிமணியின் வாழ்த்துகள்.
பி.குறிப்பு: இந்நூலாசிரியர் வெற்றிமணியின் நீண்டநாள் வாசகி. அவர் இச்செய்தியையும், தன்கரத்தில் தாங்கி வாசிக்கும் வேளை தமிழர் இல்லம் எங்கும் ஒலிக்கட்டும் வெற்றிமணி. என்ற வாசகம் அவர் உள்ளத்திலும் ஒலிக்கும் பேறு பெறும்.(-சிவப்பிரியன்.யேர்மனி)
-திருமதி.சிவா தியாகராஜா
1,335 total views, 3 views today