‘The Colonel’s Lady’
சிறுகதை பற்றிய பதிவு:
கவிதா லட்சுமி – நோர்வே
ஒரே நாளில் தொடர்ந்து இரண்டு மூன்று நூல்கள் படித்த காலம் என ஒன்றிருந்தது.
இப்பொழுதெல்லாம் எதைப் படித்தாலும் ஈடுபாடின்றி பக்கங்களைப் புரட்டுவது வழமையாகிறது. சில பக்கங்களைத் தாண்டுவதற்குள் கண்கள் தானாகவே மூடிக் கொள்கின்றன.
இரண்டு நாள்களுக்கு முன்பு வாசிக்கத் தொடங்கிய ஒரு சிறுகதைத் தொகுப்பு எனக்கு மீண்டும் பழையபடி வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
இத்தொகுப்பிலுள்ள சில கதைகளைப் படித்து முடித்த நிலையில் அதிலுள்ள ஒரு கதையைப் பற்றி பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது.
கணவன் மனைவி என்ற இரு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட இந்தக் கதை ஆண்-பெண் நுண்ணுணர்வுகளைப் பற்றிப் பேசுகிறது.
கேணல் ஜோர்ஜ் பெரிகிரின் உயரமான திடகாத்திரமான, கம்பீரமான தோற்றமுடையவன். அவனது மனைவி எவி மெல்லிய உடல்வாகும், சாதாரண அழகும், அழகை மேம்படுத்திக் காட்டாத இயல்பான தன்மையும் பொறுமையும் மிக்கவள்.
விருந்தினர்களை உபசரிப்பதிலும் வீட்டை அழகுபடுத்தி நிர்வகிப்பதிலும் வல்லவள். அவர்களுக்கு குழந்தை இல்லை. அந்த வீட்டில் அவர்கள் இருவர் மட்டுமே வாழ்கின்றனர்.
அவர்கள் வாழும் அவ்வூரில் கேனல் எல்லோராலும் மதிக்கப்படும் ஒரு மனிதராக இருக்கிறார்.
பிரமிடுகள் சிதையும் போது…
இந்நிலையில் கேணலின் மனைவி புனைப்பெயரில் ஒரு கவிதை நூல் வெளியிடுகிறாள். இந்தப் புள்ளியிலிருந்தே கதை தொடங்குகிறது.
எப்பொழுதும் தன் மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத கேனலுக்கு அவள் கவிதை எழுதி அதையும் புத்தகமாக வெளியிட்டிருக்கிறாள் என்பதே நகைப்புக்குரியதாக இருந்தது. மேலும் அப்படி என்ன பெரிதாக எழுதிக் கிழித்திருப்பாள் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.
ஆனால் கேணலின் எண்ணத்திற்கு மாறாக எல்லோரும் எவியின் கவிதைப் புத்தகத்தை கொண்டாடத் தொடங்கி இருந்தனர். காதலின் நுண்ணுர்வுகளை இப்படி யாரும் பல காலங்களாய்ச் கவிதையில் சொல்லியதில்லை என அவள் கவிதைகளை வியந்தோதினர். இலக்கிய உலகமும் அவள் கவிதைகளையும் அவளையும் கொண்டாடிக் கொண்டது.
கேணலின் மனைவி என்று அறியப்பட்ட எவி இப்போது கவிஞர் எவி என்று மரியாதையாக அழைக்கப்பட்டாள். எல்லோரும் கேனலை இவர்தான் எவியின் கணவர் என்று சொல்லத் தொடங்கினர்.
கேணல் ஜோர்ஜ் பெரிக்ரினுக்கு தன் மனைவியின் செல்வாக்கு ஒருவித ஒவ்வாமையையும் சினத்தையும் உண்டாக்குகிறது.
எப்படி இருந்தாலும் ஆணுக்கு அடங்கியவள் தான் பெண் என்னும் கருத்தில் அசைக்க முடியாத எண்ணமுடையவராகத் தான் கேணல் எவியை நடத்தி வந்தார். அதனாலேயே அவள் எழுதிய கவிதைப் புத்தகத்தைப் அதுவரை படிக்காமல் இருந்தார்.
அவளுடைய எதுவும் உதாசினத்தோடே பார்க்கப்பட்டு வந்த நிலையில் அவர் படிக்கப் போவதில்லை என்று தெரிந்து அவர் மேசையிலிருந்த நூலை அவளே அகற்றிவிட்டிருந்தாள்.
அதனால் ஆவல் கொண்ட கேணல், லண்டன் சென்றிருந்தபோது தன் மனைவி எழுதி இருந்த கவிதைப் புத்தகத்தை தேடி வாங்கிப் படித்துப் பார்க்கிறார். முதலில் படித்த போது அவருக்கு எதுவும் புரியவில்லை. இதையா சிறந்த கவிதைகள் என்று கொண்டாடுகிறார்கள் என வியப்படைந்தார். அவர் அறிவுக்கு எட்டிய கவிதைகள் போல அல்லாமல் ஏதோ கிறுக்கல்கள் போல இருப்பதாக உணர்ந்தாலும் கவிதை வரிகள் ஒரே அளவில் இருப்பதைப் பார்த்து தனது பள்ளிப் பருவ கவிதை போல சற்று இருப்பதால் திருப்தி கொள்கிறார்.
ஆனாலும் ஏன் கொண்டாடுகிறார்கள் எனப் புரியாமல் மீண்டும் மீண்டும் படிக்கிறார்.
கேணலுடைய கருத்துக்களைப் போல் அல்லாமல் அவரைச் சுற்றி உள்ள மனிதர்களும், இலக்கிய விமர்சகர்களும் கவிதைத் தொகுதியின் கனதியைப் பற்றி பேசுகின்றனர். கவிதை பேசும் காதல் உணர்வுளில் ஆழ்ந்து காதலாகி கசிந்து போகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் போது கேணலுக்கு இது தன்னுடைய மனைவியின் காதலாக இருக்குமோ என்ற எண்ணம் மெல்லத் துளிர்விட்டு ஒரு பெரிய மனப்போராட்டத்தை அவருக்குள் ஏற்படுத்தி விடுகிறது.
ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் எத்தனை காதலிகளோடும் வாழலாம் என்ற எண்ணம் கொண்ட கேணலுக்கு தன் மனைவியையும் ஒருவன் காதலித்தான் என்பது கற்பனை செய்து பார்க்கக் கூட அவர் மனம் விரும்பவில்லை.
ஆண் என்றால் இப்படித்தான் கேளிக்கைகளை விரும்புபவனாகவும் நிறைய பெண்களோடு தொடர்புகள் வைத்திருப்பதற்கு நியமம் கற்பித்தாலும் தனது மனைவியை ஒருவன் காலித்திருக்கக் கூடும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதுவும் மிகச் சாதாரணமான அழகுள்ள, வசீகரமற்ற, எந்த ஒப்பனையும் செய்து தன்னை முன்னிலைப்படுத்தாத தனது மனைவியிடம் என்னதான் இருந்திருக்கக்கூடும் என்ற கேணலின் எண்ணம் கதையை ஆண் மனத்தின் சொல்ல முடியாத போராட்டத்தை ஆணாதிக்க மனோபாவத்தை ஆண் மனத்தின் இருண்ட பகுதியில் வெளிச்சம் பாய்ச்சுகிறது.
மேலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத சூழலில் அன்றாட வாழ்வை நகர்த்தும் ஒரு அறிவார்ந்த பெண்ணின் நுண்ணுணர்வுகளையும் மிக அழகாக வெளிப்படுத்துகிறது.
கவிதைத் தொகுப்பில் காதலன் இறந்துவிடுகிறான். அவன் யாராக இருக்கக் கூடும் என்பதை கேணலைப்போலவே நமக்கும் ஆவல்மிகுகிறது.
பிறருடைய நுண்ணுணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாத மனிதர்கள், தமது நுண்ணுணர்வுளைப் பகிர்ந்து கொள்ள முடியாத வாழ்க்கைக்குள் இருக்கும் மனிதர்கள் என அவரவர் பரிதாபங்களும் பாவப்பட்ட வாழ்தல்களுமாய் சில பக்கங்களில் பேசப்படும் ‘The Colonel’s Lady’ என்னும் இச் சிறுகதை வில்லியம் சோமர்செட் மாமின் மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று.
காப்புரிமை காரணமாக இணையத்தில் இவரது கதைகளைப் பெறுவது கடினம். நூலாக மட்டுமே வாங்கிப் படிக்க முடியும். எவியின் கவிதை நூலின் தலைப்பு: பிரமிடுகள் சிதையும் போது… Name : William Somerset Maugham
1,200 total views, 3 views today