இழக்கப்போகிறோமா ஈழத்தின் இன்னும் ஒரு நிலத்தை?
-சர்மிலா வினோதினி B.A.Geo,Spl,Dip in Mass Media, MSc-தாயகம்
நாம் வாழும் இந்தப் பூமியின் நிலமும் நீரும் பல வழிகளில் தன்னை மீள் அமைத்துக் கொள்கிறது. அதன் காரணமாக அதன் இருப்பு உறுதி செய்யப்படுகிறது. இப்படி மீளமைக்கப்படும் வளங்களின் செறிவும் அதன் நிலைத்திருப்புமே வளமான ஒரு நாட்டின் எதிர்காலத்தினை தீர்மானிக்கின்றன. இந்நிலையில் ஒரு நாடு தான் கொண்டிருக்கிற வளங்களில் சரிவுகளை சந்திக்குமாக இருந்தால் அது அந்த நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பொருளாதார நிலமைகளில் தாக்கங்களைச் செலுத்தும்.
இவ்வாறு இலங்கையின் சுற்றுச்சூழல் கட்டமைப்பில் தாக்கங்களை நிகழ்த்தக்கூடிய பல விடயங்கள் நாளுக்கு நாள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமானது மண் கனியவள அகழ்வாகும். இலங்கையின் அனேகமான தாழ் நில கரையோரப் பிரதேசங்களில் மண் அகழ்வு இடம்பெற்று வருகிறது.
இவற்றில் அண்மைக்காலத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவனத்தினை ஈர்த்த விடயமாக மன்னாரின் இல்மனைற் உட்பட்ட கனிய வளங்களை அகழ்வதற்கான பரிசோதனை முயற்சிகள் காணப்படுகின்றன.
மன்னார் தீவும் கனிய வளங்களும்.
பெருநிலப் பரப்பு, தீவகம் என்று இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டிருக்கிற மன்னார் மாவட்டத்தின் தீவக நிலப்பரப்பானது ஒப்பீட்டளவில் அதிக சனத்தொகையினை பதிவு செய்கிறது. சுமார் 28 கிலோமீற்றர்கள் நீளமும், 06 கிலோ மீற்றர்கள் அகலமும் கொண்டு சுமார் 140 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் பல்லுருவத் தன்மையான கடற்கரைகளையும் கொண்டு காணப்படுகிறது. இங்கிருக்கக்கூடிய காணிப்பயன்பாட்டு கோலங்களில் குடியிருப்புக்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு உட்படுத்தப் படுகின்ற நிலங்கள் தவிர ஏனைய நிலப்பயன்பாட்டில் இங்குள்ள மணற்குன்றுகளும் கரையோர மணல் வளங்களும், பனை வளமும், கண்டற்தாவரப் பரம்பலும் முக்கியம் பெறுகிறன.
இவற்றில் இங்குள்ள மணல் குன்றுகள் சுமார் 8000 வருடங்களுக்கு முற்பட்ட புவியியல் வரலாற்றுக் காலம் தொட்டு இயற்கை காரணிகளால் இப்பிரதேசத்தின் கரையோரங்களில் படியவிடப்பட்டுள்ளன என்பதை புவிச்சரிதவியல் ஆய்வுகள் உறுதிசெய்கிறன. அத்துடன் இக்கனிய வளங்களின் படிவிற்கு செல்வாக்கு செலுத்திய காரணிகளில் மன்னார் தீவின் புவியியல் அமைவிடமும் பிரதான பங்கு வகிக்கிறது. வரலாற்றுக் காலம் தொடக்கம் மெல்ல மெல்ல நிகழ்ந்த இக் கனிய மணற் படிவுகள் தீவின் கரையோர பாதுகாப்பில் முதன்மை வகிப்பவையாகவும் காணப்படுகின்றன. திரளான இக் கனிய மணற் படிவுகளை மன்னார் தீவின் வடக்கு மற்றும் வட கிழக்கு கரையோரங்களிலும் பேசாலை மற்றும் தலைமன்னாரை அண்டியுள்ள பல பிரதேசங்களிலும் அவதானிக்க முடிகிறது.
கனியவள அகழ்வு முயற்சிகள்.
2013, 2014 ம் ஆண்டுகளில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் வடகிழக்குப் பிரதேசங்களில் காணப்படும் நிலம் சார்ந்த வளங்களை பிணக்குகளற்று உரிய முறையில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட காணிப்பயன்பாட்டு வரைபடங்கள் பிரதேச ரீதியிலும் மாவட்ட ரீதியிலும் தயாரிக்கப்பட்டன.
இந் நிலையில் 2010 மற்றும் 2014ம் ஆண்டு காலப்பகுதியில் அவுஸ்ரேலியாவின் பேத் பகுதியை தலைமை அலுவலகமாக கொண்டுள்ள ரைற்றானியம் சான்ட் நிறுவனத்தின் ஈடுபாட்டுடன் புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் அனுமதியுடன் தீவிலுள்ள கனிய மணல் தொடர்பான துளையிடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் தொடர் ஆய்வு நடவடிக்கைகள் 2016, 2017ம் ஆண்டுகளிலும் நிகழ்த்தப்பட்டு இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட மண் மாதிரிகள் தென்ஆபிரிக்காவின் விசேட கனியவள ஆய்வுகூடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு 2018 ,ல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆய்வின் முடிவில் தடித்த படை அமைப்பில் இல்மனைட் உட்பட்ட முக்கிய கனிய வளங்கள் அடையாளப்படுத்தப் பட்டுள்ளதுடன் அவற்றினை அகழ்ந்து எடுப்பதற்கான முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அகழ்வு தொடர்பான அரசின் நியாயப்படுத்தல்கள்
போருக்கு பின்னரான இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் சுற்றுலாத்துறையினை ஊக்குவித்தல் தொடர்பாக அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், மன்னார் தீவின் இக் கனிய வளங்களுக்கான சர்வதேச சந்தையை சீனா உட்பட்ட நாடுகளில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடுகிறது. அதே நேரம் சுரங்க மற்றும் கனியவள அகழ்வின் மூலம் சுமார் 2.9 வீதமான மொத்த உள்நாட்டு உற்பத்தி பெறப்படுவதாகவும், மன்னாரில் மேற்கொள்ளப்பட இருக்கும் கனியவள அகழ்வின் மூலம் இம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வீதததில் அதிகரிப்பினை ஏற்படுத்தி பொருளாதாரத்தை உயர்த்தலாம் எனவும் நியாயப்படுத்தப் படுகிறது.
சுற்றுச்சூழல் நிலமைகள்
காலநிலை மாற்றத்தால் அழிவுகளை சந்திக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலையில் இருக்கிறது. பொருளாதாரம் பணம் என்பதற்கு அப்பால் ஒரு பிரதேசத்தின் புவியியல் அமைவிடம் மற்றும் சுற்றுச் சூழல் சார்ந்த காரணிகளின் இருப்பு தொடர்பாக அதீத கவனத்தினை குவித்தலே இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதை தடுத்து நிலையான வாழ்வியலை பேணிக்கொள்வதற்கான வழியாகும். இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தின் தீவகப் பிரதேசத்தில் காணப்படும் மண்படைகள் அகழ்ந்து எடுக்கப்படுமாக இருந்தால் கடற்கரைப்பிரதேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படும். கடலரிப்பு துரிதப்படுத்தப்படும், மண்ணரிப்பு மற்றும் இயற்கையான காற்றுத்தடைகளாக விளங்குகின்ற கண்டல்களும் பனைமரங்களும் வலுவிழப்பதோடு அவற்றின் அழிவிற்கும் வழிகோலும்.
புவியின் கண்ட மற்றும் சமுத்திரத்தகடுகளின் அமைப்பியலின்படி இந்துமா சமுத்திரத்தில் இலங்கைக்கு அண்மையில் காணப்படுகின்ற சமுத்திர தகடுகளில் வெடிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் புவிநடுக்கம் மற்றும் சுனாமி அனர்த்தஙகளும் எழுவதற்கான சாத்தியஙகள் உள்ளன, இவ்வாறான ஒரு அனர்த்தம் எழுமாக இருந்தால் மன்னார் தீவின் இருப்பு என்பது கேள்விக்குறியாக மாற்றமையும்.
தவிர, கடல் மட்டத்தோடு ஒப்பிடுகிறபோது இயல்பிலேயே தாழ்நிலமாக காணப்படுகின்ற தீவகத்தின் வெள்ள அனர்த்த நிலமைகள் துரிதப் படுத்தப்படுவதோடு தரைக்கீழ் நீர்வளத்தின் இருப்பிலும் தாக்கங்களை செலுத்தும், அத்துடன் தீவகத்தின் தரைக்கீழ் நீர்ப்படுக்கைகளின் புவிச்சரிதவியல் அமைப்பினை நோக்குகின்றபோது இவை மண் படைகளுக்கு கீழ் சேமிக்கப்பட்டிருப்பவை, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா போன்ற பிரதேசங்களின் நீர்ப்படுக்கைகளோடு ஒப்பிடுகிறபோது முற்றிலும் வித்தியாசமானவை. எனவே இக்கனிய மணல் அகழ்வானது கடல்நீர் ஊடுருவலுக்கு துணை புரிவதோடு தரைக்கீழ் நீர் உவர் அடைவதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்தும். வைகாசி ஆனி உட்பட்ட கோடைகாலங்களில் தீவின் நீர்வளம் குறைந்து செல்வதும் நீர்த்தட்டுப்பாடுகள் எழுவதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது.
மக்களின் விழிப்புணர்வும் எதிர்வினையும்.
கோடையிலும் மாரியிலும் இயற்கை அனர்த்தங்களைச் சந்தித்து வாழ்கின்ற மக்களை இக் கனிய வள அகழ்வானது மேலும் பாதிக்கும் என்பதை அறிந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பொது அமைப்புக்களும் இணைந்து நிகழ்த்திய கவன ஈர்ப்பு போராட்டத்தின் விளைவாக இக் கனிய வள அகழ்வு முயற்சிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பதை அறிய முடிகிறது.
எதிர்காலமும் இருப்பும்
ஈழத் தமிழர்கள் சார்ந்து இருக்கக்கூடிய ஒவ்வொரு அடையாளங்களும் உருக்குலைக்கப்பட்டு கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகின்ற இந்தக் காலத்தில் வரலாற்றுக் காலத்துடன் தொடர்பு படுகின்ற நிலத்தையும் இந்த நிலத்தின் இயற்கை வளங்களது இருப்பினையும் உறுதிப்படுத்த வேண்டும்.
ஒரு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி செயற்பாடுகள் அந்தப் பிரதேச மக்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கும் எனில் அவை தொடர்பாக மீள் பரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகிறது. எனவே மன்னார்த்தீவின் கனியவள அகழ்வு தொடர்பாக மீள் பரிசீலனை செய்து மக்களின் இயல்பான வாழ்வினை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளில் குறித்த பிரதேச மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் கவனம் எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களினதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களினதும் வேண்டுகோளாக இருக்கிறது.
1,490 total views, 3 views today