தாய்மை ஒரு வரம்!
இதனை வாசிப்போர் அனைவருக்கும் தமது தாய்மாரைப் பற்றிய அருமை தெரியும். இதனால் ஒரு நெகிழ்ச்சி தோன்றும். இந்தச்செய்தி என் கண்முன் நிகழ்ந்தது .நான் நினைத்து பெருமை கொள்வதும் வருந்துவதும் தான். நாங்கள் இருந்த வீட்டிற்குப் பக்கத்தில் தான் அவர்களது வீடு. எங்களுக்கு அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை.பார்த்துச்சிரிப்பது கூட இல்லை.அவவவுக்காக நான் இன்றும் கவலைப்படுகிறேன்.
காலம் எவ்வளவு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. நாம் வந்த காலத்தில் அவர்களின் வீட்டுத் தோட்டத்தில் கதிரையைப் போட்டுக் கொண்டு ஒரு முதியவர் இருந்து முழிசிக் கொண்டிருப்பார்.பார்க்கவே பயமாக இருக்கும்.
“அந்த மனிதர் எப்பவும் இப்படித்தான்.ஒருத்தரோடையும் கதைக்காது.மனுசி நல்ல மனுசி.அந்தாளுக்குப் பயத்தில ஆரோடையும் கதைக்காது.அவர் இல்லாத நேரத்தில இந்த வேலிமட்டும் வந்து கதைக்கும்.”கீழ் வீட்டுக்கிழவி றேசி இதை என்னிடத்தில் சொன்னது.
பிள்ளைகள் இல்லையா?
“ஏனில்லை இரண்டு பெடியள் .ஒருவன் உங்கள் நாட்டுப் பக்கம் போனவன் திரும்பி வரவேயில்லை.ஒருவன் பேர்லினில் பாராளுமன்றத்தில வேலை. அவன் எப்பாலும் இருந்திற்று வருவான்.மற்றவன் இந்தியாவில் இருப்பதாகக் கேள்வி.இந்த மனிசன்ர குணத்தால அவன் திரும்பி வர விரும்பவில்லை. இருபத்தைந்து வருசம் இருக்கும். இந்து மதம்மாறி சாமியாராகி விட்டானாம்.
வேவா, என்னிடம் சொல்லிக் கவலைப்படுவா.என்று றேசிஎன்னிடம் சொல்லி இருக்கிறா. வேவாதான் அவவின்ர பெயர்.
சில வருடங்களில் அந்த மனுசனும் செத்துப் போய்விட்டது. அது எனக்குத் தெரியாது.
எங்க அந்த ஆளைக் காணேல்லை என்று றேசியைக் கேட்டபோதுதான். அவர் இறந்த செய்தி எனக்கே தெரிஞ்சது. இத்தனைக்கும் பக்கத்து வீடு.
எங்கள் வீட்டைச்சுற்றி இருப்பவர்கள் எங்களுடன் ஆரம்பத்திலிருந்ததை விட நட்போடு இருந்தார்கள். வேவாவும் சிரிப்பில் ஆரம்பித்து என்னுடன் நிறையக் கதைப்பா. தனது மகன் இந்தியாவில் பெங்களூரில் இருப்பதாகவும், எத்தனை வருடங்கள் நான் அவனைப் பார்க்கவில்லை .என்ர வாழ்க்கையில் அவனைப் பார்ப்பனா? இந்த நினைவுகள் தான் தினம் இப்போது. நீ இந்தியா போனால் என்னையும் கூட்டிக் கொண்டு போறியா? என்று சந்திக்கும்போது கேட்பார். அப்போது அவரின் கண்களைப் பார்க்க முடியாமல் இருக்கும். இந்த வேளையில் என்ர அம்மாவையும் நினைப்பேன். அந்தக் கவலை எத்தகையது என்பதை தாயை, நீண்ட காலம் பிரிந்திருக்கும் அனைவருக்கும் இருக்கும்.
ஒருநாள் தானும்,சினேகிதியும் மகனைப் பார்க்கப் போவதாகச் சொல்லிச் சந்தோசப்பட்டா.தனக்கு விமானத்தில் பறக்கப் பயம்.அதனால் தான் அவவைக் கூட்டிக் கொண்டு போறன் என்றார். நானும் அவருக்கு வாழ்த்துக் கூறினேன்.
எனக்கும் மனம் சந்தோசமாக இருந்தது. மகனைக்காணாது ஏங்கிய அந்தத் தாயின் தவிப்பை அறிந்தவன் நான்.
என் மனைவியிடம் அதனைச் சொல்லி மகிழ்ந்தேன்.
திரும்பி வந்தபின். தோட்டத்திற்குள் நின்ற என்னை பரபரப்போடு அழைத்தார். மகனைச் சந்தித்த பூரிப்பு அவர் முகத்தில் தெரிஞ்சது. எடுத்த படங்களைக் காட்டி மகிழ்ந்தார்.மகனுடய பெயர் எறிக் என்பதை முன்னமே சொல்லியிருந்தார்.
சாமியாரைப் போல் காவி உடையில் இருந்தான் எறிக்.”எனி செத்தாலும் பரவாயில்லை.என்ர பிள்ளையைப் பார்த்திற்றன்.”
ஒருநாள் அவசரமாக்க் கூப்பிட்டார்.அவர் முகத்தில் மலர்ச்சி குடியிருந்தது.”எறிக் வாறான்.என்னைப் பார்க்க முடியாமல் அவனால் இருக்க முடியவில்லையாம்”.தாய்மை என்கண் முன்னால் சிலிர்த்துப் போய் நின்றது.
“என் மகனை வந்து பார்ப்பியா? அவன் சந்தோசப் படுவான்.”என்று என்னைக்கேட்டார். நிச்சயமாக என்றேன் நான்.
காவியுடையில் தான் அந்தச் சாமியைக் கண்டேன்.அவன் மச்சம் சாப்பிடுவதில்லை என்று முன்னமே வேவா என்னிடம் சொல்லியிருந்தார். ஏழெட்டு கறிகள், அப்பளம் மிளகாயுடன் பசுமதி சோறும் கொண்டு அவர்கள் வீட்டிற்குப் போனேன். அவனுக்கு அவ்வளவு சந்தோசம். எனக்கு முன்னாலேயே சாப்பிட ஆரம்பித்தான். நல்லா சுவையாக இருப்பதாக புழுகித்தள்ளினான். எனக்கும் மனம் நிறைந்தது. அவன் உடலில் இருந்து வந்த சந்தன வாசம் இன்றும் என் நெஞ்சில் நிற்கிறது. எறிக் அன்பும்,அறிவும் பண்பும் கொண்டவன். இன்னும் ஒரு கிழமை இருக்கு எறிக் போவதற்கு,அவனை விட்டிட்டு இருப்பனோ தெரியவில்லை.பார்க்காமலே இருந்திருக்கலாம் எனத்தோன்றுகிறது.”என்று வேவா என்னிடம் சொல்லிக் கவலைப்பட்டார். அவர் நன்றாக வாடியிருந்தார்.பிரியும் துயர் அவர் கண்ணில் தெரிந்தது.அது தாய்மையின் ஏக்கம்.தவிப்பு.
போவதற்கு சில நாட்களே இருந்தன.வேலையால் வந்த போது என்மனைவி அந்த செய்தியைச் சொன்னாள். “வேவாக்கு கடுமை வருத்தம் போல,அம்புலன்ஸ் வந்து ஆளைக் கொண்டு போகிது.”நானும் அதிர்ந்து போனேன்.
அன்று பின்னேரமே நானும் மனைவியும் ஆஸ்ப்பத்திரியில் இருந்த வேவாவைப் பார்த்தோம்.அவவுக்கு அது சந்தோசமாக இருந்தது. பார்த்த போது பரவாயில்லை உசாராக இருந்தா பக்கத்தில் எறிக் கவலையோடு நின்றிருந்தான்.நாளை மறுநாள் புறப்படுவதாகச் சொன்னான்.இன்னும் சில நாட்கள் நிற்க முடியாதா என்று கேட்டேன்.
“எப்போதோ ஒருநாள் போகத்தானே வேண்டும்.அவ எழுந்திற்றா.அவ சுகமாக இருப்பா. எனக்கு அங்கே நிறைய வேலை காத்திருக்கு.நான் போகத்தான் வேணுமென்றான்.”நான் எதுவும் கதைக்கவில்லை.
மறுநாள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, கேபேட் அவசரமாக வந்து சொன்னான். வேவா போயிற்றா. நான் அதிர்ந்து போனேன்.கேபேட் எனது வீட்டிற்குக் கீழ் இருப்பவன். வேலையால் வந்து சொன்னபோது தான் என் மனைவிக்கும் தெரிந்தது.இருவருமே கவலைகளைப் பரிமாறிக் கொண்டோம்.நம்ப முடியவில்லை.
நேற்று நல்ல உசாராத்தானே மனுசி இருந்தது. மனைவி என்னிடம் சொல்லி கவலைப் பட்டாள்.
“எறிக் எனக்கு மூத்த பிள்ளை. நான் செத்தால் அவன் என்னருகில் இருந்து எனக்காகப் பிரார்த்திக்க வேணும். அம்மாவுக்குரிய கடமைகளைச் செய்யவேணும்.அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும்.அவன் இல்லையென்ற வேதனையை என்னால் தாங்கமுடியவில்லை.” வேவா கடைசியாக எனக்குச் சொன்ன உருக்கமான வார்த்தைகள் அவை. அவன் நிற்கும் போதே அந்த தாய்மை இவ்வுலகிற்கு விடைகொடுத்தது. பெத்த மகனாக அவன் கடமைகளைச் செய்கிறான்.பெறாத மகனாக நான் நின்று உருகுகிறேன். பெண்மையையும்,தாய்மையையும் போற்றுகிற அனைவருக்கும் இச்செய்தியைச் சமரப்பிக்கிறேன்.
-புத்திசிகாமணி.யேர்மனி.
1,860 total views, 3 views today