கல்லா இளமை
இற்றைக்கு முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் இலங்கை மண்ணிலிருந்து உயிர் மட்டும் இருந்தால் போதும் என்று நினைத்தவண்ணம் பல தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் செய்து மக்கள் பலர் புலம்பெயர்ந்தனர். அன்று அவர்களுக்கு இளமைத் துடிப்பும், பலமும், துணிவும் மிதமாக இருந்தன. அவர்கள் எண்ணங்களில் உழைப்பு, ஊக்கம், உயர்வு என்பன மட்டுமே நிறைந்திருந்தன. வாழுகின்ற நாட்டிலே ஓடிஓடி உழைத்து ஓடாய்த் தேய்ந்து தம்மை நிலைநிறுத்தினார்கள். இவ்வாறு வாழ்ந்த ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மாறாத வடுக்களும் மறக்க முடியாத ஒவ்வொரு கதையும், நெஞ்சை விட்டு அகலாத நினைவுகளும் நிறைந்திருக்கும்.
அன்று இருந்த துடிப்புக்களும் சுறுசுறுப்பும், உடற்தென்பும் வற்றிப்போன நிலையில் வாழ்க்கையை விட்டு ஒவ்வொருவராகக் கழன்று கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் வயதான பலரும் தம்முடைய நினைவின் அலைகளைப் பின்நோக்கியே பயணிக்கச் செய்கின்றார்கள். பேசுவதற்கு வாய் திறந்தவுடன் நான் அந்தக்காலத்தில் என்று ஆரம்பிப்பது வழக்கமாகி விடும். கடந்தகால நினைவுகளை காண்போரிடம் சொல்லி இன்பம் அனுபவிப்பது வழக்கமாகி விடுவது கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கின்றது. தம்முடைய உடல் இங்கே மனம் அங்கே என்பதுபோல் தாயகத்துத் தெப்பக்குளத்தில் மூழ்கி எழுந்து ஏரியிலே நீச்சலடிப்பது, மாமரநிழலிலே இருந்து மாம்பழங்கள் உண்பது, பழஞ்சோற்றுக் கஞ்சியிலே ஊறுகாய் சேர்த்து உண்பது, தென்னை மரத்தின் கீழ் இருந்து தென்னங்கள்ளுக் குடிப்பது, பனம்பழத்தை கடித்திழுத்து பாதிச்சுவையுடன் காதலிக்குப் பகிர்ந்தளிப்பது உண்பது, சுவைபட நாவூறப் பேசிப்பேசி மகிழ்வது, நண்பர்கள் குழாமுடன் கூடிக் குதூகலித்துத் தம் இளமைக்கால சுறுசுறுப்பும், பெண்களிடம் வம்புச்சண்டை போடுவதும் வாலிபத் திணாவெட்டாக வீர விளையாட்டுக்களில் ஈடுபட்டதையும் நினைத்து நினைத்து இன்புற்றிருப்பதும் தம்முடைய பேரப்பிள்ளைகளிடம் சொல்லி மகிழ்வதும் முதுமைக்கால வழக்கம்.
இவ்வாறே புறநானூற்று 243 ஆவது பாடலிலே ஒரு முதியவர் பாடுவதாக இப்பாடல் அமைந்திருக்கின்றது. இப்பாடலை தொடித்தலை விழுத்தண்டினார் என்னும் புலவர் பாடுகின்றார்.
இனிநினைந் திரக்க மாகின்று திணிமணற்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கய மாடு மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழிஇத் தூங்குவழித் தூங்கி
மறையென லறியா மாயமி லாயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நனிப் படிகோடேறிச் சீர்மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணற் கொண்டகல்லா விளமை
அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண் டுன்றி நடுக்குற்
றிருமிடை மிடைந்த சிலசொற்
பெருமூ தாளரே மாகிய வெமக்கே!
பல முதியவர்கள் ஒன்றாகச் சேர்ந்து இருக்கின்ற ஒரு சபை. அதிலே முதியவாகள் தம்முடைய இளமைப் பருவத்தைப் பற்றி உரையாடிக் கொண்டு இருக்கின்றார்கள். அப்போது கையிலே இரண்டு பக்க நுனிகளிலும் இரும்புப் பூண் பிடித்த தடியை வைத்துக் கொண்டு தொடித்தலை விழுத்தண்டினார் என்று பாடல் மூலம் இப்பெயரைப் பெற்ற புலவர்; ஏக்கத்துடன் தன் எண்ண அலைகளை மீட்டுப் பாடுகின்றதாக இப்பாடல் அமைந்திருக்கின்றது.
குளிர்ந்த பொய்கையின்கண் செறிந்த மணலிலே செய்யப்பட்ட பாவைக்கு பறிக்கப்;பட்ட பூவைச் சூடி மகிழும் பெண்களுடன் கைகோர்த்து அவர்கள் தழுவினவிடத்தே தழுவி, அசைந்த இடத்து அசைந்து ஒளித்துச் செய்கின்றவை அறியாத வஞ்சனை அறியாத இளமைந்தருடனேயே கூட உயர்ந்த கிளைகளையுடைய மருத நில மரங்கள் நிறைந்த ஆழமான நீரையுடைய துறையிலே வந்து நீருக்கு அண்மையில் அமைந்திருக்கும் மரக்கொம்பிலே ஏறி கரையிலே இருப்பவர்கள் வியக்கும்படியாக நீர்த் திவலை தெறிக்க பொய்கைக்குள்ளே பாய்ந்து நீந்தி ஆழச் சென்று அங்குள்ள ஆழக்கடல் மணலை அவர்களுக்கு கையிலே அள்ளி எடுத்து வந்து காட்டிய அந்த பயம் அறியாத இளமை இப்போது எங்கே இருக்கின்றது? விழுதினால் செய்யப்பட்ட பூண் போடப்பட்ட பிடியையுடைய கொம்பினாலான தடியை ஊன்றி இருமலிடையே சில சொற்கள் மட்டுமே பேசக்கூடிய முதுமையாளர்களாகிய எமக்கு அந்த இளமை இன்று உண்டோ. அந்நிலை நினைந்து இரங்கத்தக்கதாகும் என்று இப்பாடலைப் பாடுகின்றார்.
கடந்து சென்ற நாட்கள் இப்போது நினைத்து ஏங்கினாலும் வருவதில்லை. ஆனால், அதே விளையாட்டு, அதே துடிப்புடன் இன்றைய இளையவர்களைக் காணும் போது அன்றைய நிலையை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை. அது எந்தக் கண்டம் கடந்தாலும் ஒவ்வொரு முதியவர்களும் அனுபவிப்பது நிச்சயமானதாகவே இருக்கும்.
1,370 total views, 3 views today