பெண்மை வர்ணம்

— கலாசூரி. திவ்யா சுஜேன்

பிறவிப்பயனால் நற்குருவினடத்தே சரணடைந்து , அன்னம் போல் வித்தை பயின்று , சீரிய பெரியோர் கூடிய அரங்கினில் குருவருளால் முதன் முதலில் தான் கற்ற வித்தையை அவைக்காற்றுகை செய்யும் பொன்னான தருணமாய் அமைவது அரங்கேற்றம்.
அபிநயக்ஷேத்ராவில் அர்ப்பணிப்புடன், குருகுல கற்கையை மேற்கொண்ட ஒரு மாணவியின் அரங்கேற்ற நிகழ்விற்கான ஆயத்தங்கள் ஆரம்பமானது. பழமைக்குள் புதுமை சேர்க்க எண்ணுவது கலைஞர்களுக்கு புத்துணர்வூட்டி. பாலசரஸ்வதி அம்மா குறிப்பிட்ட கோவில் அமைப்பிற்கிணங்க சம்பிரதாயமான மார்க்க உருப்படிகளை அரங்கேற்ற நிகழ்வில் ஆற்றுகைப் படுத்துவது வழக்கம். எனினும் இந்த அரங்கேற்றத்தில் புதிய முயற்சியை கையாள விரும்பினோம்.
அதுவே ” ஞால வெளியினிலே ” என்னும் பரதத்தில் பாரதி மார்க்கம்.
தமிழ் இலக்கிய மரபுப் பட்டியலில் தனக்கென தனியிடம் வகிக்கும் பாரதியிடம், தொன்மைத் தமிழ் மரபை ஒட்டியதாயும், பாரதி மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதாயும் உள்ள ஓர் பொதுப் பொருள் உண்டா என்று வினவினேன்? விடையாக மலர்ந்தாள் பெண். காதல் தமிழ் தந்த பாரதி பெண்மையை முன்னிலைப் படுத்தி ஓராயிரம் சொற்களை அள்ளி அள்ளித் தந்தவர்.
பெண்மையின் மென்மையைப் பாடினார், மேன்மையைப் பாடினார், விடுதலைக்காக , வீரத்திற்காக, வெற்றிக்காக, கல்விக்காக, காதலுக்காக, கற்பிற்க்காக , திருமணத்திற்காக, வாழும் முறைமைக்காக, உறவிற்காக, உரிமைக்காக, சுதந்திரத்திற்க்காக, என பெண்களோடு சம்பந்தப்பட்ட பலவற்றிற்குமாய் பாடினார். அந்த காலத்தின் சமூக தேவை கருதியே பலதும் எழுந்தது எனவும் கொள்ளலாம். எனினும் இக்காலத்திற்கு ஏற்புடையதாக இருப்பது கவியின் புலமையும், காலத்தின் வியப்பும்.
பொதுவாகவே இலங்கையை பொறுத்த வரை , நாட்டிய கலையை கற்பது பெண்களாகவே இருக்கின்றனர். அபிநயக்ஷேத்ராவும் அதற்க்கு விதிவிலக்கல்ல. இவற்றினை கருத்தில் கொண்டு பெண்மைக்காக ஒரு நாட்டிய உருப்படி அமைக்க எண்ணம் கொண்டேன். நாட்டிய மார்க்க உருப்படிகளை தற்காலத்தில் இரண்டு விதமாக நோக்கலாம். ஒன்று மரபின் அடி வந்த சம்பிரதாயமான அமைப்பு. இரண்டாவது ஏதேனும் கருப்பொருளை மையப்படுத்தி புதிதாக அமைக்கும் உருப்படி. நான் இங்கு இரண்டினையும் தழுவிய ஆக்கத்தினை தர முயன்றேன்.
நாட்டிய மார்கத்தில் கருவறை போன்றமையும் வர்ணம் என்ற உருப்படியே பெண்மையின் சிறப்பை சொல்ல பொருத்தமானது என்று கருதினேன்.

இயல்
சங்க காலத்தில் பெண்களின் பருவங்களை 7 ஆக பிரித்தார்கள். அக்காலத்தில் பெண்களிடம் காணப்பட்ட முக்கிய அம்சங்கள் இந்த 7 பருவத்திற்குள் குறிப்பிடப்பட்டு இருக்கும். சங்க காலத்தில் பெண்களின் பருவங்கள் பற்றி குறிப்பிட்ட விடயங்கள் பாரதி காலப் பெண்களிடத்தேயும் காணப்பட்டதா ? அது இன்றும் பொருந்துகிறதா ? என்பதே அடுத்த கேள்வி .
முக்காலத்திற்கும் பொருந்தும் வண்ணம் உள்ள ஒரு விடயத்தை பேதை , பெதும்பை, மங்கை , மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என 7 பருவத்திற்கும் தனித் தனியாக பட்டியலிட்டேன். அக்குறிப்பினை பாரதிக்குள் தேடிய விளைவே பெண்மை வர்ணத்தின் தோற்றம்.
நாட்டிய சம்பிரதாயத்தில் அமைந்த பாரம்பரிய வர்ணங்களில் பூர்வாங்கம், உத்தரங்கம் என இரண்டு பகுதிகள் இருக்கும். முதல் பகுதியில் தம் உணர்வுகளை பொங்கி வடித்து விட்டு இரண்டாம் பகுதியில் யாரை மையமாக வைத்து ஆடுகிறோமோ அவர்களை புகழ்ந்து பாடுவதாக இருக்கும். மரபினை மனத்திருத்தி புதிதாக வடித்த பெண்மை வர்ணத்திலும் இரண்டாம் பகுதியில் முழுவதுமே பெண்களை போற்றி பாடி ஆடுவதாக அமைத்தோம்.

பெண்மை வாழகென்று கூத்திடுவோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா
போற்றி தாய் என்று தாளங்கள் கொட்டடா
போற்றி தாய் என்று பொற்குழல் ஊதடா
உயிரை சேர்க்கும், உயிரினைக் காத்திடும்
உயிரினுக்குயிராய் இன்பமாகிடும்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா !!!

இசை
உருவம் வந்து விட்டது. அவ்வுருவிற்கு உயிர் தந்து அருவமாய் நின்று நிறையும் இசை வேண்டுமே. பாரதியின் ஒளிச்சொற்களுக்கு பாரதியே ஒலிதந்து ஓசையானால் ?? ஆஹா! பறக்கும் இதயத்தில் பட படத்த பட்டாம்பூச்சிக் கூட்டத்தை வான வெளியில் பறக்க விட்டு வேடிக்கை பார்த்திருந்தேன். ஐயன் பாரதியின் கொள்ளு பெயரன் என்ற பெருமை கொண்ட டாக்டர் ராஜ்குமார் பாரதி ஐயாவினால் இசை அமைக்கப்பட்டு மகுடமானது பெண்மை வர்ணம்.

7 பருவங்களும் வர்ணத்தின் முதற் பாதிக்குள் அடக்கப் பட்டது. முதல் 6 பருவங்களுக்கு 3 ராகங்களை உபயோகித்து 7 ஆவது பருவத்தினை முத்தாயீஸ்வரத்தில் ( வர்ண அமைப்பில் நடுப் பகுதி ) ராக தாள மாற்றத்தோடு அமைத்து , இவ்வர்ணத்தினை ரகமாலிகா, தாளமாலிகாவாக மிக நுட்பமான நல்லிசையை பரிசளித்தார் பாரதி ஐயா. அவதார புருஷன் பாட்டனின் வரிகளுக்கு இசை அமைக்கும் சந்தர்ப்பம் கிட்டியமைக்கு நன்றியோடும் இருந்தார் அம்மேதை

நாட்டியம்

மாமலரில் மௌனத்தேனுண்ணும் மரகத வண்டு போல் , இந்த உருப்படியில் உள்ள ஊறு சுவையை உள்ளமைதியோடு உள்ளத்தில் ஊட்டினோம். மெல்ல மெல்ல மொட்டவிழ்ந்தது பெண்மை வர்ண வாசல்.
7 பருவ நிலைகளையும் , ஒரே மாணவி அபிநயிக்க வேண்டும். இயலோடு இயைந்த இசைக்கு, இயல்பாகவே அசையும் உடலுளத்தை சற்று அவதானித்துவிட்டு , நடன அமைப்பினை செதுக்க ஆரம்பித்தோம். பருவ மாற்றங்களை வேறுபடுத்த கட்டுக்கோப்பான ஜதிகள் இணைக்கப்பட்டன . நீண்ட பயிற்சியின் பலனை அபிநயத்தின் ஆழம் தெளிவுற மொழிந்தது. துளிர்விடும் அங்கங்களில் இயலும் இசையும் தோய்ந்து பொழிந்த நாட்டியத்தை வழங்கிட பாரதியே துணை நின்றார். தமிழை மூலதனமாக்கிய இம்முயற்சியில் முத்தமிழும் செறிந்த படைப்பாக வெளிவந்தமை படைப்பின் கருணையே.
நாட்டிய மார்க்கம் என்பதன் தொன்மைக்கு ஈடு கொடுக்க , தமிழின் தொன்மைக்குள் இருந்து ஒரு கரு பொருள் அமைந்தது எத்தனை கோடி இன்பம்.

1,869 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *