எனக்கு எது எது பிடிக்கும் என்று உனக்கும் அது தெரிவது எப்படி!

என்னை அறிந்தாய், நீ என்னை அறிந்தாய்

-சேவியர்-தமிழ்நாடு

‘இதுவரைக்கும் உன் கிட்டே நான் எதையுமே மறைச்சதில்லை. எல்லாமே சொல்லியிருக்கேன்’ என கடற்கரை மணலில் காது கடிக்கும் காதலர்களின் பக்கங்களில் நிச்சயம் மறைந்திருக்கும் சலவை செய்யப்படாத சில சங்கதிகள்.
‘என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், அதில் இருண்ட பக்கங்களுக்கு இடமே இல்லை’ என சவடால் விடும் கணவர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு திறக்கப்படாத கதவு துருப்பிடித்துக் கிடக்கும்.

உன்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் நான் அறிவேன் என யாருமே சொல்ல முடியாது. கடவுளைத் தவிர. வெயிட்..வெயிட்… இப்போ கடவுளோடு சேர்த்து இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இணையம் !

“ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது”.
நாம் சொல்லாத விஷயங்களையும் தோண்டி எடுத்து நமக்கு முன்னால் நீட்டி நம்மை வெலவெலக்க வைப்பதில் பல நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ரகசியமா ? கால்கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலை உருவாகிவிட்டது. பிக் பாஸ் பார்ப்பவர்களுக்குத் தெரிந்த வார்த்தை, “ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது”. அது இந்த விஷயத்தில் கன கட்சிதமாய்ப் பொருந்துகிறது. நம்முடைய தகவல்களை பிக் பாக்கெட் அடிக்கும் இத்தகைய இணைய நிறுவனங்களின் முதன்மை நோக்கம் ஒன்றே ஒன்று தான். லாபம். இந்தத் தகவல்களை வைத்துக் கொண்டு எப்படி ஒருவரை அமுக்கி, பணம் கறப்பது என்பது தான் இலட்சியம்.

இதொன்றும் புதிய வித்தையல்ல. ஆதிகாலங்களில் குடுகுடுப்பைக் காரர் வருவாரே, ‘யம்மா.. சாந்தியடையாத ரெண்டு ஆத்மாக்கள் வீட்டைச் சுத்திட்டே வருது. அதுல ஒண்ணு அழுதுட்டே இருக்கு’ என வாசலில் நின்று குரல் கொடுப்பார்களே, அதன் டிஜிடல் நீட்சி தான் இது. அந்த குரலில் பயந்து போயோ, அல்லது என்ன விஷயம் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தோடோ நாம் அவர்களிடம் பேசும்போது அவர்கள் வலையில் விழுந்து விடுகிறோம். அதன்பிறகு சேவல் வெட்டப்படலாம், காசு சுருட்டப்படலாம், சஞ்சலங்கள் விதைக்கப்படலாம். எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

மீன் சந்தையில் நெத்திலி மீனுக்கு அருகே மாங்காய் கடை விரிப்பது தொடங்கி, இன்றைய அமேசான் போன்ற நிறுவனங்களின் அழைப்பு வரை எல்லாமே வியாபார யுத்திகளே. டிஜிடலுக்கு முன்பு சந்தை அளவில் இருந்தது, டிஜிடல் உலகில் சந்தை என்பது சர்வதேச அளவுக்கு விரிவடைந்திருக்கிறது. அது தான் வித்தியாசம்.

அப்படி தகவல்கள் திரட்டுவதற்காகத் தான் டிஜிடல் சிவனின் நெற்றிக் கண் ஒன்று எல்லாரையும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது. இது தொழில்நுட்பத்தின் மூன்றாவது கண். இந்த கணம் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்கள் பெற்றோருக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் இந்த மூன்றாவது கண்ணுக்குத் தெரியும். உங்களுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பது உங்கள் வாழ்க்கைத் துணையை விட அதிகமாய் அந்த மூன்றாவது கண் அறியும். உங்களுடைய தினசரி நடவடிக்கை என்ன என்பது உங்களை விடத் துல்லியமாய் அந்த மூன்றாவது கண்ணுக்குத் தெரியும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை போன் பேசுவதற்கானது என்று இருந்தது. இன்றைக்கு, “பேசவும் செய்யலாம்” எனும் நிலமைக்கு மாறிவிட்டது. இதை நிறுவனக்கள் தங்களுடைய வளர்ச்சிக்காக பயன்படுத்துகின்றன. நமது தகவல்களை டிஜிடல் தகவல்களாக எங்கெங்கோஅனுப்பிக் கொண்டே இருக்கிறது. ஒரு லைவ் கிரிக்கெட் வர்ணனையைப் போல நம்மைப் பற்றிய தகவல்கள் சர்வர்களில்சேமிக்கப்படுகின்றன.

இந்தத் தகவல்கள் தான் நிறுவனங்களின் பணம் காய்க்கும் மரம். ஒரு ஜீன்ஸ் வேண்டும் என நீங்கள் ஏதோ ஒரு இணைய தளத்தில் கேட்டால், அதன் பின் நீங்கள் எந்த இணைய தளத்தில் நுழைந்தாலும், “யப்பா.. உனக்கு ஏத்த மாதிரி ஒரு ஜீன்ஸ் இருக்கு பாக்கறியா ?” என அழைப்பு கேட்கும். ‘ஒரு ஜீன்ஸ் வாங்கினால் ஒரு டிஷர்ட் ஃபிரீ’ என ஆசை காட்டும். ‘இன்று மட்டும் ஐம்பது சதம் தள்ளுபடி என நம்மை தள்ளும்’. ஆள விடுங்க சாமி என எல்லாவற்றையும் மூடி வைத்தால் கூட ‘அதிரடி ஆஃபர்’ என ஒரு எஸ்.எம்.எஸ் வந்து நம்மை அதிர வைக்கும்.

நமது அறைகளுக்குள்ளே ஒருவன் அலைந்து திரிவது போல நமது விஷயங்களை எல்லாம் தொழில்நுட்பம் எடுத்து வைக்கும். போன வருஷம் அமெரிக்கா போனியே, இந்த வருஷம் ஜெர்மனி போறியா என கேட்கும். இந்த போட்டோ எடுத்து ஆறு மாசம் ஆச்சு என சொல்லும். இந்த சாப்பாடு சாப்டு எவ்ளோ நாளாச்சு ஸ்விகில ஆர்டர் பண்ணலாம்ல என உசுப்பும்.. எல்லாம் எல்லாம் இலாபத்தின் இலக்கில் நகரும் விளம்பர யுத்திகள்.

கடைக்கு அஞ்சு ரூபா புளி வாங்கப் போகும் வீட்டம்மா ஆயிரம் ரூபா பொருட்களோடு வீட்டுக்கு வருவது போல, உங்களை உள்ளே இழுத்து ஒவ்வொன்றாய் காட்டி வாஙக வைப்பது தான் அவர்களின் தாரக மந்திரம்.

இப்போ, இதில் இருக்கக் கூடிய மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால் தகவல் திருட்டு. இந்தத் தகவல்களை நாம் பயன்படுத்தும் ஆப்களோ, நமது இணைய சேவை வழங்கு நிறுவனங்களோ, நமது மௌபைல்கம்பெனிகளோ திருடிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. மால்வேர்கள், வாட்ஸப் மெசேஜ்களாகவோ, மின்னஞ்சல் இணைப்புகளாகவோ நமது ஸ்மார்ட்போன் கதவைத் தட்டிக் கொண்டே இருக்கின்றன. நம்பிக்கையில்லாத லிங்க்களையோ, அட்டாச்மெண்ட்களையோ ஒரே ஒரு முறை கிளிக்கி விட்டால் கூட நமது தகவல்கள் தொலைந்து போக வாய்ப்பு உண்டு. திருடப்படும் தகவல்கள் எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தப்படலாம் என்பது தான் அச்சத்தின் காரணம்.உங்கள் பணம் திருடு போகலாம். உங்கள் அந்தரங்க விஷயங்கள் திருடப்படலாம். அதை வைத்துக் கொண்டு உங்களை கயவர்கள் மிரட்டலாம். உளவியல் ரீதியாக உங்களுக்கு சிக்கல்கள் உருவாக்கலாம். இப்படி எது வேண்டுமானாலும் நடக்கலாம். எங்கே சென்றாலும் தூக்கி சுமக்கும் ஸ்மார்ட்போன்கள் தங்களது இருப்பிடத்தை எப்போதும் இன்னொரு இடத்துக்கு அனுப்பிக்கொண்டே இருக்கின்றன. ஜியோ லொக்கேஷன் எனப்படும் இந்த தகவல் நமது போனின் இருப்பிடத்தை துல்லியமாய்ச் சொல்லி, நாம்எங்கே இருக்கிறோம் என்பதை பதிவு செய்கிறது. நாம் மட்டுமல்ல, நமக்குப் பக்கத்தில் நமது நண்பர்களின் போன்கள் இருந்தால் எத்தனை பேர் எங்கே இருக்கிறோம் என்பதையெல்லாம் சொல்லிவிடும்.

அப்படின்னா லொக்கேஷனை ஆஃப் பண்ணிடலாம் பிரச்சினையில்லை என நினைப்பீர்கள். அது தான் இல்லை. இப்போது நமதுஇருப்பிடத்தை வெறும் லொக்கேஷன் சர்வீஸ் மட்டும் கண்டுபிடிப்பதில்லை. ஆஸிலரோ மீட்டர், பாரோ மீட்டர், மேக்னடோமீட்டர்உட்பட பல சென்சார்களும் போனின் இருப்பிடத்தைத் துல்லியமாய் கண்டு சொல்கின்றன.

அதே போல நாம் மொபைலில் இன்ஸ்டால் செய்யும் ஆப்கள் மிகப்பெரிய ஆபத்தின் திறவு கோலாய் இருக்க வாய்ப்பு உண்டு. ஆப்களைஇன்ஸ்டால் செய்யும் போது நாம் அது கேட்கின்ற அனுமதிகளுக்கெல்லாம் ‘ஓகே… ஓகே” என சொல்லிக் கொள்கிறோம். நமதுகாண்டாட்க், கேமரா போன்றவற்றை இயக்கும் அனுமதியை நாமாகவே கொடுத்து விடுகிறோம். அது போலியான அல்லது பாதுகாப்பற்றஅப் ஆக இருக்கும் பட்சத்தில் நமது தகவல்கள் மிக மிக எளிதாக திருடப்பட்டு விடுகின்றன.

இப்போது சில புதிய திடுக்கிட வைக்கும் தனிமனித சுதந்திர மீறல்கள் வந்திருக்கின்றன. அதில் ஒன்று கேமரா ஹேக்கிங். நமதுமொபைலில் உள்ள கேமராவையோ, நமது கணினியில் உள்ள வெப்கேமையோ தொலைவிலிருந்தே இயக்குவது. கேமரா இயங்கிக்கொண்டிருப்பது, நமக்குத் தெரியாது. நமது செல்போன் கேமரா காட்டுகின்ற விஷயங்களையெல்லாம் தொலைவிலுள்ள சேமிப்புதளங்களில் சேமிக்கப்படும். அது எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தப்படலாம். அது நீங்கள் கழிவறையில் (Tiolet) இருந்தால்கூட கருணைகாட்டாது.

இன்னொன்று போனிலுள்ள மைக்ரோபோன் மூலமாக நேர்கிறது. நமது உரையாடல்கள் நமக்குத் தெரியாமலேயே காதுகொடுத்துக்கேட்கப்பட்டு இன்னொரு இடத்துக்கு அனுப்பப்படும் ஆபத்து அது. நாம் போனில் பேசுவது மட்டுமல்லாமல், போனை ஆன் பண்ணாமல்பேசுவதைக் கூட ரகசியமாய் ஒட்டுக்கேட்கும் ஆபத்து இதில் உண்டு. கூகிள் ஹோம், அலெக்ஸா, சிரி போன்றவையெல்லாம்எப்போதுமே நமது உரையாடல்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றன என்பது நினைவில் இருக்கட்டும்.

ஏற்கனவே ஒருவர் இன்னொருவரிடம் பேசுவதை ரெக்கார்ட் செய்யும் வசதிகள் இருக்கின்றன.இதனால் எவ்வளவு ரகசியமாய் நாம் கிசுகிசுத்தாலும் அது பொதுவெளியில் வரும் வாய்ப்பு உண்டு.
அதே போல நமது சேட்கள், மின்னஞ்சல்கள் எல்லாமே தொழில்நுப்டத்தின் கண்களால் வாசிக்கப்பட்ட பின்பு தான் அடுத்த நபருக்குச்சென்று சேர்கிறது. அடுத்தவருக்கு வருகின்ற லெட்டரைப் படிக்கக் கூடாது எனும் நாகரீகமும், அடுத்தவருடைய பேச்சை ஒட்டுக்கேட்கக் கூடாது எனும் நாகரீகமும் தொழில்நுட்ப உலகில் செல்லாக்காசாகி விட்டன. நாம் மொபைலில் எடுக்கின்ற போட்டோக்களை சில ஆப்கள் திருடுகின்றன என சமீபத்தில் ஒரு தொழில்நுட்பக் கட்டுரை சொன்னது. நமது புகைப்படத்தை வைத்து அது எங்கே எப்போது எடுக்கப்பட்டது போன்ற தகவல்களையெல்லாம் தொழில்நுட்பம் புட்டுப் புட்டுவைக்கிறது.

நவீன செல்போன்களில் ஏகப்பட்ட சென்சார்கள் இருக்கின்றன. நமது கை அசைவையும், கண் அசைவையும் கண்காணிக்கும் சென்சார்கள் இருக்கின்றன. நாம் எந்த மாடியில் இருக்கிறோம் என்பதைக் கூட பாரோ மீட்டர் எனும் சென்சார் அனுப்பும் செய்தியால்அறிய முடியும். சென்சார்களுக்கென ஆப்ஸ் தனி அனுமதி கேட்பதில்லை. எனவே எந்த ஆப் டவுன்லோட் செய்தாலும் இந்தசென்சார்கள் அதனுடன் இணைந்து கொள்ளும்.

நமது செல்போனில் நாம் டைப் செய்யும் விஷயங்களைத் திருடவும், நமது பாஸ்வேர்ட் போன்றவற்றை கண்டறியவும் கூடமென்பொருட்கள் உள்ளன. வெறுமனே மொபைலில் டைப் செய்து விட்டு டெலீட் செய்தால் கூட, எதையெல்லாம் டைப் செய்தோம்எதையெல்லாம் டெலீட் செய்தோம் என்பதையும் தொழில்நுட்பம் குறித்து வைத்துக் கொள்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி உங்களுடன் கூடவே இருந்து உங்களைப் பற்றிய அத்தனைத் தகவல்களையும் புட்டுப் புட்டு வைக்கின்றன ஸ்மார்ட்போன்களும், அதனுடன் இணைந்த நவீன தொழில்நுட்பங்களும். நாளை உங்களுடைய டிரைவிங் ஸ்பீடுக்குத் தக்கபடி உங்களுடைய கார்இன்சூரன்ஸ் அதிகரிக்கலாம், உங்களுடைய ‘தண்ணி அடிக்கும்’ பழக்கத்துக்கு ஏற்ப உங்களுடைய காப்பீட்டுத் தொகை அதிகரிக்கலாம். ஏன் உங்கள் அலுவலக பெர்ஃபாமன்ஸைக் கூட உங்கள் மொபைல் தரும் டேட்டாவைக் கொண்டே முடிவும் செய்துவிடலாம்.

காதலி உதிர்த்துப் போட்ட பூ, சீவிப் போட்ட முடி, வெட்டிப் போட்ட நகம், மறந்து விட்ட மயில்பீலி எல்லாவற்றையும் சேகரித்து வைத்து அதை வைத்து காதலியை வசீகரிக்கும் காதலன் போல இன்றைக்கு டிஜிடல் யுகம் எல்லாவற்றையும் சேகரித்து வைக்கிறது. அதை வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் காதலியை வசீகரிக்கலாம் என அது கணக்கு போடுகிறது.
காதலன் கனவில் கணக்கு போடுவான், டிஜிடல் யுகம் அல்காரிதம்களால் கணக்கு போடுகிறது. காதலன் எப்போது காதலியை பார்த்தோம் என காலக் கணக்கு போடுவான், டிஜிடல் ‘டேட்டா அனாலிசிஸ்’ செய்கிறது. அவளைப் பார்த்து என்னென்ன பேசினோம் என்பதை மயக்கத்தின் பள்ளத்தாக்கிலிருந்து காதலின் தேடி எடுப்பான், டிஜிடல் அதை ‘பிக் டேட்டா’ அனாலிசிஸ் என்கிறது. எதை வாங்கிக் கொடுத்தால் காதலி வியந்து போவாள் என காதலன் யோசிக்கிறான், டிஜிடல் அதை சேல்ஸ் ஸ்ட்ட்ராட்டஜி என்கிறது.

ஐந்து டிப்ஸ் அது நம்மை பாதுகாப்பாய் வைத்திருக்கும்.

1.தேவையற்ற ஆப்ஸ்களை அழித்து விடுங்கள், புளூடூத் வைஃபை போன்றவற்றை தேவையற்ற நேரங்களில் அணைத்து வையுங்கள்.

  1. சந்தேகத்துக்கு இடமான எந்த லிங்கையும் கிளிக்காதீர்கள், போனுக்கு கடின பாஸ்வேர்ட் போட மறவாதீர்கள்.
    3.பொது வைஃபைகளில் இணையாதீர்கள். அப்படியே இணைந்தாலும் பரிவர்த்தனைகள்நடத்தாதீர்கள். ஆட்டோ லாகின் வசதியை ஆன் செய்யாதீர்கள்.
    4.என்கிரிப்ஷன் வசதி இருக்கின்ற மொபைல் நல்லது, ஆன்டி வைரஸ் கண்டிப்பாக இருக்கட்டும், ரிமோட் வைப் ஆப்ஷன் எப்போதும் கைவசம் இருக்கட்டும், ஓஎஸ் அப்டேட்களை உடனுக்குடன் நிறுவுங்கள்.
    4.பழைய போனை விற்காதீர்கள், அழியுங்கள். ஜியோடேகிங் ஆப்ஷனை ஆஃப் செய்யுங்கள். செக்யூரிடி செட்டிங்ஸை எப்போதுமே அதிகபட்சமாக வையுங்கள்.

1,567 total views, 4 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *