“கட்டுக்கதைகள்”
நண்பர்களே, கட்டுக்கதை என்றால் என்ன? கற்பனைகள் கலந்த கதைகளா அல்லது உண்மையை மறைப்பதற்காகக் கூறும் கதைகளா? இரண்டு கூற்றுகளும் கட்டுக்கதைகளுக்கு பொருந்துகின்றன. கதைகள் என்றாலே கற்பனைகள் கலந்தால் மட்டுமே நன்றாக இருக்கும். கேட்பவர்கள் ரசிக்கும் அளவிற்கு கதைகள் இருக்க வேண்டும் அல்லவா! கற்பனை வளம் நிறைந்தவர்களாகச் சிலர் இருக்கின்றனர்.
சும்மா ஒரு விடயத்தை பெரிதுபடுத்தி, ஒன்றுமில்லாத ஒன்றுக்கு,கண் முக்கு வாய் வைத்து,கதைப்பது,கட்டுக்கதை. ஆம், பெண் ஒருத்தியை இரசித்துக் கூறும்பொழுது அவளின் கண்கள் மூக்கு மற்றும் வாயை வர்ணித்தால் தான் அவளின் அழகை இரசிக்கமுடியும். இதேபோலவே கட்டுக்கதையின் இரசனைகள். கற்பனைக் கதைகள் யார் மனதையும் புண்படுத்தாதவை ஆனால் கட்டுக்கதைள் புண்படுத்துபவை. கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய். விசாரிக்காமல் பொழுதுபோக்குக்காக சிலர் பேசுவார்கள். ஒன்று கூடியும் உரையாடுவார்கள்.
கட்டுக் கதை எடுத்துக்காட்டுகள் சில: ஒரு குடும்பத்தலைவன் வேர்வை சிந்தி கடுமையாக உழைக்கச் செல்கிறார். அவர் சம்பாதித்தப் பணத்தில் வீடு கட்டுகிறார். ஊர் என்ன சொல்லும்? இவருக்கு எங்கிருந்து இவ்வளவ பணம் என்று கேட்கும். கட்டுக் கதையை உருவாக்கும் நேரம் வந்துவிடும். அவர்களுக்கும் இக் கட்டுக்கதையினால் நேரம் போனதாகிவிடும். அதாவது பொழுதுபோக்கு.
இந்தக் கட்டுக்கதைகள் பற்றி சிலரைக் கேட்டு அறிந்தவை என்னவென்றால் இளம் சந்ததியினரைப் பற்றிக் கட்டுக் கதைகள் உருவாகி வருகின்றனவாம். ஓர் ஆணும் பெண்ணும் வெளியில் நின்று உரையாடக் கூடாது. ஆம், உடனே இவர்கள் காதலர்கள் என்பர். பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் பெண் தன் நண்பன் ஒருவனுடன் நூலகத்துக்குச் சென்று கல்வி கற்பதற்காகச் சந்திக்கின்றனர். இவர்களைக் காண்பவர்கள் இவர்கள் நூலகத்துக்குச் செல்லும் முன்னரே கட்டுக் கதைகளை உருவாக்கிவிடுவர்.
வேலைக்குச் செல்லும் பிள்ளைகள் வேலை முடிந்து இரவில் வீடு செல்கிறார்கள் என்றால் அதற்கும் ஆயிரம் கதைகள். வேலை இல்லை பொய் என்பர். இந்தக் கட்டுக்கதைகள் இன்று தோன்றியவை அல்ல. நம்நாட்டிலேயே அன்றும் இருந்துள்ளது. ஆனால் என்ன அப்போது இன்றுபோல் வேகமாக கட்டுக்கதை பரவ வட்சப்வசதிகளோ! வைபர் வசதிகளும் வெறும் சைபர்தான். அதனால் பொட்டுக்காலும், போகும் இடங்களிலும், இரவிரவாக அக்கம் பக்கத்து வீட்டுத் திண்ணைகளிலும் இந்தக் கட்டுக்கதைகள் பிரசவத்துக்கொண்டுதான் அன்று இருந்தன.
கட்டுக் கதையினால் பாதிக்கப் பட்டவர்கள் அதிகம். ஆம் மன அழுத்தத்துக்கு உள்ளாகி துன்பப் படுகின்றனர்.
ஆகவே தயவு செய்து மற்றவர்களின் மனதைப் புண்படுத்தாது வாழப் பழகிக்கொள்ள வேண்டும். ஏனெனில் நாம்செய்யும் காரியங்கள் எங்களுக்கே திரும்பி வந்துவிடும். நன்மை செய்வோம்! நல்லதைப் பேசுவோம்! நன்மைபெறுவோம்.
— றஜினா மகின்சன்- யேர்மனி
1,846 total views, 2 views today