உற்பத்தித்திறனுக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?

Dr.நிரோஷன் தில்லைநாதன்-யேர்மனி

நாம் நமது உடல் மற்றும் மனதினை எப்படி ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துகிறோம் என்பதைக் குறிப்பதுதான் உற்பத்தித்திறன். இதனை அதிகப்படுத்தக் கற்றுக்கொண்டால் நாம் நமது உடலின் ஆற்றலைச் சரியான பாதையில் பயன்படுத்த முடியும். அட அதற்கென்ன…? உடலில் சக்தி அதிகமாக இருந்தால், அதிக உற்பத்தித்திறன் வந்துவிடும் தானே என்று நீங்கள் நினைப்பவரென்றால் உற்பத்தித்திறனுக்கும், உடலுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் அதற்குப் பின்னால் உள்ள அறிவியல் பற்றியும் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

நம்மிடம் ஆற்றல் அல்லது சக்தி அல்லது புத்திசாலித்தனம் அதிகம் இருந்தால் நமது உற்பத்தித்திறன் அதிகமாகிவிடும் என்று எண்ணுவது முற்றிலும் தவறு. ஏனென்றால் அதிகப்படியான ஆற்றல் „நான்“ என்னும் அகந்தையை ஏற்படுத்திவிடும். அத்துடன் ஒரு அளவுக்கு மேல் முயற்சிக்காமல் நாம் சோர்ந்துவிட்டோம் என்கிற எண்ணத்தை நம்முள் விதைக்கக்கூடியது.

சில நேரங்களில் சில வேலைகளை நாம் ஆரம்பிக்கும் முன்னரே அதை நினைத்து பெரிதும் வருத்தப்படுவோம். இதுவரை கண்ட ஆராய்ச்சிகளின்படி செயல்களைச் செய்ய ஆரம்பிப்பதே கடினமான வேலை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் ஏதாவது ஒரு வேலையைச் செய்ய வேண்டுமா அல்லது வேண்டாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்காமல் அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு உடனடியாக ஆரம்பியுங்கள். ஏனென்றால் நமது மூளைதான் நமது முதல் சோம்பேறியான வேலையாள். அது நாம் ஒரு வேலையை எடுக்கும்போது அதிலிருக்கும் கடினமான பகுதிகளை உடனடியாக நமக்கு எடுத்துக்காட்டி அந்த வேலையைச் செய்ய வேண்டாமென்று தூண்டும். இந்த எண்ணத்தைச் சரி என்று நம்மை நம்ப வைக்க, பிற பொழுதுபோக்கு விஷயங்களில் செல்வதற்கு நம்மைத் தூண்டும்.
நாம் வேலை செய்யும்போது வேலைக்கு இடையூறாக இருக்கும் சின்ன சின்ன பொழுதுபோக்கு விஷயங்கள் நம்மை வந்து தொந்தரவு செய்யும், நாமும் நாம் இதுவரை முடித்த வேலைகளைவிட, முடிக்காத வேலைகள் மற்றும் இடையூறு செய்யும் வேலைகளை மனதில் அதிகளவில் நினைப்போம். இதற்கு உளவியலில் “ணுநபையசnமை நககநஉவ” என்று பெயர்.

அப்படியே ‘நேர மேலாண்மை’ அதாவது Time Management பற்றிப் பார்ப்போம். நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் அனைத்து வேலைகளையுமே குறித்த நேரத்தில் முடித்துவிட முடியும். ஆனால் நாம் அப்படியா செய்கிறோம்…? உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்…

அதிகப்படியான பயிற்சிகள் கொடுத்து நம்மை நாம் பழக்குவதைவிடச் சரியான நேரத்தில் விருப்பப்பட்டு வேலைகளைச் செய்தால் விரைவாகச் செயலாற்ற முடியும். நாள் முழுவதும் வேலை செய்வதைவிட, ஒவ்வொரு நேரத்திற்கும் சரியான வேலையை ஒதுக்கி அதை முடிப்பது உற்பத்தித்திறன் பெருக்கத்திற்கு வழிவகுக்கும். உதாரணமாக ஒரு வேலையில் கடினமான பகுதி எது என நீங்கள் நினைக்கிறீர்களோ அதை முதலில் முடித்தால் உங்கள் மனதுக்கு ஆறுதலாக இருக்கும். அத்துடன் அந்த வேலையில் மீதமுள்ள பகுதியை மிக எளிதாகவும் விரைவாகவும் உங்களால் முடிக்க முடியும்.

சரியான நேர மேலாண்மை செய்தால் வேலை மற்றும் இடைவெளி எனச் சீராக வேலையை முடிக்க முடியும். இது குறித்து ஆய்வு மேற்கொண்டவர்கள் கண்டறிந்த விஷயங்களில் ஒன்று, உலகின் முன்னணி வயலின் வாசிப்பாளர் 90 நிமிடங்கள் வேலை செய்தால் அதைத் தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரையிலான ஓய்வை எடுத்துக்கொள்கிறார். நாள் முழுவதும் தொடர்ந்து வேலை செய்வதற்குப் பதில், வேலை மற்றும் ஓய்வு எனப் பகுதிகளாகப் பிரித்து வேலை செய்வது உற்பத்தித் திறனை அதிகப்படுத்தும்.

இதை எல்லாம் படிக்கும் போது, நாமும் இப்படித்தான் வேலை செய்ய வேண்டுமென நீங்கள் வேலைகளைத் தொடங்கலாம், ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு வேளை குறித்த நேரத்தில் அதை முடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? அப்படிப்பட்ட நிகழ்வு நடக்காமலிருக்க உங்களது காலண்டரில் நீங்கள் முடிக்க வேண்டிய இலக்குகளைக் குறித்து வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றவாறு வேலை செய்யுங்கள். இப்படி காலக்கெடு வைத்து வேலை செய்யத் தொடங்கியபின், ஒவ்வொரு காலகட்டத்திலும் நீங்கள் செய்த வேலையை அட்டவணையிட்டுப் பாருங்கள். இதன் மூலம் வேலை நேரங்களில் தேவையற்ற பொழுதுபோக்கு விஷயங்கள் உங்களைத் தொந்தரவு செய்வது குறையும்.

பொதுவாக நாம் செய்யும் பெரிய தவறு என்ன தெரியுமா? பல பணிகளை ஒரே நேரத்தில் செய்வது தான். அதன் மூலம் நாம் பல செயல்களை வெற்றிகரமாகச் செய்வதுபோல் தோன்றலாம், ஆனால் உண்மையில் அப்படி இல்லை. இப்படிப் பல பணிகளைச் செய்வதற்குப் பதிலாக முந்தைய நாள் இரவில் நாம் தூங்கச் செல்வதற்கு முன்பு அடுத்த நாள் செய்யவேண்டிய செயல்களைப் பட்டியலிட்டு வைக்கலாம். பெரிய வேலையாக இருந்தால் அதை சிறியதாகப் பிரித்துச் செயல்படுத்தலாம். இவ்வாறெல்லாம் செய்தால் உங்களின் உற்பத்தித்திறன் மற்றும் செயல்பாட்டு வேகம் அதிகரிக்கும்.
சுருக்கமாகச் சொல்லப் போனால்… கஷ்டப்பட்டு வேலை செய்தால் வெற்றி பெற முடியாது, அந்த வேலையை இஷ்டப்பட்டும் செய்தால் தான் வெற்றியைத் தொட முடியும்…

கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தை எனது முகநூல் பக்கத்தில் பதிவுசெய்யவும். (www.facebook.com/scinirosh)

2,107 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *