அச்சமும், மகிழ்ச்சியும் சேர்ந்து இருக்க முடியாது
கரிணி-யேர்மனி
ஆதியிலிருந்து மனிதன் தனக்கு மிஞ்சிய, தன் அறிவுக்கு எட்டாத விடயங்களான இயற்கை சீற்றங்கள், இடி மின்னல், கொள்ளை நோய்கள் போன்றவற்றால் அச்சத்துக்குள்ளாகி வந்துள்ளான். தொன்று தொட்டே தன்னை வஞ்சிக்கிற விடயங்கள் இருப்பதாக எண்ணி பயம் கொண்டுள்ளான்.
எனவே தன் பாதுகாப்பிற்காக தன்னை தானே சிறை வைத்து பூட்டிக் கொள்ளும் அதிசயமான பிறவியானான். அதையும் தாண்டி மனிதன் தன் அறிவு மற்றும் தொழிநுட்ப வளர்ச்சியில் தன்னிறைவு அடைவதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி தன்னை பலவானாக காட்டிக் கொள்ள வேண்டுமென பயம் கொண்டு, முயன்று தோற்றுப் போகிறான்.
மனிதன் மட்டுமே எதிர்காலத்தை பற்றிய கற்பனையிலும், ,றந்தகால சம்பவங்களை மீட்டு மீட்டுப் பார்ப்பதனாலும் நிகழ்காலத்தை தவற விடுகின்றான். எதிர்காலம் பற்றிய அச்சம் மற்றும் ஏற்கனவே நடந்துவிட்ட சம்பவங்கள் மீண்டும் சம்பவிக்குமோ என்ற பயத்தினால் நிகழ்காலத்தை தவற விடுவதுடன் வரப்போகும் எதிர்கால நிகழ்வுகளை எதிர் கொள்ளும் முன்னமே கற்பனையில் தன் நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்களுக்கமைய தன்னை குழப்பியும் கொள்கிறான்.
மனித மனமானது அதிக தகவல்களை சேகரித்து வைத்துள்ளமையே தேவையற்ற அச்சத்தை உண்டுபண்ணுகிறது. தகவல்களை சேகரிப்பதை விட அவற்றை உணர்வுபூர்வமாக உணர்ந்தறிதலே நன்று. உதாரணமாக ‘பேய்’ என்ற ஒன்று இருக்கிறதோ இல்லையோ அதை எதிர் கொண்டவர்களை விட பேய் தொடர்பான கதைகளைக் கேட்டு அதன் கற்பனையில் பயத்தோடு வாழ்பவர்களே அதிகம்.
தனக்கு தானே வகுத்து வைத்த சூழலும், தன்னை சுற்றி தான் போட்ட எல்லைக் கோடுகளும் அவை சிதையவோ, அல்லது தாக்கப்படவோ கூடாதென அதை தக்க வைக்க எடுக்கும் அன்றாட பிரயத்தனங்கள் தனது அச்சத்தை என்றுமே அதிகரிக்கும்.
ஒரு விடயம் இப்படித்தான் நடக்கவேண்டும் என மனம் முடிவு செய்து எதிர்பார்த்து ,இருக்கும் போது அந்த விடயத்தில் மனம் குவிந்து செறிவடைகிறது. அந்த விடயம் நடக்காதவிடத்து அதில் எதிர்ப்புணர்வு உருவாகி அச்சத்தை உருவாக்குகிறது.
இதுவும் கடந்து போகும் என்பதே அன்றாடம் பெறும் அனுபவங்கள். எதுவும் நாம் நினைத்தது போன்று முழுமையாக இருந்ததில்லை, இதே நிலையை என்றுமே நிரந்தரமாக பிடித்து வைக்கவும் முடிவதில்லை. அப்படி இருக்கையில் துன்பமோ, இன்பமோ எப்பேற்பட்ட சூழலும் மாறிவிடத்தான் போகிறது. எதிர்காலம் குறித்த பயம் நிகழ்காலத்தில் இருக்கின்ற சக்தியை உறிஞ்சிவிடும்.
புலியிருக்கும் காட்டில் தான் மான் வாழுகிறது, பருந்து பறக்கும் பிரதேசத்தில் தான் அணில்களும் இயல்பாகவே வாழ்கின்றன. இயற்கையின்படி சவால்களையும், அடுத்தடுத்த சுவாரசியங்களையும் கொண்டதே வாழ்க்கை. புதிய புதிய பரிணாமங்களோடே அடுத்து வரும் மணித்துளிகள் விரிகின்றன. இவற்றில் இயற்கைக்கு என்றும் பஞ்சமிருப்பதில்லை.
எந்தவொரு விடயத்தையும் எதிர்கொள்வதைவிட அதனிடமிருந்து தப்பிப் போக முயன்றால் பெருமளவு போராட வேண்டியிருக்கும். அந்த பிரச்சனையால் ஏற்படும் போராட்டம் குறைந்த அளவிலும், அது சார்ந்த கற்பனை, மற்றும் பயத்தாலான போராட்டம் அதிகமாகவும் இருக்கும். எனவே ‘முடியும் வருவதை பார்த்துக்கொள்ளலாம்’ என்ற துணிவானது சாதிப்பதற்கான சக்தியை தந்துவிடும்.
உதாரணமாக எதிரே ஒரு நாய் கடிப்பதற்கு துரத்துகிறது என்று வைத்துக் கொள்வோம். பயத்தில் ஓடிக்கொண்டே இருந்தால் நாயின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியுமா? மாறாக நாய்க்கு தன்மீது அதிக நம்பிக்கையும் மேலும் பலமும் வந்து உங்களை கடிப்பதை ,ன்னும் நோக்கமாக நெருங்கும். அதே நீங்கள் பயமின்றி அதனை எதிர் கொண்டு திருப்பி துரத்தினாலோ அல்லது உங்கள் அசைவில் பயம் வெளிப்படவில்லை என்றாலோ எந்த விலங்கும் நிலை சிறிது குழம்பிப் போகும். சற்று பின் வாங்கும். பயம் கொள்ளும் போது எம்மைச் சுற்றியுள்ள சக்தியோட்டம் சுருங்குவதால் வெப்ப அலைகள் குறைந்து குளிர்வடையும். இது மற்ற விலங்குகளின் பார்வைக்குப் புலப்படும். இவற்றை வைத்தே பாம்பு போன்ற பிராணிகள் உடனடியாக தாக்குவதும், பின்வாங்குவதும். இவ்வாறே வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களும் இருக்கின்றன. தன்னம்பிக்கையோடு கூடிய துணிவுள்ள அதிர்வலைகளை இலகுவில் எந்த எதிரான இலக்கும் தாக்குவதில்லை.
இருள் நிறைந்த சூழலில் அகப்படும் போது அல்லது மின்சாரம் திடீரென தடைப்படும் போது அந்த மை இருளில் பயம் கொண்டவர்களுக்கு எப்படிப்பட்ட கற்பனைகள் உருவாகும்? காது மிக நுண்ணிய அதிர்வுகளை கேட்கும் படி கூர்மையாகும், கண்கள் அகல விரியும், புலன்கள் ஆயத்த நிலையில் இருக்கும், ஆனால் மனமோ ஆயிரம் எதிர்மறை வடிவங்கள், நிகழ்வுகளை உருவாக்கி அச்சத்தை ஏற்படுத்தும். சிறு அதிர்வு கூட ஒரு பயங்கர உருவத்தை மனக்கண்ணில் கொண்டு வந்துவிடும். திடீரென வெளிச்சம் வந்தவுடன் எல்லாமே இயல்பு நிலையில் இருப்பதை பார்த்தவுடன் ,துவரை இருந்த உயிரை உலுக்கும் பயம் வீணாக இருக்கின்ற சக்தியை உறிஞ்சி விட்டதையும் அது அநாவசியமான பதற்றம் என்பதையும் உணர முடியும். இங்கு நிகழ்வை விட தேவையற்ற எதிர்மறையான கற்பனைகளே அதிக அச்சத்தை ஏற்படுத்துகின்றது.
எனவே கற்பனையான மனமே இத்தகைய பலவீனத்தை ஏற்படுத்துகிறது. பயம் வேறு பக்தி வேறு. பயமானது மனதின் சக்தியை சுருங்கச் செய்து ஆற்றலை உறிஞ்சி விடுகிறது. ‘துணிவே துணை’ என வாழ்ந்து பார்த்த அனுபவசாலிகள் சொல்லிச் சென்றுள்ளனர். மகிழ்ச்சி இருக்கும் போது பயம் விலகிவிட்டதை உணர முடியும். இரண்டும் ஒருபோதும் சேர்ந்து இருக்கவே முடியாது. ஆகவே உள்ளிருந்து கொண்டே சக்தியை உறிஞ்சும் விடயங்களைக் களைந்து மகிழ்வான வாழ்வு நிலைபெற பெற அச்சம் தவிர்ப்பீர்.
அச்சம் விலகும் போதே வாழ்வு தொடங்குகிறது
1,396 total views, 3 views today