நாம் பெண்கள் என்பதில் எமக்கும் மகிழ்ச்சியே!
அபிரா இரகுநாதன்-சிவப்பிரகாசம் யேர்மனி
நாம் பெண்கள் .”இவர்கள் பெண்கள்தானே, என்ன செய்து சாதித்துவிடப் போகிறார்கள்” என்று சிலர் நகைப்பார்கள். நாம் வெறும் பெண்கள்தானா ? இல்லை நாம் இந்த பூமியின் பிரமாண்டம். அந்தப் பிரமனே செதுக்கிய ஓர் அழகிய ஓவியம். ஓடுகின்ற நதி போல நீளமான கருங்கூந்தல் கொண்டு, அதில் பூவை வைத்து, வண்ண வண்ணமாய் ஆடைகள் அணிந்து, பள பளக்க தங்கம் வைரம் என்று நகை அணிந்து, இதழின் ஓரத்தில் சாயம் பூசி,
செந்தழிப்பான முகத்தில் பொட்டு வைத்து, அழகுக்கு மறுபெயராய் இருப்பவர்கள் பெண்கள். இன்றைய நவீன வாழ்க்கையில் அணியும் உடைகளும் ஆபரணங்களும் மாறினாலும் கூட பெண்கள் அழகு தான். பாத அணிக்கு ஏற்றபடி ஜாக்கெட், நகப்பூச்சுக்கு ஏற்றபடி கைப்பை, ஏன் இந்தக் கோவிட் 19 காலத்தில் முகக்கவசம் கூட மெட்சிங் மெட்சிங் தான்.கண்ணாடியில் நாம் நம்மை ரசிப்பதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களையும் ரசிக்க வைத்து மெய்மறக்கச் செய்வோம்.சில பேருக்குக் கனவுக்கன்னியாகக் கூட இருப்போம்.
அழகு என்பதைத் தாண்டி பெண் என்பவள், பல ஸ்தானங்களைக் கொண்டவள். பிறக்கும் போது மகள் என்ற ஸ்தானம் உருவாகி, நம்மைப் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் கொடுக்கிறாள். மகாலட்சுமி, தேவதை என்று செல்லமாய் அழைப்பதைப் பார்த்திருப்பீர்கள். வளரும் போது சகோதர ஸ்தானம் கிடைக்கிறது.ஓர் அக்காவாகவும் ஒரு தங்கையாகவும் நம் உடன்பிறப்பைப் பாதுகாத்து நல்வழியைக் காட்டுவாள் .அவர்களோடு மறக்கமுடியாத இனிய நினைவுகளை உருவாக்குவாள்.அரிவைப் பருவத்தில் மனைவி என்று, இன்னும் ஒரு ஸ்தானம் அவளுக்கு வந்துசேரும். கணவனைக் காதலாலும் புகுந்த வீட்டை அன்பாலும் அரவணைப்பாள்.ஓமோம் .உங்கள் மைண்ட் வொய்ஸ் நல்லாவே கேட்கிறது ! “இந்த காலத்தில் புகுந்த வீட்டை அரவணைக்கிறார்களா?” என்று தானே யோசிக்கிறீர்கள் ? ஆம் ! கண்டிப்பாக அப்படிப் பட்ட பெண்கள் இன்னும் இருக்கிறார்கள். புதிய சுற்றுச் சூழல் வாழ பழகிக்கொள்வார்கள். அவர்களை முழுமை அடையச்செய்யும் ஸ்தானம் தாய் என்ற ஒரு மகிமையான வரம். தாயாகவும் குருவாகவும் கவசமாகவும் இருந்து பெற்றெடுத்தவர்களைக் காப்பார்கள்
அத்துடன் நின்றுவிடவில்லை
பெண் என்பவள் சுமைதாங்கி .பலவிதமான பொறுப்புகளையும் பிரச்சனைகளையும் தாங்குவாள். உணர்வுகளைக் கண்ணீர்த்துளியாய் சிந்துவாள். சோர்வையும் சோகத்தையும் காட்டிக்கொள்ள மாட்டாள். ஒரு காலத்தில் ஆண்களுக்கு அடங்கியவளாய், சமுதாயத்திற்குக் கட்டுப்பட்டவளாய் வாழ்ந்தாள். ஆசைகள் இல்லாமல் கனவுகள் காணாமல், குரல்களை எழுப்பாமல், கருத்தை வெளிப்படுத்தாமல், தலையாட்டி பொம்மைபோல் வாழ்ந்தாள். நவீன காலத்தில் கூட இப்படிப் பட்ட பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது மிகவும் கவலைக்குரிய ஒரு விடயம்.இது மாற வேண்டும். மாற்ற வேண்டும்.மாற்றுவோம் !
பெண் என்பவள் நெருப்பிற்கு ஈடானவள். கோவத்தை அனலாய் காட்டுபவள். அவளின் பொறுமை நைல் நதி போல் போய்க்கொண்டே இருக்கும்.ஆனாலும் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதையும் உணரத் தவறமாட்டாள். அக்கணங்களில் காட்டுத்தீயாய் மாறிவிடுவாள். மதுரையை எரிக்கக் கண்ணகியால் மட்டும் தான் முடியுமா? வீரம் கொண்டவள் பூலான் தேவியாகத்தான் இருக்க வேண்டுமா? ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு கண்ணகியும் , பூலான் தேவியும் வாழ்கின்றனர். பெண்ணைப் பத்ரகாளி, இராட்சசி, திமிர் பிடித்தவள் என்று சொல்வதைக் கேட்கும் போது வேடிக்கையாய் இருக்கும்.
போராட்டம் நமக்கு அன்றாடம். தைரியமாய்த் தலை நிமிர்ந்து சாதிப்போம்.வலிமை கொள்ளுவோம். இன்றைய காலத்தில் ஆண்களுக்குச் சமமாக நம்மை நாமே மாற்றினோம். சமுதாயத் தடைகளைத் தாண்டி நம் அங்கீகாரங்களைப் பெற்றோம்.நம் கருத்துகளை அழுத்தமாகப் பதிவு செய்தோம். அடக்குமுறைகளை அழித்துக் காட்டினோம். பல துறைகளில் முன்னின்று வேலை செய்தோம். விமானம் ஓட்டினோம். கப்பல் ஓட்டினோம் ஏன் விண்வெளிக்குக் கூடச் சென்று வந்து சாதனை படைத்தோம் .புதுமைப் பெண்ணாய் மாறினோம்!
நாம் உருவத்தில் மென்மையும், பலவீனமும் உள்ளவர்கள் . ஆனால் எம்மால் எவ்வளவு முடியும் என்பதை சில நேரம் எங்களுக்கே தெரிவதில்லை.ஒரு அழகிய சிரிப்பிற்குப் பின்னால் எவ்வளவு வலிகள், எவ்வளவு போராட்டம், எவ்வளவு பாரபட்சம்.எல்லாவற்றையும் தாண்டி, தடைகளை மீறி எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களாக வாழ்ந்து சாதிப்போம்.நாம் பெண் என்பதில்
எமக்கு மகிழ்ச்சியும் பெருமையுமே!
— தங்கத்தாமரை (கவித்துளி)
1,502 total views, 3 views today