பவளவிழாக்காணும் வயாவிளான் மத்திய கல்லூரியும், அதன் ஆணிவேர்களாக நான் கண்ட அதிபர்களும்

Dr.. வேலுப்பிள்ளை கண்ணதாசன் (Oxford/Uk)

எமது கல்லூரி வரலாறு காணாத பேரழிவுகளுக்குட்பட்டு, அதன் செல்வச்செழிப்பு பௌதீக வளங்கள், ஆசிரிய, மாணவ வளங்கள் முதலியவற்றை இழந்து நின்ற போதிலும் இன்றும் எமது கல்லூரி, யாழ்மாவட்டத்தில் பட்டொளிவீசி மிளிர்ந்து மிடுக்கோடு நிற்கின்றதென்றால் அது ஆச்சரியத்துக்குரியதே! கல்விச்சமூகத்தை வாழ்விக்க வல்ல அதிபர்கள் எமது கல்லூரியைப் பொறுப்பேற்றமையே இதற்கு மூலாதாரம் எனலாம்.

ஆறு இடப்பெயர்வுகளுக்கு முகம் கொடுத்த எமது கல்லூரி பவளவிழாக் காண்கின்ற இந்நேரத்தில் எனது மாணவப் பராயத்தில் கல்லூரியை வளர்த்தெடுத்தவர்களை நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன். 1976 - 1985 காலப்பகுதிகளில் வயாவிளான் மத்திய கல்லூரி பல்துறைகளிலும் முன்னேற்றமான ஒரு கிராமப் பாடசாலையாக இயங்கி நின்றது. இந்த முன்னேற்றங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல பெருமையோடு  பேசப்படுபவர் மதிப்புக்குரிய அதிபர் திரு.இராமசாமி ஐயா அவர்களே! அவர் தம் அயராத உழைப்பும் கட்டுக்கோப்பான ஆளுமையும் நேர்மைத்திறனும் நெஞ்சுறுதியும் இக்கல்லூரியின் வரலாற்றில் முத்திரையைப் பதிக்க வைத்தது. மாணவர்களின் முதன்மைக் கல்வியோடு, தொழில்சார் கல்வி, விளையாட்டுத்துறை போன்றவற்றின் விருத்தியிலும் மிகுந்த அக்கறையோடு செயற்பட்டது மட்டுமல்லாது மாணவர்களுக்குத் தேவையான ஆய்வுகூடம் முதற்கொண்டு பலமாடிக் கட்டிடங்களை அமைத்தும் யாழ் குடாநாட்டிலேயே  பெருநிலப்பரப்பினைக் கொண்ட பாடசாலை என்ற பெருமையை பெற்ற எம் பள்ளி வளாகத்தைச் சுற்றி புறமதில்களை அமைத்தும் சிறு பல்கலைக்கழக அமைப்பிற்கு உயர்த்தி மாணவர்களைப் பல்கலைக்கழகம் புகவைத்த பெருமை இவரையே சாரும்!    இத்தகைய உன்னத நிலையில் இருந்த இவர்தம் காலத்தில் இக்கல்லூரியில் இணைந்ததையிட்டுப் பெருமகிழ்வடைக்கின்றேன்.

1985 களில் அதிபர் திரு.கணேசபிள்ளை அவர்களிடம் கையளித்து திரு.இராமசாமி ஐயா அவர்கள் ஓய்வு பெற்றுச் சென்றார். கணேசபிள்ளை அதிபர் காலத்தில் எமது கல்லூரி ஒரு பாரிய இடப்பெயர்வை சந்திக்க வேண்டிய நிர்க்கதிக்கு உள்ளாக்கப்பட்டது. விடுதி மாணவர்களின் கைது, அனைத்து பௌதிக வளங்களினதும் இழப்பு என ஒரே குழப்பமான நிலையைச் சமாளிப்பதே அவரது முதல் கடமையாக இருந்தது. மாணவர்களை இராணுவத்திடமிருந்து மீட்பது பெரும் பொறுப்பாக அவருக்கு இருந்தது. இடம்பெயர்ந்த எமது கல்லூரியை புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தற்காலிகமாக இயங்க வைத்ததுடன் அவரும் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இக்காலப்பகுதியிலேயே எமது கல்லூரி வரலாற்றில் மிகவும் வேதனையான காலம், நகர்ப்புற பாடசாலைகளை நாடி மாணவர்கள் செல்லல், இராமசாமி அதிபரினால் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான ஆசிரியர் குழாத்தினரின் வெளியேற்றம் போன்றவை எமது கல்லூரியின் கல்வித்தரத்தை ஆட்டம் காண வைத்தது. பல்கலைக்கழக அனுமதிகள் பூச்சிய நிலையை எட்டியன.
        “இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
        அதனை அவன் கண்விடல்”

என்ற வள்ளுவனின் வாக்கை மெய்ப்பிக்கும் வகையில் எமது கல்லூரியில் அக்கறையும் ஆளுமையும் அஞ்சா நெஞ்சும் நேர்மைத்திறனும் படைத்த சமூகவியல் ஆசான் திரு.ஆ.சி.நடராஜா அவர்களிடம் இக் கல்லூரியின் பொறுப்பு வலிந்து ஒப்படைக்கப்பட்டது. கல்லூரியை பொறுப்பேற்ற ஐம்பது நாட்களுக்குள் தொடர் போராட்டங்களின் மூலம் இவர் எமது கல்லூரியை மீண்டும் சொந்த இடத்துக்குக் கொண்டு சென்றார். எதுவித கட்டடங்களும் இல்லாமல் காடாக இருந்த எமது கல்லூரி வளாகத்தைச் சுத்தம் செய்து இயங்க வைத்தார். இவரது பலத்தையும் ஆளுமையையும், பாடசாலைச் சமூகமும், கல்வித் திணைக்களமும் கண்டு வியந்தன. போர்க்கால சூழலில் குரும்பசிட்டி பிரஜைகள் குழுவின் செயலாளராகவிருந்து இவர் செய்த தொண்டுகளைக் கண்ட அரசசார்பற்ற நிறுவனங்கள் இவர் கேட்ட அனைத்து உதவிகளையும் இக்கல்லூரிக்குச் செய்து கொடுத்தன. அத்துடன் தனது தனியார் கல்வி நிலையைத்தை மூடி முப்பத்திரண்டு சோடி வாங்கு மேசைகளையும் அன்பளிப்புச் செய்து கல்லூரிக்காக உதவ முன்வந்தார்.

துரதிஷ்டவசமாக மீண்டும் எமது கல்லூரிக்கு அகதி அந்தஸ்து அளிக்கப்பட்டது. மீண்டும் இடப்பெயர்வு, 1990 களில் வெறுங்கையோடு சென்ற எம்மை உரும்பிராய் இந்துக்கல்லூரி தத்தெடுத்தது. ஆனால் எமது அதிபரோ பல்வேறு நெருக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டார். கல்வி அதிகாரிகளினால், ஒரு சிறுதொகை மாணவர்களுக்காக இந்த பாடசாலையை நடத்த முடியாது என்றும், பாடசாலையை மூடும்படியும், ஆசிரியர்களை இடம்மாற்றம் செய்யும் படியும் வலியுறுத்தப்பட்டது. எமது கல்லூரியை அதனது தனித்தன்மையுடன் தொடர்ந்து இயங்க வைக்க அதிபர் அவர்கள் அவரது பாணியில் திடசங்கற்பம் பூண்டார். 90 களில் கணித விஞ்ஞான பிரிவுகளை மூடும்படி கல்வித்திணைக்களம் கட்டளையிட்டது. அதனை அதிபர் கருத்தில் கொள்ளவில்லை. தற்துணிவோடு தொடர்ந்து வகுப்புக்களை நடாத்தி வந்தார். என்னையும் கூட வலுக்கட்டாயமாக நிறுத்தி, என்னுடைய விடுகைப்பத்திரத்தை தர மறுத்து, யாழ் இந்துக்கல்லூரிக்குச் சென்ற என்னை மீண்டும் வரவழைத்தார். கல்வித்திணைக்களம் இராசாயனவியல், பௌதீகவியல் ஆசிரியர்களைத் தரமறுத்தது. பிரத்தியேக ஆசிரியர்களாக புதிதாக நியமித்து கணித, விஞ்ஞானப் பிரிவுகளை நடாத்தினார். மீண்டும் மிடுக்குடன் கல்வித்தரம் உயர்ந்தது. மாணவர்தொகை அதிகரித்தது.  இன்னொரு இராமசாமிக் காலம் உதயமாகியது. இவ்வாறு அவர் செயற்படாமலிருந்தால் அன்றே எமது கல்லூரி இராமசாமி ஐயா காலத்தில் உயர்த்தப்பட்ட 1AB தரத்திலிருந்து 1C தரத்துக்கு தரம் இறங்கியிருக்கும். மாணவர்தொகை அதிகரிப்பினால் உரும்பிராய் இந்துக் கல்லூரிக்கு இடைஞ்சல் விளைவிக்கக்கூடாதென்று கருதிய அதிபர் அவர்கள், உரும்பிராய் இந்துக் கல்லூரிக்கு முன்னுள்ள தனியார் காணியில் தற்காலிக குடிசைகளை அமைத்து எமது கல்லூரியை இயங்க வைத்தார். இதற்கு ஐந்து லட்சம் தேவையென மதிப்பீடு செய்தார். ஆசிரியர்கள் அசந்து விட்டனர். அதிபர் அவர்கள் தன்னம்பிக்கையுடன் செயற்பட்டார். தானே மேடையேறி நாடகம் நடித்து நிதிசேகரிக்க முற்பட்டார். பெற்றோர் நலன் விரும்பிகளிடம் பனை மரங்களைப் பெற்றார்.  போராளிகளிடம் தளபாடங்களைப் பெற்றார். 58 மாணவர்களுடன் ஆரம்பித்து உயிருக்கு ஊசலாடிய பாடசாலையை திறம்பட நடத்தினார். அவரது அயராத உழைப்பினால் பக்கவாத நோய்க்கும் உள்ளானார். வெளிநாட்டு வாழ் பழைய மாணவர்களுடன் தொடர்புகொண்ட போது சுவிஸ் நாட்டில் வாழும் குப்பிளானைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரபாகரன், வயாவிளானைச் சேர்ந்த நலன் விரும்பி நந்தினி வேலுப்பிள்ளை போன்றோர்களின் நிதிதிரட்டலினால் ஏறத்தாழ 10 லட்சம் ரூபா வரை கல்லூரியின் வளர்ச்சிக்காகப் பெற்றார். யாழ் மாவட்ட பிரபல பாடசாலைகளுக்கு நிகராக பரீட்சை பெறுபேறுகளை உயர வைத்து சாதித்தும் காட்டினார். பல மாணவர்கள் அதிதிறமை சித்தி பெற்று சாதனை படைத்தனர். ஐயாத்துரை சதானந்தன் போன்றோர் அகில இலங்கை ரீதியிலும் இடம்பிடித்தனர். 

இவ்வாறான நிலையில் மீண்டும் 96களில் இடப்பெயர்வு, தென்மராட்சியில் தற்காலிகமாக எமது கல்லூரியை இயங்க வைத்து மீண்டும் உரும்பிராயில் எமது கல்லூரி இயங்கியது. 12 பரப்புக் காணியில் அமைத்த இல்லத்தில் 1350 மாணவர்களோடு வீறுநடை போடச்செய்தார். முன்னெப்போதும் இக்கல்லூரி கண்டிராத சாதனையை கீற்றுக்கொட்டில்களில் புழுதி படிந்த தரையில் படித்த மாணவச் செல்வங்கள் பத்தாண்டுகளில் நிகழ்த்திக் காட்டினர். 50 ற்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் புகுந்தனர். பத்திரிகைகள் கூட ஆசிரியர் தலையங்கங்கள் எமது பாடசாலை பற்றியே எழுதின. சோதனைக் காலத்திலும் சாதனைக்குரிய திறமையான அதிபராக விளங்கி 2001 ஆம் ஆண்டு திரு.கனகராஜா அதிபரிடம் கையளித்து ஓய்வு பெற்றார். யுத்த சூழலில் எமது கல்லூரியை யாழ் மாவட்டத்திலுள்ள பிரபல பாடசாலைகளுக்கு நிகராக கட்டியெழுப்பிய திரு.ஆ.சி நடராஜா அவர்களின் காலமும் இன்னொரு பொற்காலம் என்றே போற்றப்படுகின்றது. பூச்சியத்தில் இராச்சியம் அமைத்தவர் என்ற பெருமையை எம் அதிபர் பெற்றார்!

திரு.கனகராஜா அதிபர் அவர்களும் தனது முந்தைய அதிபர்களின் அடியொற்றி கல்லூரியை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும், விளையாட்டத்துறைகளிலும் சிறந்த பாடசாலையாக மிளிர வைத்தார். பாடசாலையின் தரத்தை சிறிதும் மங்காது பேணிக்காத்து சிறந்த நிர்வாக அதிபருக்கான குரு பிரதீபா பிரபா என்ற ஜனாதிபதி விருதைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தார். 

திரு.நடராஜா, கனகராஜா அதிபர்களின் அயராரத முயற்சியால் மீண்டும் எமது கல்லூரி தனது சொந்த இடத்துக்கு நிரந்தரமாகச் சென்று தலை நிமிர்ந்தது. இன்று அதிபர் திரு.ஜெயந்தன் அவர்கள் காலத்தில் மிடுக்கோடு பவளவிழாக்கண்டு நிற்பதையிட்டு பூரிப்படைகின்றேன். உலகமெல்லாம் பரந்து வாழும் பழைய மாணவர்களின் பெரும் பங்களிப்பு எமது கல்லூரிக்கு இன்று போய்ச் சேர்ந்துள்ள நிலையில் கல்லூரியின் தரம் கல்வியிலும் இதர செயற்பாடுகளிலும் முன்னேற்றம் கண்டு மேலும் சிறப்புற மனதார வாழ்த்துகின்றேன்! வாழ்க எமது கல்லூரியின் புகழ்! எமது கல்லூரிச் சமூகம் உரும்பிராய் மண்ணுக்கும் புன்னாலைக்கட்டுவன் மண்ணிற்கும் என்னென்றும் நன்றிக்கடன்பட்டுள்ளது!

1.இராமசாமி
2.கணேசபிள்ளை
3.நடராஜா
4.கனகராஜா

2,869 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *