கோபுர தரிசனம் – சம்பவம் (8)
கே.எஸ்.சுதாகர்
பாலம் ஒன்றைக் கடந்தவுடன், கோபுரம் மெதுவாகத் தெரிய ஆரம்பித்தது. “இன்னும் ஐந்து நிமிடங்களில் போய்விடலாம்” என்றான் சாரதி. இளம்பூரணன், கீத்தா, இரண்டு பிள்ளைகள் என சாரதியைத் தவிர்த்து நான்குபேர்கள் வாகனத்தில் இருந்தார்கள். இரண்டுநாட்கள் கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் தங்குமிடத்தில் இருந்து, கோவிலைத் தரிசிப்பது என்று திட்டமிட்ட பயணம்.
கோபுரம் முழுமையாகத் தெரிந்த கணப்பொழுதில், “இதற்கு மேல் வாகனத்தில் செல்ல முடியாது. கோவிலைச்சுற்றி பாதுகாப்பு அரண்கள் அமைத்திருக்கின்றார்கள்” என்றபடி சாரதி வாகனத்தை ஒரு ஆலமரத்தின் கீழ் நிற்பாட்டினான்.
“அப்ப இங்கிருந்து நடந்தே போகவேண்டுமா?” ஏக்கத்துடன் கேட்டான் இளம்பூரணன்.“இவ்வளவு பொதிகளையும் எப்படித் தூக்கிச் செல்வது?” கீத்தா புலம்பினாள்.
பொதிகளை இறக்கி, சடை விரித்திருந்த ஆலமரத்தின் அடியில் வைத்தார்கள். “அப்பனே முருகா!” கோபுரத்தை நோக்கிக் கரம் கூப்பினார்கள். புலரிப் பொழுது, சூரியக்கதிர்கள் கோபுரம் மீது படிந்து தகதகவென்று மின்னியது. இரவு பெய்திருந்த மழையினால் மணல்தரை நனைந்திருக்க, சாரதி வாகனத்தைத் திருப்பும் சரசரவென்ற சத்தம் கேட்டது. அவன் காரியம் முடிந்தது. திரும்பிவிட்டான்.
“நாங்கள் இங்கேயே நிற்கின்றோம். நீங்கள் ஒவ்வொரு பொதியாகக் கொண்டு போய் வையுங்கோ. கடைசியாக ஒன்றாகப் போகலாம்” கீத்தா சொல்லிக் கொண்டிருக்கும்போது, ஹடுக்கு டுக்கு’ என்ற சத்தத்துடன் ஒரு ஓட்டோ வந்து அருகில் நின்றது. “சார்… கோவிலுக்குப் போக வேண்டுமா? ஏறுங்கோ” ஆட்டுத்தாடியும் காதில் கடுக்கனுமாக ஓட்டோவுக்குள் இருந்து குரல் வந்தது.
“கோவிக்குக் கிட்டவா கொண்டுபோய் விடுவியா?”
“பின்ன…! இவ்வளவு பொருட்களையும் நீங்கள் ஒவ்வொண்டாக் கொண்டுபோய்ச் சேர்க்க அரைமணித்தியாலம் பிடிக்கும். நான் உங்களை ஐஞ்சு நிமிசத்திலை கோயிலுக்குக் கிட்டவா கொண்டுபோய் விடுவன்.”
“நாங்கள் நாலுபேரும், இவ்வளவு சாமான்களும் உன்ரை ஓட்டோவுக்குள் ஏறுமா?”
”இதென்ன கதை… சார், நீங்கள் என்னோடை முன்னுக்கு வாங்கோ… உவ உங்கடை மனிசிதானே! அவவும் பிள்ளையளும் பின்னுக்கை இருப்பினம். பொதியளை காலுக்கையும் கையுக்கையும் வைச்சிருங்கோ. இடம் காணாட்டி மேலுக்கும் போடலாம்.” ஆலமரத்தடி வெறுமையாகியது. ஓட்டோ ஒட்டகத்துக்கு இடம் குடுத்த கதையாக பிதுங்கிப் போனது. ஓட்டோக்காரன் பயணத்திற்கான காசை முன்கூட்டியே பெற்றுக்கொண்டது இளம்பூரணனைச் சங்கடத்தில் ஆழ்த்தியது. அவன் ஓட்டோவை எடுத்துக் கொண்டு வந்தவழியே ஓடத் தொடங்கினான்.
பெரிதாகத் தெரிந்த கோபுரம் சிறுக்கத் தொடங்க, இளம்பூரணனுக்கு சந்தேகம் வலுக்கத் தொடங்கியது. ஹஇவன் எங்களை ஏமாற்றப் போகின்றான்’ என மூளை சமிக்கை செய்தது. பொறுமையாகக் கடிகாரத்தையும் கோபுரத்தையும் பார்த்தபடி இருந்தான்.
“என்ன ஐஞ்சு நிமிஷத்திலை போகலாம் எண்டாய்… இப்ப பத்து நிமிஷமாப் போச்சு….”
”சார்… நீங்க வந்த வழியாத் திரும்பி, பிறகு கோயிலை நோக்கிப் போகவேணுமல்லவா!” ஓட்டோக்காரன் நாறல்வாயன் ஆனான்.
ஹகஞ்சா அடிச்சிருக்கிறானோ?’ என அவனை முகர்ந்து பார்த்துக் கண்டுபிடிப்பதற்குள், பதினைந்து நிமிடங்கள் கழிந்தன. அப்பொழுது கோபுரம் மெதுவாகத் தலை நீட்டியது. இளம்பூரணனுக்கு மூச்சுத் திரும்பியது. மனைவியும் பிள்ளைகளும் இளம்பூரணைப் பார்த்தபடி பேயறைந்தது போல் இருந்தார்கள்.
கோபுரம் மீண்டும் முழுசாகத் தெரிந்தபோது, “இதுக்கு மேலை ஓட்டோ போகாது சார்… இறங்குங்கோ!” என்றான் இவனும்.
”அப்ப நாங்கள் எண்ணண்டு போறது?” கீத்தா பெரும் குரலெடுத்து சத்தமிட்டாள். “பொதிகளையும் தூக்கிக் கொண்டு, உந்தப் பாதுகாப்பு அரணைக் கடந்து போங்கோ” சொல்லிக்கொண்டே பொதிகளை இறக்கித்தள்ளிவிட்டு, ஓட்டமெடுத்தான் ஓட்டோக்காரன்.
“அப்பா… அங்கை பாருங்கோ” என்றார்கள் பிள்ளைகள். அவர்கள் சுட்டிய திசையில், பத்து மீற்றர் தூரமளவில், அவர்கள் முதலில் வந்திறங்கிய ஆலமரம் சிலிர்த்துக்கொண்டு நின்றது. இளம்பூரணன் விதிர்விதிர்த்துப் போனான்.
1,151 total views, 3 views today