இரவோடு இரவாக
இரவோடு இரவாக வடக்குக்காணி
ஆவணங்கள் இடமாற்றம்
தமிழ் நிலங்களை அபகரிக்கும் கபடத்திட்டம்
பொ. ஐங்கரநேசன் -இலங்கை
யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்துக்குள் இயங்கி வரும் காணிச் சீர்திருத்த ஆணைக் குழுவின் வடமாகாணத்துக்கான அலுவலகத்தில் இருந்து காணி ஆவணங்கள் அநுராதபுர அலுவலகத்துக்கு இடம் மாற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு இடம் மாற்றப்படுவதற்குப் பலரும் எதிர்ப்பை வெளியிட்டபோதும், இரவோடு இரவாக யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களினதும் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. தமிழ் நிலங்களை அபகரித்து தென் இலங்கை வாசிகளுக்குக் கையளிக்கும் அரசாங்கத்தின் கபடத் திட்டமே இதுவாகும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
வடக்கின் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் அநுராதபுரத்துக்கு இடம் மாற்றப்பட்டமை தொடர்பாக பொ. ஐங்கரநேசன் (15.03.2021) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் வசமுள்ள காணிகள் அரச காணிகள் என்றாலும் இவை மக்களின் உறுதிக் காணிகள் ஆகும். இவை 1972ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அம்மையார் அவர்களால் 50 ஏக்கர்கள் காணிக்கு மேல் ஒருவர் உரிமையாளராக இருக்க முடியாது என்று கொண்டுவரப்பட்ட நில உச்ச வரம்புச் சட்டத்தின் காரணமாக அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட காணிகள்.
வடக்கில் எமது மக்களால் கையளிக்கப்பட்ட ஏறத்தாழ 12,000 ஏக்கர் பரப்புடைய காணிகளின் ஆவணங்களே இப்போது அநுராதபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவிடமுள்ள வடக்கு மாகாணக் காணிகள் பற்றிய விபரங்கள் எவையும் வடக்கு மாகாண சபையிடம் இல்லை. வடமாகாணக் காணித் திணைக்களம், வடமாகாண ஆளுநர் அலுவலகம் இவை பற்றிய விபரங்களைக் கோரியபோதும் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு இவற்றைத் தெரியப்படுத்த மறுத்ததோடு, மிகவும் இரகசியமாகக் காணிகளைச் சிங்கள மக்களுக்கு நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு, பளையில் சிங்கள மக்களுக்குக் காணிகள் ஒதுக்கப்பட்டிருப்பது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒரு இலட்சம் காணித் துண்டுகளைச் சுயதொழில் முனைவோருக்குப் பகிர்ந்தளிக்கும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் நிலையிலேயே காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவினால் வடக்கின் ஆவணங்கள் அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது, வடக்கில் சிங்கள மக்களுக்குக் காணிகளை வழங்கும் கரவான திட்டத்தின் முதற்படியேயன்றி வேறல்ல் இது, தமிழ் மக்களை அவர்களது பாரம்பரிய தாயகத்திலேயே சிறுபான்மையினராக்கும் பொருட்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு நிகழ்ச்சி நிரலின் ஓரங்கம் ஆகும்.
இக்காணிகள் வடக்கைப் பூர்வீகமாகக் கொண்டுள்ளவர்களுக்கு மாத்திரமே பகிர்ந்தளிக்கப்படுவதைத் தமிழ் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதிகள் எப்பாடுபட்டேனும் உறுதிசெய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
959 total views, 3 views today