ஒப்பரேஷன் ‘பூ மாலை’க்கு அடையாளமிட்ட பரதனின் ‘நிதர்சனம்’ தொலைக்காட்சி கோபுரம்

-அனந்த பாலகிட்ணர்-

1987ஆம் ஆண்டு ஜுன் மாதம் 4ஆம் திகதி பிற்பகல்வேளை, யாழ்ப்பாணக்குடாநாட்டின் வான்வெளியை ஊடறுத்தவாறு இந்திய விமானப்படையின் மிராஜ் போர் விமானங்கள் சிலவும், ஓரிரு அன்டநோவ் போக்குவரத்து விமானங்களும் அசுர வேகத்தில் நுழைந்தன. ‘ஓப்பரேஷன் லிபரேஷன்’ என்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான முதலாவது பரந்துபட்ட இராணுவ நடவடிக்கை, வடமராட்சி பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்த தருணத்தில், அச்சத்தினால் உறைந்து போயிருந்த வடமாகாண மக்களுக்கு மனத்தைரியத்தை தருவதுபோலவே இந்திய விமானப்படையின் உணவு மற்றும் மருந்து பொருட்களை வானிலிருந்து யாழ்குடா நாட்டினுள் போடும் நடவடிக்கை அமைந்திருந்தது.
மிகவும் துல்லியமாக, காரைநகர் கடற்படை முகாமுக்கு மேலாக உள்ள வடமாகாண வான்வெளியை ஊடறுத்த இந்திய விமானங்கள், இருபது நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் தமது கைவரிசையை காண்பித்துவிட்டு, வந்த வேகத்திலேயே மீளவும் இந்திய வான் பரப்புக்குள் நுழைந்து கொண்டன.
ஓப்பரேஷன் ‘பூ மாலை’

இந்தியாவின் இந்த மின்னல் வேக விமானப்படை நடவடிக்கைக்கு ஒப்பரேஷன் ‘பூ மாலை’ எனப்பெயரிடப்பட்டிருந்தது. இந்திய விமானங்கள் உணவு மற்றும் மருந்து வகைகளை ஏற்றியவாறு யாழ் குடாநாட்டின் வான்பரப்புக்குள் நுழைந்ததும் அவற்றை தரையில் போடுவதற்கு ஓர் அடையாளத்தை மையப்படுத்தவேண்டிய தேவை இந்திய விமானிகளுக்கு ஏற்பட்டிருந்தது. அப்போது அவர்கள் வானிலிருந்து தேர்ந்தெடுத்த முக்கிய அடையாளமே நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பினால் லண்டனில் காலமான இராஜநாயகம் பரதன், கொக்குவில் புகையிரத நிலையத்துக்கு அருகே அமைத்திருந்த, அகன்று மிக உயரமாக அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ‘நிதர்சனம்’ தொலைக்காட்சி அஞ்சல் கோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்பதுகளின் நடுப்பகுதியில், மிகக்குறைவான வளங்களோடு அடிக்கடி மின்சாரத் துண்டிப்புகளும் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் வடமாகாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி, வானொலி ஊடகத்துறைக்கு உரமூட்டியவர் இ. பரதன் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஈழநாடு’ பத்திரிகையில் கடமையாற்றிக்கொண்டிருந்த சமயம் ஒருநாள் இரவுவேளை, மானிப்பாய் வீதியில் அமைந்திருந்த ஈழநாடு அலுவலகத்துக்கு பரதன், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை முக்கியஸ்தராக இருந்த இ. பார்த்தீபன் என்ற இயற்பெயரைக்கொண்டிருந்த திலீபன் சகிதம் வந்திருந்தார்.

ஊடக மகாநாடு

அப்போது, ஈழநாடு செய்தி ஆசிரியர் கே. ஜி. மகாதேவாவுடன் இரவுப்பணியல் ஈடுபட்டுக்கோண்டிருந்தபோது திலீபனும், பரதனும் எம்மருகே வந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சியின் ஆரம்பம் குறித்த ஊடக மகாநாடொன்று நல்லூரில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அலுவலகத்தில் இடம்பெறும் என அறியத்தந்தனர். அச்சமயம் திலீபனிடமும், பரதனிடமும் என்னை அந்த ஊடக மகாநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி, மறுநாள் காலை அம் மகாநாட்டுக்கு போகுமாறு செய்தி ஆசிரியர் மகாதேவா எனக்குப் பணித்தார்.
நிதர்சனம் தொலைக்காட்சி அறிமுகம் குறித்த அந்த ஊடக மகாநாட்டில் பங்குபற்றியமை இன்றுங்கூட மனதில் பசுமையாக இருக்கின்றது. அம்மகாநாடு தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட தளபதியாகவிருந்த கிட்டு என்ற புனைபெயரைக்கொண்டிருந்த சதாசிவம் கிருஷ்ணகுமாரினால் நடத்தப்பட்டிருந்தது. அப்போது, தமக்கேயுரிய புன்முறுவலுடன் ஊடகத்துறை மகாநாட்டை நடத்திய கிட்டு, தமிழீழ தொலைக்காட்சி சேவையின் பெயர் ‘நிதர்சனம்’ என தெரிவித்ததோடுஃ நிதர்சனம் என்பதன் அர்த்தம் ‘உண்மை’ எனக்கூறி மேலும் விளக்கமளித்தார். அச்சமயம் நிதர்சனம் தொலைக்காட்சியை வடிவமைத்த பரதன் யாவற்றையும் தமக்கேயுரிய மெலிதான புன்னகையோடு அமைதியாக செவிமடுத்தவாறு கேட்டுக்கொண்டிருந்தார்.

களத்தில் பரதன்
பரதன் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியமான நிகழ்வுகளை துல்லியமாக நிதர்சனத்தில் பதிவேற்றிவந்தார். அவருக்கென ஓர் ஊடக அணியொன்று காணப்பட்டிருந்தபோதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அன்றைய முக்கிய நிகழ்வுகள், மற்றும் சந்திப்புகள் என்பவற்றை பரதனே அன்று முன்னின்று தமது தொலைக்காட்சி புகைப்படக் கருவியை தோளில் சுமந்தவாறு நிகழ்வுகளை பதிவு செய்திருந்தார்.

எண்பதுகளின் நடுப்பகுதியில் கிளிநொச்சிப்பகுதியில் கொக்காவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினியின் அஞ்சல் கோபுரம் தகர்க்கப்பட்ட நிலையில், வடமாகாணத்தில் பரதனால் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி அஞ்சல் கோபுரம் வாயிலாகவே நிதர்சனம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியிருந்தன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான பரதன், பாடசாலை நாட்களின் சதுரங்க விளையாட்டிலும் ஒரு சிறந்த மாணவனாக விளங்கினார்.

இலங்கையிலேயே அதிகளவு பிராந்திய ரீதியாக பத்திரிகைகள் வெளியாகும் மாகாணமாக வடமாகாணம் விளங்குவதோடு, இலங்கையின் முதலாவது பிராந்திய தொலைக்காட்சி என்ற பெருமைக்குரிய வகையில் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் டான் தொலைக்காட்சி சிறப்புற்றிருக்கின்றது.

எதுஎப்படியிருந்தபோதிலும், பிராந்திய ரீதியாக இலத்திரனியல் ஊடகத்துறையை நான்கு தசாப்தங்களுக்கு முன்னரேயே உருவாக்குவதில் வெற்றிபெறமுடியம் என்பதனை முதலில் தமது சுய முயற்சியினால் நிரூபித்துக்காட்டியவர், தமது அறுபதாவது வயதில் 18.03.2021 லண்டனில் ; இவ்வுலக வாழ்வை நீத்த இராஜநாயகம் பரதன் என்பது குறிப்பிடத்தக்கது.

917 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *