பேசும் படம்.
வெற்றிமணி ஆசிரியர் கண்களுக்குள் பட்ட காட்சி படமானபோது! அதனை முகப்புத்தகத்தில் பதிந்து படத்தின் உணர்வை வரிகளாக்கும் படி கேட்டிருந்தார். அதனை வெற்றிமணியின் நடுபக்கம் என்பக்கம் என்பதாலோ என்னையே நடுவராகுங்கள் என்றார். 7 பெயர்களை தெரியுங்கள் என்றார். எப்படியும் சம்மதிக்க வைப்பார் என்பதனால் நானே சம்மதித்தேன்.
கவிதைகள் மலர்களைப் போல. ரோஜாவின் அழகும், தாழம்பூவின் வாசமும் வெவ்வேறானவை. ஆனால் அனைத்துமே தனித்துவமானவை. இந்தப் போட்டிக்கு வந்திருந்த அத்தனை கவிதைகளுமே அழகும் வாசனையும் கலந்து கட்டிய கவிதைகள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மலர் பிடிக்கும். அதற்காக மற்ற மலர்கள் அழகில்லை என்பது அர்த்தமல்ல. பறிக்கப்படவில்லை என்பதற்காய் மலர் அழகில்லை என்று பொருளல்ல. பூப்பதே பூவின் வெற்றி, பறிக்கப்படுவதல்ல. எனவே தொடர்ந்து எழுதுங்கள். தொடுவானம் தொட ஓடட்டும் உங்கள் கற்பனையின் கால்கள். அடியாழம் தொட நீந்தட்டும் உங்கள் சிந்தனைகளின் வேகம். அனைவருக்கும் வாழ்த்துகள். என்னைக் கவர்ந்த 7 கவிதைகள் இதோ
அன்புடன் உங்கள் நடுவே சேவியர் (தமிழ்நாடு)
நீ வரவேமாட்டாய் என்பதை
மறந்துவிட்டேன்
இப்போது காத்திருப்பது
சுகமாக இருக்கிறது!
- யாழ் அகத்தியன்
மனிதர்களே இல்லா வெற்று வெளியில்
மனிதத்தை தேடும்
ஒற்றை குருவி நான்….
-மதினி உதயகுமார்
காணமலாக்கப்பட்ட மனிதனுக்கே
மனித உரிமை சபையிலும்
ஐநா சபையிலும் விடையில்லை
எனும் போது என்னவனுக்கு மட்டும் ?
-தயாநிதி தம்பையா
மனிதனின் உள் இருக்கையால்
உவத்திரம் இன்றி துய்க்க முடிகிறது
தூய்மையான பொழுதை.
-சின்னத்துரை இரவீந்திரன்.
இருண்ட கருமேகங்களின்- நடுவே
துகிலுரிந்த மரம்போல நானும்
தனிமையினால் ஜோடியின்றி தவிக்கிறேன்….
-கி.த.குகதாசன்
உன்னோடு சேர்ந்து வாழ்ந்து
நீந்திக்களித்த கரையோரம்
நினைவுகளை சுமந்தபடி
காத்திருப்பதும்
ஓர் சுகமே
-பாமினி துஷ்யந்தன்.
நானும் என் சுற்றமும் மகிழ்ந்து பாடிய
அழகிய பூஞ்சோலை
அடர்பனிக்கு ஏனிந்தப்
பொறாமை
கருக்கிவிட்டு இருள்
கவிழ்த்ததை முறையிட்டு
கதிரவன் வருகைக்காய்
ஒற்றைக்காலில் தவம்
-கரிணி
1,190 total views, 3 views today