பெட்டிப்பிளேன்
கனகசபேசன் அகிலன் -இங்கிலாந்து
பல வருடங்களுக்கு முன் எழுத நினைத்த விடயம், ‘இப்ப என்ன அவசரம்’ என்று தள்ளிப்போட்டு விட்டேன்…சில வருடங்களுக்கு முன் கிட்டத்தட்ட அதையே வேறொருவர் கவிதையாக எழுதி நான் வாசித்தபோது ‘சீ, முந்திவிட்டாரே’ என்று சிறிது முனகிக்கொண்டேன், ‘அவரும் யோசித்திருக்கின்றாரே’ என்று மகிழ்ச்சியும் கூட! அதை எழுதியவர் மறைந்த பிரபல பாடலாசிரியர் நா. முத்துக்குமார் அவர்கள். ஒரு வித்தியாசம், அவருக்கு ஐந்தாம் வகுப்பில் நடந்தது எனக்கு முதலாம் வகுப்பிலேயே நடந்தது, உங்களுக்கும் அப்படியொரு அனுபவம் இருக்கலாம்…’இதெல்லாம் எழுதி யாருக்கு வெளிச்சம்?’ என்று எண்ணி நீங்களும் கடந்து சென்றிருக்கலாம்…
முன்பள்ளியில் என் காலம் முடிவடைந்து ஆரம்ப பாடசாலைக்குச் செல்கின்றேன், எனது வீட்டிலிருந்து கிட்டத்தட்ட பதினைந்து நிமிட நடை, அன்று வரை வீட்டிலிருந்து ஐந்நூறு மீட்டருக்குமேல் தனியாக எங்கும் சென்றதில்லை. முன்பள்ளி வீட்டிலிருந்து மூன்று நிமிடம் கூட இருக்காது! முன்பள்ளியென்பதை விட ‘குழந்தைகளுக்கான பகல் விடுதி (creche)’ என்று கூறுவதே மிகவும் பொருத்தம். ஒரு காலத்தில் இலங்கையில் இப்படி இரு விடுதிகளே இருந்தன என்று அறிந்தேன், இந்த பாலர் பகல் விடுதி எமது கிராமத்தினருக்கும் அயலில் உள்ளவர்க்கும் அன்றும் இன்றும் மிகவும் பயனுள்ளதாக செயற்படுகின்றது, இதை நிறுவியவரின் முற்போக்கு சிந்தனைக்கு ஒரு எடுத்துக்காட்டு! (இரு பாடசாலைகளின் புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன).
முதலாம் வகுப்பு, ஆரம்ப பாடசாலையில் இணைந்து சில வாரங்களே சென்றிருக்கும், எனக்கு ஒரே ஒரு மாணவனை மட்டுமே தெரியும், அவன் மூலமாக, இன்னுமொரு நண்பனும் அறிமுகமானான், மூன்று பேரும் அருகருகே வகுப்பில்…ஆசிரியர் வழமைபோல் வகுப்பிற்கு வருகின்றார், ‘வணக்கம் டீச்சர்…’ சொல்லிவிட்டு அமர்கின்றோம்…டீச்சர் ஆரம்பிக்கின்றார் ‘பிள்ளையள், இன்றைக்கு நீங்களெல்லோரும் வளர்ந்தாப்பிறகு என்னவாய் வர விருப்பமென்று சொல்ல வேண்டும் என்று…எல்லோரும் ‘டொக்டர், என்ஜினியர் என்று ஏதோ எல்லாம் சொன்னார்கள், எனக்கு எல்லாம் பச்சையாகவே தெரிந்தது, வகுப்பின் திறந்த கதவினூடே தெரியும் விளையாட்டு மைதானத்தின் பசுமை நிறம்! ‘விளையாடவென்று பள்ளிக்கூடம் வந்தால் வினையாக முடிஞ்சுட்டுதே…’ என்று எண்ணியபடி, அருகில் இருந்த நண்பனைத் தட்டி, இரகசியமாக ‘என்னடா சொல்ல?’ என்று கேட்டேன். அவனோ அவசரத்தில் ‘டீச்சர் பார்க்கின்றா…பைலட் (pilot) என்று சொல்லு’ என்றான். எனக்கோ ‘பைலட்’ என்றால் என்னவென்றே தெரியாது, டீச்சர் விளக்கம் கேட்டால் என்ன சொல்வது? அவனைத் திரும்பவும் சிறிதாகச் சுரண்டி ‘டேய், அப்படியெண்டா என்னடா ?’ என்று அதட்டினேன். அவன் பதற்றத்துடன் ‘எனக்கும் தெரியாது, இப்போதைக்கு சும்மா சொல்லடா…’ என்று கோபப்பட்டான்.
எனது நல்ல காலம் பின் வரிசையிலிருந்த என்னிடம் வர முன்பே டீச்சருக்கு எல்லோரது வருங்காலத் தொழில்களையும் கேட்டு அலுத்து விட்டதோ அல்லது ‘பின் வாங்கு முன்னேறாது’ என்று கைவிட்டு விட்டாரோ தெரியவில்லை…அப்போது தப்பிவிட்டேன் ஆனால் நான் அந்த நிகழ்விலிருந்து முழுதாக மீழவில்லை, வீட்டுக்குச் சென்றவுடன் ‘பைலட்’ என்றால் என்னவென்று அறிந்து கொண்டேன். அன்றிலிருந்து ஆகாயத்தில் சத்தம் கேட்கும் போதெல்லாம் அண்ணார்ந்து பார்ப்பேன், அந்த நேரத்தில் அடிக்கடி தெரிவது ‘பெட்டிப்பிளேன்’, கீழிருந்து பார்த்தால் அதன் பின்பகுதி சதுரப்பெட்டி போல் இருக்கும்… ‘ இந்த உயரத்தில்லா நான் பறப்பது? ‘சீ, உதெல்லாம் சரிவராது,எட்டாப் பழம் புளிக்கும்’ என்று ‘பைலட்’ வேலைக்கு முழுக்குப் போட்டு விட்டேன்.
எதுவுமே அறியாத,ஏழு வயது மாணவர்களிடம் பல வருடங்களுக்குப் பின் நடக்கும் விடயத்தைப் பற்றி கேட்டால் என்ன சொல்லுவார்கள்? பல ஆசிரியர்கள், அறிந்தோ அறியாமலோ, இந்தக் கேள்வியை இன்னமும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இது ஒரு பெரிய பிழையான கேள்வியல்ல, இருந்தாலும் அந்த வயதில் ‘வெறுமையான மைதானம்’ போல் இருக்கும் மாணவர்களின் மூளைக்கு இப்படியான கேள்விகளால் என்ன பயன் என்று எண்ணத் தோன்றுகின்றது. வெளியுலகத்தை பெரிதும் அறியாத, விளையாட்டே தம் தொழில் என்று பொழுதைக் கழிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தைப் பற்றி எப்படிச் சிந்திப்பார்கள்? ஆசிரியர்கள் இப்படியான தகவல்களை சேகரித்து அதை மாணவர்களுக்கு பிரயோசனமாகப் பயன்படுத்தினால் பரவாயில்லை ஆனால் அதிகமான நேரங்களில் மேலதிகமாக ஏதும் நடப்பதில்லை…
இக்கட்டான கேள்விகளை கேட்க முன்பு மாணவர்களுக்கு முழுமையான விளக்கத்தைக் கொடுத்துவிட்டு பின்பு கேள்விகளைக் கேட்க வேண்டும். இல்லையெனில் ‘பிளேன் விழுந்து விடும்’ என்று நான் நினைத்தது போல், ‘டாக்டர்கள் இரத்த உறுஞ்சிகள்’ ‘விவசாயிகள் வெறும் மண் பூச்சிகள், வாழ்நாள் ஏழைகள்’…என்று சிலர் அறியாத வயதில் பிழையான விடயங்களை மூளையில் புகுத்தி விடக்கூடும்.ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்காலத்தில் சரியான முடிவுகளை எடுப்பதற்கு தேவையான எல்லா தகவல்களையும் வழங்கி அவர்களுக்கு வரும் சந்தேகங்களைத் தீர்த்து வைத்து உறுதுணையாக இருக்க வேண்டும். உதவியற்ற கேள்விகளை கேட்டு அறியாப்பருவதில் இருக்கும் மாணவர்களின் மனதில் பயத்தை விதைத்து விடக்கூடாது.
‘Teachers are the managers of the world’s greatest resource; Children!’
1,145 total views, 3 views today