கவிதா லட்சுமி கவிதைகள்

எதிர்ப்பின் நடனம்

துணிவப்பிய முகத்தோடு
நான் வெளிக்கிளம்பினால்
முகப்பூச்சும் பொட்டும் இட்டுவிடுகிறாள்

அம்மா

கால்களைப் பரப்பி கம்பீரமாய்
எதிர்பை உடுத்திப் புறப்பட்டால்
சேலையொன்றைப் பாசமாய் பரிசளிக்கிறார்
அப்பா

என் பேருருவில் பதுக்கிய உணர்வுகளை
பிறாண்டி எடுத்து
பேசத் தொடங்கினால்
பெண்ணாக இரேன் என்கிறான்
தம்பி

மனுசியாய் இருக்க
யாருக்கு மனுப்போட என சர்ச்சித்தால்
பிரளயத்திற்கு பிறந்தவளே உட்கார் என்கிறான்
திருப்தியற்று, கணவன்

பெருந்திசைகளில் நான் எங்கிருந்தாலும்
முலைகளையும் பெண்குறிகளையும்
முதலிற்கண்டு, எனக்கே காட்டி
”இவை நீ“ என்கிறார்

பிரபஞ்சம் வியக்க
இவர்களை பகிரங்கமாய்
”யார் நீ” என்றேன்


பிறக்கப்போகும் சிறுமி

உடல் முழுதும் இறக்கைகளோடு
முதலாம் நூற்றாண்டின் சிற்பிகள் வசிக்கும்
நகரத்திற்குள் அவள் பிரவேசித்தாள்

அவளது ஆக்கும் திறனோடு மோதி
பெருமதில்கள்; உடைந்தன
ஆங்காங்கே நின்ற விருட்ச மரங்களின்
கிளைகளோடும் இலைகளோடும் அவள் பாடினாள்
நட்சத்திரங்களை சலங்கையாக்கி
சிறுமி ஆடிக்கொண்டிருந்த பொழுதில்
சிற்பிகள் வந்தார்கள்

சிறுமியின் ஆற்றலிலும், ஆடலிலும்
வனப்பிலும் அவளை தம் பெண்தெய்வங்கள்
வீற்றிருந்த கோவில்களில்
வாஞ்சையோடு மீண்டும் சிற்பம் வடிக்கத் தொடங்கினர்

பெரும் பாறைகளின்று பெயர்த்து
தன்னிலிருந்த துகள்களைத் தட்டியபடி

உங்கள் உளியை என்னிடம் தருவீர்களானால்
எனது ஆற்றலையும் சிந்தனையையும் நான் தருகிறேன்
என அவள் பேசத்தொடங்கினாள்.


சில முடிவுகளை விரல்களே
எடுத்துவிடுகின்றன

எனது கைகள்
உங்களுக்கானவை தான்
எனது விரல்களும் தசைகளும்
உங்களுக்கானவை தான்.

நீ‌ங்க‌ள் என்னைப்
பெருமிதம் கொள்ள வைக்கும்போது
எனது பெருவிரலை
உங்களுக்காக உயர்த்துகிறேன்

சுண்டுவிரலை
குழந்தைகள் பிடித்து வரவும்
சுட்டுவிரலை
மாணவர்களுக்காகவும்
மோதிரவிரலை
தன் கைகளைக்
கொடுப்பவனுக்காகவும்
நீட்டுகிறேன்

இன்னபிற விரலும்
இப்படியாகவே
எப்போது,
எச்சந்தர்ப்பத்தில்,
யாருக்கு,
எந்த விரலை…
நீட்டுவது
என்பதை
நானே தீர்மானிக்கிறேன்!

அழகுதான்

வரிசையாக
நாட்டப்பட்ட மரங்கள்
நேர்க்கோட்டில்
வைக்கப்பட்ட ரோஜாக்கள்
வட்டத்திற்குள்
ஒழுங்கமைக்கப்பட்ட
செவ்வந்திகள்
வேலிகளில்
படரவிட்ட கொடிப்பூக்கள்
கத்தரிக்கப்பட்ட
புற்தரைகள்
நம் வசதிக்கு
நம் பார்வைக்கு என
பூங்காக்கள்
தோட்டங்கள்
அழகானவை
மென்மையானவை
பாதுகாப்பானவை
எனினும்
இயற்கையின் உச்சம்
காடு!
ஆதிமனுசியைப் போல
காடு பேரியற்கை
காடு பெண்ணியப் பெண்
ஒரு காடு
கைவசமாவது
அத்தனை சுலபமல்ல

கவிதா லட்சுமி-நோர்வே

1,069 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *