ஊர் நினைவுகளின் ஊர்வலம்!
பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.
இந்த தலைப்பு எனக்கு மட்டும் உரியதல்ல,
பிறந்த மண்ணைப் பிரிந்து வாழும் அனைவருக்கும் ஏற்றது.எனலாம்.
வாழுகின்ற வாழ்க்கையில் ஏற்றமும்,இறக்கமும் பொதுவானது என்றாலும்.
சிலருக்கு மாத்திரம் சிறப்பாக அமைந்து விடுகிறது.எப்படி?என்ற கேள்விக்கு அவரவர் முயற்சியால் நிகழ்ந்தது.என்று முடித்து விடலாம்.அது நேராகவும் இருக்கலாம் ,குறுக்காவும் இருக்கலாம்.நமக்கு இதைப்பற்றிய ஆராய்ச்சி தேவையில்லை.என்னதான் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் ஊரைப்பற்றிய ஏக்கங்கள் இல்லாமல் போனதில்லை.அந்த நாள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள நண்பர்களைத் தேடுகின்றோம்.மனைவி ,மக்கள் பேசினாலும்
மணிக்கணக்கான எங்களின் பழைய ஞாபங்கள் ,எடுத்த ரெலிபோனை வைக்க மனமில்லாமல் நிறைவு பெறுகின்றன.
மீண்டும் அடுத்த நண்பனைத் தேடுகின்றோம்.
நம்மோடு வாழ்ந்தவர்கள் பலர் இல்லாமலே போய் சேர்ந்து விட்டார்கள்.புலத்திலும்,நிலத்திலும் தான்.இப்போதெல்லாம் அதிகமாகவே ஊரை நினைக்கத்தோன்றுகிறது.வன்னியில் உள்ள முல்லைத்தீவுக்குப் பக்கத்திலுள்ள வட்டுவ
வாகல் தான் எனது ஊர்.முல்லைத்தீவு ரவுணிலிருந்து1 .1ஃ2 மைல் தூரம்.நந்திக்கடல் ,எங்களூரில் தான் அழகும்,வளமும் சேர்க்கிறது.
மறக்க முடியாத வரலாற்றை இறுதியுத்தம் இங்கேதான் பதிவு செய்திருக்கிறது.செங்குருதியால் நந்திக்கடல் சிகப்பாகிப் போனது.
காலங்கள் மறக்க முடியாத களங்கம் இங்கே நிகழ்ந்து முடிந்திருக்கிறது.இதன் உண்மைகளை நந்திக்கடல் அறியும்.
றால் உற்பத்தியில் பல கோடிக்கணக்கான வருமானத்தை குறுகிய காலத்தில் பெற்றுக் கொடுக்கும் காமதேனு.இந்த நந்திக்கடல் .வளம் மாத்திரமன்றி எமது ஊரைப் பாதுகாக்கும் ஒரு தாயாக இந்த நந்திக்கடல் விளங்குகிறது.64ம் ஆண்டு புயலின் போதும்,2004ம் ஆண்டு சுனாமியின் போதும் ஊருக்குள் புகுந்த கடலை உள்வாங்கி,வற்றாப்பளை மட்டும் கொண்டு சென்று வேகத்தைக்குறைத்து,சேதாரமின்றி மக்களைக் காத்து திரும்பவும் கடலிலே கலக்க வைத்தது.
இதை நம்மவர்கள் என்றுமே மறக்க மாட்டார்கள். வன்னி .இயற்கை எழில் கொஞ்சும் வளம் நிறைந்த பிரதேசம்.
ஐவகை நிலங்களில் பாலை நிலத்தைத் தவிர ஏனைய நிலவளங்கள் வன்னியிலுண்டு.
மருதம்,குறிஞ்சி,நெய்தல்,முல்லை என்கிற நால் வகை நிலங்களுக்கும் உரிய சிறப்பு இந்த மண்ணிற்கு உண்டு.
களனிகள் வழிந்தோட,அதில் கமலங்கள் அசைந்தாட,வண்டுகள் கீதம்பாட,குளு குளு என்று தென்றல் இசைமீட்க,தேனருவிகள் கீதம்பாட,பச்சைப் பசேலென புற்றரைகள் பார்ப்போர் கண்ணுக்கு விருந்தூட்ட,நெல்மணிகள் கொத்துக்கொத்தாக வருவோரை வரவேற்க,மயிலாடக் குயில் பாட என்றெல்லாம் எங்கள் மாவட்டத்தை வர்ணிக்கலாம்.நற்பலன்தரும் மரங்கள்,பழங்கள்,கிழங்குகள்,செடி கொடிகள் ,எல்லாம் இப்பிரதேசத்தை அழகு படுத்துகின்றன.
தன்னிச்சையாக காடுகளில் பூத்துக்குலுங்கி மலர்ந்து மணம்வீசும் விதம்விதமான வண்ண மலர்கள் கொள்ளை அழகு தரும்.
ஐவகை நிலம் வகுத்த தமிழன் மருதத்தில் உழவு செய்தான்.உழவுத்தொழிலை பொன்னே போல் போற்றி கண்ணேபோல் காத்து வந்தான்.மன்னரும் அதனை மதித்துப் பேணினர்.குளம் தொட்டு வளம் பேணினர் .செங்கோலை நடாத்தும் கோல் ஏரடிக்கும் சிறு கோலென உணர்ந்து அதனை மங்காது காத்தனர்.வரப்புயர நீர் உயர்ந்தது.நீருயர நெல்லுயர்ந்தது.நெல்லுயர குடி உயர்ந்தது.குடி உயரக் கோனும் .உயர்ந்தான்.
நான் சின்ன வகுப்பில் பேச்சுப் போட்டியில் பேசியது.வரிக்கு வரி பேசும்போது நம்ம ஊர்வயல்களைத்தான் நினைத்துப் பார்ப்பேன்.
இங்கு வாழுகின்ற மக்கள் ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாற பின்னின்றதில்லை.நந்திக்கடலின் பக்கத்தில்,ஊர்மக்களின் நம்பிக்கைக்குரிய தெய்வமாக சப்த கன்னிமார் ஆலயம்,இன்னுமொரு பக்கம் புகழ்பெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில்,என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
மா,பலா,வாழையுடன்,காட்டுப் பழங்களான பாலை,வீரை,துவரை ,முரலி போன்ற பழங்களின் சேட்டைகள் வைகாசி,ஆனி,ஆடி மாதங்களில் ,வந்து குவியும் நினைக்கவே வாயூறும்.
ஊரைப்பற்றி எவ்வளவோ எழுதலாம்.அதற்கு வெற்றிமணி ஆசிரியரும் சம்மதிக்க வேணும்.அதனால் மனமின்றி முடிக்கிறேன்.( இது இணையத்தில் வரும் பத்திரிகை அல்ல அச்சில் வருவதால் சிக்கனம் கருதி சிவகுமாரன் சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றார்.)
“ஊரை நினைக்கையிலே ஓராயிரம் கவிதை சொல்வேன். ஒவ்வொரு சொல்லினிலும். என் உயிர் மூச்சு நிறைந்திருக்கும்”
நன்றி.
1,549 total views, 3 views today