அபிநயக்ஷேத்திராவின் முதல் மாணவி ஆரணி.

பெண்ணின் மொழியை கண்ணின் மொழியில் காணும் மன்னவன் விண்ணவன் ஆவது போல், உதட்டுக்குள் ஒட்டிக்கொள்ளும் எண்ணங்களை நிஜ வண்ணங்களாக்கி நிழலாய் , நினைவாய் தொடர செய்யும் ஒளிபோல் , மேகமேடையில் நர்த்தனமாடும் பூத்த வதனத்தைக் கண்டு புவி மீதிருந்து புலனழிந்து போவது போல் , மௌனத்தில் வெள்ளமாகும் ஆனந்தத்தை போல் , மழைதுளியோடு ஊஞ்சலாடும் காற்றைப் போல் , பிரபஞ்ச வெளியில் உலவும் பட்டாம்பூச்சி போல் , தான் கெடும் தன்மை தாங்கி , தேகவேகம் கொன்று உணர்வை வென்று ஆத்ம ஆதாரமாய் நிறைந்த அனுபவத்தை அன்று பெற்றேன்.

சிட்டுக்குருவி மனமும், சிட்டெறும்பு பாதமும் என சுந்தரமாய் சுதந்திரமாய் சுற்றித் திரியும் சின்ன வயது குறும்பையெல்லாம் கரும்பாக்கி வெல்லப்பாகு வெள்ளமெனப் பாய்ந்தாடிக்கொண்டு இருந்தாள் அரங்கில் ஆரணி.வயது 12,ஆனால் அவள் அபிநயத்தில் பேரிளம்பெண். வேண்டிய படி செல்லும் உடல் , ஆதலால் அவள் நிருத்தம் நதி . குழந்தையாக , குருகுலமாக என் வீட்டில் தங்கியிருக்கும் போது கூட அறிந்திருக்கவில்லை அவள் தரப்போகும் அரங்கேற்ற ஆற்றுகைப் பரிசின் தரம். திரு விஸ்வநாதன் அவர்களின் முழவிசை நாதாமிருதமாக, திரு கலையரசன் அவர்களின் நரம்பிசைக்கு உறவாடிக்கொண்டிருந்தது திரு நந்தகுமார் அவர்களின் மிடற்றிசை. இவற்றையெல்லாம் இரு கையில் ஏந்தி,நட்டுவாங்கத்தில் லயமாக்கி இசைந்து கொண்டிருந்தேன்.

மண்டப வாயில் முதல் மங்களம் வரை நானே வடிவமைக்க வேண்டும் என்ற இள வயது ஆசை. அரிசிக்கோலத்தை அலங்கரித்தது உடுக்கு. உடுக்கின் கயிறுகளாக சங்கு. ஹரி ஹர கோலம் . அரங்கேற்ற மலரின் முகப்பில் நடராஜர் அருகே ஆடல் நங்கை ஸ்ரீராமர் நிலையில் காட்சி.
சூரிய வந்தனமாக புஷ்பாஞ்சலி, சதுஸ்ர அலாரிப்பு, ரசிகப்ரியா ஜதீஸ்வரம், தசாவதார வர்ணம் என அரங்கதிர ஆடினாள் ஆரணி . இறைவா நீ தள்ளி போனால் நான் எங்கு தான் செல்வேனோ என கண்கள் குளமாக பக்தி கொண்டு ஆடினான். லயத்தினை வென்றது அபிநயம்.

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்
வெளியி லிரத்தக் கயொடு பூதம் பாட-
என பாரதியின் ஊழிக்கூத்தாடினாள், அதில் பொய் ஆணவ ஊனம் ஒழிய வேண்டும், கள்ளம் உருக வேண்டும், வேட்கை தணிய வேண்டும் என்று அபிநய கோஷமிட்டாள். இரவியின் கொதிப்பில் இருந்து இளநிலவின் குளிர்மைக்கு மாறினாள். விழி வழியில் வழிந்தோடியது அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் , “ஸ்ரீ ராம சந்திர” பஜன் சஞ்சாரியில் அவள் சிருங்காரம் . மேடை நடுவே இருக்கும் ஆடல் கலைஞர் , வலப்பக்கத்தில் இருக்கும் அணிசேர் கலைஞர்கள், பார்வையாளர்கள் இவர்கள் மூவரும் உணர்வு ஒன்றி கலந்து நின்றனர். இந்த முக்கோண சக்தியே நாட்டியக் கச்சேரிக்கான வெற்றியின் அடையாளம். மிஸ்ர சிவரஞ்சனி தில்லானாவில் அங்க லாவண்யத்தின் பிரதிபலிப்பாக மெய்யடவுகளை வளைந்து நெளிந்து லாவகமாக ஆடினாள்.

நாட்டிய உலகில் தற்காலத்தில் அரங்கேற்றிய உடனேயே ஆசிரியர் ஆகும் நிலை அல்லது நாட்டியத்தில் இனி கற்பதற்கு ஏதும் இல்லை என்று எண்ணும் துயரம் அல்லது முற்றாக நாட்டியத்தை கைவிடும் நிலை என மாணவர் மத்தியில் உலகளாவிய ரீதியில் பார்த்து வருகிறோம்.அரங்கேற்றம் கண்டு தசாப்தத்தை நெருங்கி கொண்டிருக்கும் அபிநயக்ஷேத்ரா மாணவி ஆரணியின் நிலை என்ன ?

அபிநயக்ஷேத்திராவின் முதல் மாணவி ஆரணி. இற்றை வரைக்கும் 400 மேடை நிகழ்வுகளிற்கும் அதிகமாக இலங்கையிலும், இந்தியாவிலும் வழங்கும் சந்தர்ப்பமும், அகில இலங்கை ரீதியான தமிழ் தின போட்டிகளிலும், நாட்டிய மயில் போட்டியிலும் வெற்றி பெறும் வாய்ப்பும், சர்வதேச சாதனை மாணவர் விருதும் , அபிநயக்ஷேத்திராவின் சிறந்த ஆற்றுகை மாணவி விருது மற்றும், சாதனைப் பெண் நட்சத்திரம் 2021 விருதும் கிடைக்கப்பெற்றுள்ளது .கணக்கியல் கற்று (ACCA) உதவி கணக்காளராக பணி புரிவதோடு, ஊடகத் துறையிலும் ,தொகுப்பாளராக கடமையாற்றுகிறார்.

“வேலை பழு இருந்தாலும் நடனத்தை கற்பதை கைவிட்டு விடவில்லை இன்று வரை தொடர்ச்சியாக 15 வருடங்களாக நடனத்தைக் கற்று வருகிறேன். சவால்கள் நிறைந்த என் வாழ்வில் எந்தவிதமான மன நிலையில் இருந்தாலும் முழுமையாக விடுபட்டு மிக சிரத்தையுடன் கவனச்சிதைவில்லாமல் நடன பயிற்சிகளில் ஈடுபடுவதால் வாழ்க்கை வசந்தமாகிறது. நாட்டிய தளத்தினூடாக சமூகம் எதிர்நோக்க வேண்டிய மாற்றத்திற்கான கருத்தை தெரியப்படுத்துவது எமது குருவின் நோக்கம் , அதுவே நாட்டியத்துறையில் எனது சிறு பங்களிப்பும் ஆகும். எதிர்பார்பற்ற அன்பு, பல் துறை திறமை, கலங்கி நிற்கும் போதெல்லாம் தட்டி கொடுத்து வழிகாட்டும் ஞான ஒளி என என் குருவை பல விடயங்களில் பார்த்து அவரால் ஈர்க்கப்பட்டு கலை உலகிற்கு என்னாலான பங்களிப்புக்களை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதுவே என் வாழ்வில் கிடைத்த பெரும் பயனாக கருதுகிறேன்.” என்பது ஆரணியின் தற்போதைய கூற்று.
கல்லா பிழையும் கருதா பிழையும்…..எல்லா பிழையும் பொருத்தருள்வாய் என சிவனைப் பணிந்து கச்சேரியின் வெற்றியையும் , புகழையும் இறைவனின் பாதத்தில் சமர்ப்பித்து விடுபடுவது அபிநயக்ஷேத்திராவின் வழமை. அதனை நன்கு உணர்ந்தவளாக இன்று வரை முயற்சிக்கும், இலங்கையின் இளம் கலைஞராக பல் துறைகளில் ஜொலித்துக் கொண்டிருக்கும் ஆரணி மோகனசுந்தரம் அவர்களை கலைஞர்கள் இனிதெனப் போற்றும் வெற்றிமணி பத்திரிகையினூடாக அறிமுகம் செய்வதில் மகிழ்வுறுகிறோம்.

யாவும் படைப்பின் அருள் என்று உணர்வதும், பெற்றதெல்லாம் வரமன்றிப் பிறிதில்லை என அனைத்திற்கும் நன்றியுடையோராய் இருப்பதும், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு கொண்டிருப்பதும் ,அனைத்திற்கும் மூலமாய் ஆனந்தமாய் இருப்பதும் மட்டுமே ஆடலின் நோக்கமும், வாழும் முறையும். “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா……”

ஆளுமையின் அடையாளம் பரதன்!

விடுதலைப் புலிகளின் தியாகம் வீரம் படைக்கட்டுமானம், மக்கள் கட்டமைப்புகள் முதலான பல்வேறு விடையங்களையும் குறிப்பிடுவோர் ஆளுமை,வினாடிக்குள் முடிவெடுக்கும் ஆற்றல் பற்றியும் உதாரணங்களுடன் விளக்கத் தவறுவதில்லை. அதில் நிச்சயம் பரதனின் பெயர் இடம் பெறும்.

புலிகளின் குரல் நிறுவனத்தின் ஆண்டுவிழா யாழ் இந்துக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டு இருந்தது.ஈழநல்லூர் ஸ்ரீ தேவி வில்லிசைக் குழு அக்காலத்தில் மிகவும் பிசித்தம்.சாம்பசிவ சோமஸ்காந்த சர்மா தான் கதைசொல்ல,பிற்பாட்டுக்காரர்கள் மேலும் விளக்கம் கேட்க வினாத்தொடுப்போர் முதலான சகல அம்சங்களுடன் இடம்பெற்று இருந்தன.
அக்காலத்தில் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கிவந்த பொருளாதாரத்தடை பற்றி அடுக்கடுக்காகக் கூறிவந்த சர்மா தொடர்ந்து சவர்க்காரத்ததுக்குத் தடை என்று குறிப்பிட்டார்.உடனே பிற்பாட்டுக்காரர் ஊத்தை உடுப்புகளை என்ன செய்கிறது? என்று கேட்டார்.இதற்கு சர்மா சொன்னபதில் அவரது மன அழுக்கை வெளிப்படுத்தியது.
அப்போதைய ஆட்சியாளரான பிரேமதாசாவைகொச்சைப்படுத்தும் விதமாகவும்,அவரது பரம்பரை குறித்து மறைமுகமாக கிண்டல் அடிக்கும் விதமாகவும் இருந்தது.
இவரது பதிலின் அர்த்தத்தை பார்வையாளர்கள் கிரகிக்கும் முன்னரே மேடைக்குள் பிரவேசித்தார் பரதன். ஒலிவாங்கியை எடுத்து இத்துடன் வில்லிசை நிகழ்ச்சி நிறைவுபெற்றது என அறிவித்தார்.மேடையில் இருந்தோர் சபையோர் மத்தியில் பரபரப்பு. மங்களம் பாடிவிட்டுப்போகிறோம் எனக் கேட்டனர் சர்மாதரப்பினர். அதை நாங்களே பாடிக்கொள்கிறோம் மேடையைவிட்டு அகலுங்கள் என்ற பரதனின் கண்டிப்பான உத்தரவை மீறி எதுவும் செய்ய முடியவில்லை.
வினாடி கூடத் தாமதிக்காமல் பரதன் இந்த முடிவை எடுத்ததற்கு அவர் நிகழ்ச்சியை ஒழுங்கு படுத்தியதுடன் மட்டுமல்ல அதனைக்கிரகித்தபடியே இருந்துள்ளார் என்பது புலனாகிறது.எதிரியை விமர்சிப்பது என்றால் கூட பண்பு தவறக்கூடாது என்ற அறிவுறுத்தலை எப்போதும் பரதன் மனதில் வைத்திருந்தார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.பரதனின் நடவடிக்கை இயக்கத்தின் மீதான மதிப்பை மேலும் உயர்த்தியது.
விடுதலைப் புலிகளின் ஒலி ஒளி புகைப்படக் கட்டமைப்பின் பிதாமகன் என்று பரதன் அவர்களைக் குறிப்பிடலாம். புலிகளின் குரல் நிதர்சனம் என்பவற்றை உருவாக்கியதுடன் குறும்பட உருவாக்கத்திலும் ஈடுபட்டார். அத்துடன் காசி அண்ணா புதுவை அண்ணா முதலானோரின் பாடல்களை தென்னிந்தியாவின் பிரபல பாடகர்களைப் பாடவைத்து களத்தில் கேட்கும் கானங்கள் என்ற ஒலிப்பேழையாக வெளியிட்டார்.
முக்கியமான விடயம் தன்னுடன் நின்ற போராளிகள் தொழில்நுட்பத் துறையில் வல்லுணர்களாக உருவாக்கியிருந்தார். இன்றம் பலர் இயக்கத்தில் பழகிய இத்துறைகளை வாழ்வின் ஆதாரமா கொண்டு உயர்ந்து விளங்குகினஇறனர்.
யாழ் மாவட்ட தளபதியாக விளங்கிய கிடஇடு பரதனை ஊக்குவித்தவர்களில் முக்கியமானவர்.இன்னொருவிடயம் இயக்கத்தில் இணைந்த காலம் தொட்டு விலகிய காலம் வரை சொந்தப் பெயரிலேயே இவரை அனைவரும் அழைத்தனர்.சுருக்கமுடியாதளவு இவரது பெயரம் இருந்தது இதற்கு காரணம்.
கடந்த 18.03.2021 லண்டனில் பரதன் காலமானார். காலம் அவரை என்றும் நினைவுகூறும்..
அருணா

952 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *