ஆனந்தராணி பாலேந்திரா ‘நட்சத்திரவாசி’ 1977-1978

எனது நாடக அனுபவப் பகிர்வு – 06

கடந்த இதழில் நான் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக வசிக்க வேண்டியேற்பட்ட காரணத்தையும் ‘நட்சத்திரவாசி’ நாடகப் பிரதி எனக்கு எவ்வாறு கிடைத்தது என்பது பற்றியும் எழுதியிருந்தேன்.
‘நட்சத்திரவாசி’ நாடகத்தில் வரும் வித்யா சில முரண்பாடுகள் காரணமாக இளம் வயதில் வீட்டைவிட்டு வெளியேறியவர். திருமணமாகாமல் தனித்து வாழ்கின்ற, வேலை பார்க்கின்ற ஒரு சுதந்திரமான பெண். அவர் தன் வாழ்க்கையில் சந்திக்கின்ற மனிதர்கள், அவர் மீதான சமூகத்தின் பார்வை என இந்நாடகத்தின் கதை நகர்கிறது. நடிப்பதற்கு சிக்கலான பாத்திரம். பிரதியை மீண்டும் மீண்டும் வாசித்து பாத்திரத்தின் தன்மையை உள்வாங்கிக் கொண்டேன்.
இந்நாடகத்தின் ஒத்திகைகள் யாழ்ப்பாணத்திலேயே நடைபெற்றன. 1977 இனக்கலவரத்தை அடுத்து பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டதால் இந்நாடகத்தில் நடித்த கட்டுபெத்தை வளாக மாணவர்கள் எல்லோரும்; யாழ்ப்பாணத்தில் ஒத்திகைகளுக்கு வரக்கூடியதாக இருந்தது. நான் மட்டுமே பல்கலைக்கழகம் சாராத ஒருவர். பாலேந்திராவின் நெறியாள்கையில் ஒத்திகைகள் மும்முரமாக நடைபெற்றன. சில நாட்களில் நாள் முழுவதும் ஒத்திகைகள் செய்தோம். நீண்ட ஒத்திகைகளைத் தொடர்ந்து ‘நட்சத்திரவாசி’ நாடகம் முதல் முதலாக 08-01-1978 அன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் மேடையேறியது.
திரை விலகும்; போது ஒரு பெண் பாடும் குரல் கேட்கும். ஒரு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து இனிய குரலில் பாட ஆரம்பித்து பின்னர் கண்ணாடி உடைந்து சிதறும் ஒலியோடு குரல் உடைந்து கரகரப்பாக மாறி இசை ஒலிக்கும். மங்கிய ஒளியில் வித்யா(நான்) மேடையில் சரிந்து விழுந்த நிலையில்…

மேடையின் நடுப்பகுதியில் பிரமாண்டமான லிங்கம் ஒன்று கிட்டத்தட்ட கூரையைத் தொடுவதுபோல் அமைக்கப்பட்டிருந்தது. அதனைச் சுற்றி அமர்ந்திருந்த கறுத்த உடை அணிந்த பத்து கோ~;டி நடிகர்களும் “கொலை! கொலை!” என பல்வேறு தொனிகளில் சத்தமிட்டபடி மேடை முழுவதும் நகர்ந்து பெரிதாக ஆடத் தொடங்குவார்கள். சிறிது சிறிதாக ஒளி பரவ மேடையில் வித்யா கொலையுண்டு கிடப்பார். நாடகத்தின் ஆரம்பமே பார்வையாளர்களை ஒரு புதிய உலகத்துக்குள் அழைத்துச் சென்று கட்டிப்போட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பாலேந்திரா நெறியாள்கையில் மட்டுமல்ல, ஒளியமைப்பிலும் சிறந்தவர் என்பதை நாடகம் நிரூபித்தது.
இந்த நாடகத்தில் வந்த இசை ஒரு தீம் மியூசிக் போல நாடகத்தின் இடையிடையே ஒலிக்கும். ராகச்சாயல் கொண்ட சிறு ஆலாபனையும் ஸ்வரக் கோர்வைகளும் கொண்ட இந்த இசை மனதை நெருடக்கூடிய வகையில் அமைந்திருந்தது. பிரபல இசையமைப்பாளர் இசைவாணர் யாழ். எம். கண்ணன் அவர்கள் இசையமைத்திருந்தார். அவர் முதன்முதலாக நவீன நாடகம் ஒன்றிற்கு இசையமைத்திருந்தது ‘நட்சத்திரவாசி’ நாடகத்திற்குத்தான். இதன் பின்னர் பாலேந்திரா நெறிப்படுத்திய ‘யுகதர்மம்’, ‘முகமில்லாத மனிதர்கள்’, ‘துக்ளக்’, ‘நெட்டை மரங்கள்’ போன்ற நாடகங்களுக்கும் கண்ணன் அவர்கள் இசையமைத்திருந்தார்.
பாலேந்திரா கூறிய ‘நட்சத்திரவாசி’ நாடகத்தின் கதையை நன்கு உள்வாங்கி மிக அருமையாக அந்த இசையமைப்பைச் செய்திருந்தார். எனக்குப் பல்வேறு உணர்ச்சி மாற்றங்களுடன் நன்றாக நடிப்பதற்கு இந்த இசை பெரிதும் உதவியது என்று சொல்லவேண்டும். குறிப்பாக வித்யா தனது இளவயது கதையைச் சொல்லும்போது பெரிய பந்தியாக அமைந்த வசனங்களுக்கு பின்னணியில் ஒலித்த இசை வலுவூட்டியது. நிர்மலா இந்த இசைக்கு குரல் கொடுத்திருந்தார்.
பிரமாண்டமான லிங்கத்துடனான மேடையமைப்பை அப்போது கட்டுப்பெத்தை பல்கலைக்கழக கட்டடக்கலை மாணவராக இருந்த குணசிங்கம் செய்திருந்தார். இவர் பின்னர் பாலேந்திரா நெறியாள்கை செய்த ‘கண்ணாடி வார்ப்புகள்’, ‘ஒரு பாலை வீடு’, ‘அரையும் குறையும்’ போன்ற நாடகங்களுக்கு மேடையமைப்பு செய்ததுடன் என்னோடு ‘அரையும் குறையும்’ (மோகன் ராகேசின் ‘ஆதே ஆதுரே’) ‘முகமில்லாத மனிதர்கள்’ (பாதல் சர்க்காரின் ‘ஏவம் இந்திரஜித்’) ஆகிய நாடகங்களில் நடித்துமிருந்தார். சிட்னியில் 1996இல் நடந்த எமது நாடகவிழாவினை ஒழுங்கு செய்து நடத்தியவர்களில் ஒருவர்.
‘நட்சத்திரவாசி’ நாடகம் யாழ்ப்;பாணம், கொழும்பு, பேராதனை, திருகோணமலை ஆகிய இடங்களில் மேடையேறியது. எனது நடிப்புப் பற்றிய நல்ல கருத்துகளோடு நான் ஏற்ற பாத்திரத்தின் தன்மை பற்றிய எதிர்மறைக் கருத்துகளும் முன் வைக்கப்பட்டன. இப்போது சங்கடமான வி~யங்களெல்லாம் எனக்கு சகஜமாகிவிட்டது.
மேடையேற்றத்திற்கான பிரயாணங்களும் சுவாரஸ்யமாக இருந்தன. நீண்ட பயணங்களின்போது பாடிக்கொண்டு செல்வோம். இந்தக் குழுவில் நான்தான் ஒரேயொரு பெண். இளவயது முதலே எல்லோருடனும் கலகலப்பாக பழகும் சுபாவம் கொண்ட எனக்கு நான் தனித்துப் போய்விட்டேன் என்ற எண்ணம் ஒரு காலமும் வந்ததில்லை. என்னில் நம்பிக்கை வைத்து, எதிர்ப்புகளையும் மீறி எனது செயற்பாடுகளுக்கு முழு சுதந்திரம் வழங்கிய எனது பெற்றோரை நான் போற்றுகிறேன்.
இந்த மேடையேற்றங்கள் பற்றி நல்ல விமர்சனங்கள் எழுதப்பட்டு பத்திரிகைகளில் வெளிவந்தன. எனது நடிப்புப் பற்றி
“வித்தியாவாக நடித்த ஆனந்தராணி மேடைநாடகப் பயிற்சியுடன் வானொலி நாடகப் பயிற்சியுமுடையவர். நீண்ட பந்திகளாகச் சில இடங்களில் அமைந்த வசனங்களைக் கூட பார்வையாளர்களுக்கு அலுப்புத் தோன்றாதபடி தேவையான உணர்ச்சிச் சாயைகளுடனும், ஏற்ற இறக்கங்களுடனும் பேச அவரால் முடிந்தது”
என்று பேராசிரியர் சி. மௌனகுரு அவர்கள் தனது விமர்சனத்தில் எழுதியிருந்தார். இது 16.03.1978 தினகரனில் வெளியாகியிருந்தது. பேராசிரியர் கா. இந்திரபாலா போன்றவர்களும் நல்ல விமர்சனங்களை எழுதியிருந்தார்கள்.
‘நட்சத்திரவாசி’ கனதியான ஒரு நாடகம் என்றும் அக்காலத்தில் கூறப்பட்டது. நாடகம் பார்த்த ரசிகர்கள் சிலரின் நேரடியான விமர்சனங்களும் பத்திரிகைகளில் வந்த இவ்வாறான விமர்சனங்களும், காத்திரமான நாடகங்களில் நடிக்கவேண்டும், தமிழில் நவீன நாடகங்கள் மேலும் வளர்வதற்கு எனது பங்களிப்பை வழங்கவேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு அளித்தன. எனது நாடகப் பயணமும் தொடர்ந்தது.
‘நட்சத்திரவாசி’ நாடகத்தின் மேடையேற்றங்களின்;போது நிழற்படங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால் பத்திரிகைகளில் வந்த விமர்சனங்களைப் பத்திரமாக வைத்திருக்கிறேன்.
அடுத்த இதழில் நான் நடித்த நான்காவது நாடகமான “கண்ணாடி வார்ப்புகள்” நாடக அனுபவம் பற்றி எழுதவுள்ளேன்.

1,264 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *