கொரோனா காலத்தில் பெண்களின் பங்களிப்பு
கலைவாணி மகேந்திரன் -மலேசியா
21ஆம் நூற்றாண்டில், பாலின சமத்துவ சித்தாந்தங்கள், இக்கால சூழலுக்கு அவசியமான ஒன்றாகும். பல்துறையின் அச்சாணியாக, ஆண் பெண் என இரு பாலினத்தவர்களும் அறிவியக்கத்தின் உச்சத்தை பதிவு செய்து வருவது தெளிவான ஒன்றே. பாலின வேற்றுமையில், கடப்பாடுகளை நியமிப்பது, தற்காலச் சூழலுக்கு ஒவ்வாத ஒன்றாக அமைந்து வருகிறது. அதற்கான முக்கியக் காரணக்கூறு யாதெனின், பண்பட்ட நாகரீகத்தின் பரிணாம வளர்ச்சியே. பெண்ணின் பிறப்பியல்புகளுக்கான தனிச்சிறப்புகளை யாராலும் மறுக்கவியலாது. தாய்மை என்பது, பெண்மைக்கே உண்டான சிறப்பம்சம் என்றாலும் தந்தை, கணவன் போன்ற உறவுகள் தாய்மை பண்பை கொண்டிருந்தால், அது பெண்மையிடமிருந்து இரவல் வாங்கப்பட்ட குணமே என்பது யாவரும் அறிந்த ஒன்றே. பெண்ணின்றி இவ்வுலகம் இயங்குவது மிகக்கடினம். தாயாக, உடன்பிறந்த சகோதரியாக, தோழியாக, காதலியாக, மனைவியாக, மகளாக இவ்வாறு எங்கும் எதிலும் பெண் தன்னை உருவகிக்கின்றாள். கொரோனா உயிர்கொல்லி நோய் பாரினை அச்சுறுத்தி வரும் நிலையில், அதனை நிதானித்து, சாமர்த்தியமாக எதிர்கொள்ளக் கூடிய ஸ்தானங்களில் பெண்கள் முன்னிலைப் படுத்தப்பட்டு வருகின்றனர். இல்லறம், மருத்துவம், கல்வி இதுபோன்ற முக்கிய கூறுகளின் அடிப்படியிலும் அவர்களது பங்கு அளப்பரியது.
இயந்திரமயமான இந்த நவீன காலத்தில் இயந்திரத்திற்கு இணையாக அதிகாலை எழுந்து இரவு உறங்கும் வரை கணவருக்கும் குழந்தைகளுக்கும் தேவையானவற்றை செய்து கொடுத்து குடும்பத்தாரை மகிழ்வித்து மகிழும் மிகுந்த அர்ப்பணிப்பு மிக்க குடும்பத்தலைவிகளான இல்லத்தரசிகள் இக்கட்டான கொரோனா காலகட்டத்தில் நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தினமும் தான் வசிக்கும் வீட்டினை சுத்தம் செய்வதிலிருந்து நோய் எதிர்ப்பு சக்திமிக்க உணவை சமைத்து தன் குடும்பத்தினருக்கு வழங்குவதிலிருந்து ஆதி காலத்திற்கே சென்று வந்துள்ளனர் என்று சொன்னால் அது மிகையாகாது. அன்றாட வாழ்வியல் தேவைகளை முடித்த பிறகும் அன்றாடம் தங்கள் வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவதில் கொரோனா காலத்தில் தாய்மார்களின் பங்களிப்பு மிக அதிகம். சரியான நேரத்திற்கு தங்களது குழந்தைகளை நேரலை கணிணி வகுப்பு முன் அமர வைப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பு துல்லியமானது. இவ்வாறு அதிகமான வேலைப்பளுவை ஏற்று தங்கள் குடும்பத்தை சிறப்பாக வழிநடத்துவதில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு பாராட்டுதலுக்கு உரியது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவத்துறையில் பணியாற்றும் பெண் மருத்துவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளை பிரிந்து உலக மக்களை காக்கும் பொருட்டு உண்ணாது உறங்காது பணியாற்றிய பெண் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு வணக்கத்திற்குரியது. கொரோனா மருத்துவ முகாம்களில் உடல் முழுவதும் அங்கியை அணிந்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்ததிலிருந்து ஆறுதல் கூறியது வரை பெண் மருத்துவர்களின் பணி அரும்பணி. இவர்கள் தனது உயிரை பொருட்படுத்தாது மக்களுக்காக இக்காலகட்டத்தில் சேவை செய்யும் கலியுக தெய்வங்கள் என்றே கூறலாம் .இந்த நேரத்தில் அவ்வாறு மருத்துவ சேவையில் அர்பணித்து உயிர் நீத்த பெண்மருத்துவர்களின் தியாகத்தை போற்றிடுவோம்.தனது குழந்தையை கூட அள்ளி அணைக்க முடியாது கண்ணீர் வடித்த பெண் மருத்துவர்களின்,செவிலியர்களின் சூழலை சொல்லால் போற்றிட இயலாது. உலக மருத்துவத்துறையில் கொரோனா காலத்தில் பெண்களின் பணி பெரும்பங்கு வகித்துவருகிறது.
குரு ஸ்தானத்தில் இருந்து இவ்வுலகை அறிவு நிறைந்த சமூகமாக உருவாக்கும் ஆசிரியப் பணியில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறந்த கல்வியினை புகட்டுவதில் ஆசிரியைகள் எதிர்நோக்கிய சவால்கள் எண்ணில் அடங்கா. வீட்டில் தனது குடும்பத்தாரின் அன்றாட வாழ்வியலையும் பார்த்துக் கொண்டு தனது குடும்பத்தேவைகள் குழந்தைகளின் கல்வியையும் வழங்கி இதனிடையில் தனது ஆசிரியை பணியினையும் செவ்வனே செய்வதில் இவர்களின் அர்ப்பணிப்பு வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரியது. இன்று கற்பிக்கப்படும் பாடத்தினை முதல் நாளே அறிந்து முறைபடுத்தி தெளிவதில் இருந்து மாணவர்களுக்கு கணிணி நேரலை நேரத்தினை வழங்கி அனைத்து மாணவர்களையும் நேரலையில் ஒருங்கிணைத்து கல்வியை வழங்கி அவர்களின் சந்தேகங்களுக்கு தெளிவுபடுத்துவது வரை கல்வி வழங்குவதில் ஆசிரியைகளின் பணி அரும்பணி. இந்த கொரோனா காலத்தில் பெற்றோர் ஆசிரியர்களின் இடையேயான உறவு மேம்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சியான ஒன்று தான் என்றாலும் ஆசிரியர் மாணவர்களின் உறவில் நெடிய இடைவெளிதான்.தன்னிடம் கல்வி பயிலும் மாணவர்களை தனது குழந்தைகளாக பாவித்து கல்வி புகட்டும் ஆசிரியைகளுக்கு இந்த காலம் வசந்தகாலம் என்று சொல்ல இயலாத காலம் தான்.
நோய் தொற்று பரவாமல் பாதுகாத்ததில் மருத்துவர்களுக்கு இணையான பணி என்றால் அது துப்புரவு தூய்மை பணிதான். பொது சுகாதாரத்தை பேணிக் காப்பதில் துப்புரவு பணி மிகுந்த பங்கு வகிக்கிறது.இத்துறையில் பணியாற்றும் பெண்கள் மருத்துவர்களுக்கு இணையாக அங்கி பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து பணி செய்வதில் பெரும் இடர்களை சந்தித்தனர் என்பது தான் நிதர்சனமான உண்மை. இக்காலக்கட்டத்தில் தூய்மைபணியில் பணியிலிருந்த பெண்கள் சுகாதாரத்தை பேணிக் காத்தனர் என்றாலும் அவர்களால் உணவு கூட உண்ண முடியவில்லை என்பது வருந்ததக்கது. .மருத்துவ கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மை பணிப்பெண்கள் நோய்தொற்றுக்கு உள்ளானர்கள் என்பது பல பேர் அறிந்திடா செய்தியாகும்.எனினும் தனது உயிரையும் பொருட்படுத்தாது நாட்டின் சுகாதாரம் மற்றும் நோய் பரவலை தடுத்து பாதுகாத்தில் இவர்களின் பெரும்பங்கும் அடங்கும். நோய்தொற்று காலத்தில் பணிசெய்த தூய்மை பணிப்பெண்களும் போற்றுதலுக்கு உரியவர்களே.
மங்கையா ராகப் பிறப்பதற்கே – நல்ல மாதவஞ் செய்திட வேண்டும்,
பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ – இந்தப்பாரில் அறங்கள் வளரும்,
கோடான கோடி உயிர்களை இந்த கொரோனாவிற்கு பறிகொடுத்து எதிர்காலமே புதிர்காலமாக இருந்த சமயத்தில் அனைத்து துறைகளிலும் பெண் என்பவளின் தியாகங்களும், போராட்டங்களும் சவால்மிக்க சூழலை சமாளித்தது என்பதே நிதர்சனம்.
பாலின சமத்துவம் பேணிடுமோர்,
பாரினை என்றிங்கே கண்டிடுவேன்,
பேதங்கள் உரைக்கும் மானிடரை
பிரேதங்கள் என்றே நாமு உரைப்போம்.
பாரதி கண்டிராத புதுமைபெண்ணாக
பார் முழுதும் அறியச் செய்வோம்
1,417 total views, 2 views today