வாழ்த்துவதால் வளரலாம் மன இறுக்கம் போக்கலாம்!
கரிணி-யேர்மனி
வாழ்க்கையில் ஒவ்வொரு விடயமும் ஒன்றோடொன்று இணைப்பில் உள்ளது. அந்த இணைப்பின் துணையிலே தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தொடர்புகள் எவ்வளவுக்கு துல்லியமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறதோ அதற்கமைய வீரியமாகவும் இருக்கும். இணைப்பில் சிக்கல்கள் ஏற்படுகையில் பரந்து விரிந்த நிலை மாறி இறுக்கமான நிலை ஏற்படும்.
அதிர்வலைகளிலேயே ஒவ்வொரு செயற்பாடும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஒரு மலரினும் மெலிய இறகின் அசைவு கூட அதிர்வலைகளை பரப்பிக்கொண்டே சென்று மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஒன்றோடொன்று முட்டி மோதுவதால் புதிதான அசைவுகளும் விளைவுகளும் ஏற்படுகின்றன.
பூக்கள் பூக்கும் போதே வண்டுகள் ஈர்க்கப்படுகின்றன, பூக்களில் தேனை பருகிய வண்டுகள் தம் கால்களில் ஒட்டிய மகரந்தங்கள் மூலம் அத்தாவரத்தின் இனவிருத்தியை மேலும் பெருக்கி நன்மை புரிகின்றன. இவை இயற்கையாகவே ஏற்படுத்தப்பட்ட பிரதியுபகாரம். குளிர் காலங்களில் உணவுத் தேவைக்காக அணில்கள் பெரு மரங்களின் விதைகளை ஆங்காங்கே மண்ணில் புதைத்து மறைத்து சேமித்து வைக்கின்றன. பின்பு தாம் வைத்த இடங்கள் பலவற்றை மறந்தும் விடுகின்றன. குளிரைத் தொடர்ந்து வரும் மழையிலும் அதனைத் தொடர்ந்து வரும் வசந்த காலத்திலும் இவ்விதைகள் முளைத்து மரங்களாக வளரத் தொடங்கிவிடும். குளிர் தேசங்களில் அணில்கள் மூலம் காடுகள் வளம் பெறுகின்றன. இப்படியான தொடர்பு சங்கிலி மூலம் இயற்கை தன்னை சமப்படுத்திக் கொள்ளும். மனித அறிவியலில் வளர்ச்சியும், தனிப்பட்ட வாழ்வில் மட்டும் காட்டப்படும் கரிசனையாலும் வாழப்படுகின்ற வாழ்க்கை முறையானது இயற்கை சுற்றுவட்டத்திற்கு முரணாக அமைகிறது.
நிலத்தில் ஒரு நெல்லை நாட்டும் போது சிறிது காத்திருப்பின் பின் நெற்கதிராக பலமடங்காக கிடைக்கிறது. இது படைப்பின் நீதி. எதை வெளிப்படுத்துகின்றோமோ அது வெளியில் சென்று அதிர்வலைகளை ஏற்படுத்தி வளர்ச்சியடைந்து பன்மடங்காக திரும்புகிறது.
அற்புதமான மற்றும் சிக்கலான எண்ண அலைகள் வான்வெளியில் பரவிப் பரந்து இருக்கின்றது. அவை உடலுக்கு வெளியே பெரிய அளவிலும் புத்திக்கு உட்பட்டு சிறிய அளவிலும் காணப்படுகின்றன. எண்ணங்கள் வெளிப்படும் போது அதிர்வலையோடு அவை சார்ந்த விடயங்களை நோக்கி சென்று அவற்றை ஈர்த்துக் கொண்டு வருகின்றன. உதாரணமாக எப்போதும் தன்மீது கழிவிரக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் நபர்கள் தொடர்ச்சியான வேதனைகளை சந்திப்பதை கண்டிருப்போம். என்றும் கலகலப்பாக பிறரோடு நல்ல அதிர்வலைகளை பரப்பிப் கொண்டிருப்பவர்கள் எப்போதும் மலர்ச்சியாக இருப்பதை கண்டிருப்போம்.
நல்லதே நடக்கும் என பிறர் தரும் ஆறுதல் வார்த்தைகள் ஏதோ ஒரு நம்பிக்கையை தந்து விடுகிறது. வார்த்தை பிரயோகிக்கப்படும் விதம், அதன் அதிர்வு, எண்ணத்தில் உருவான நம்பிக்கை என்பன நல்லதொரு சூழலை மனதளவில் ஏற்படுத்துவதோடு சொல்பவருக்கும் அதனை கேட்பவருக்கும் இடையேயான எதிர் தாக்கத்திலும் நல்லதொரு பரிமாற்றமே நிகழ்கிறது.
பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி கால்களில் விழுந்து ஆசிகள் பெறுவது தொன்று தொட்டு நடைபெற்று வரும் வழக்கமாகும். தமது வழி சந்ததிகளுக்கு எவ்வித சலனமுமின்றி அவர்கள் வாழ்த்துக்கள் வழங்கும் போது நிறைவான சக்தி பரிமாறிக் கொள்ளப்படுகிறது. இதுவே தன்னலமற்று பாகுபாடின்றி எல்லாவற்றையும் நல்ல எண்ணத்தோடு வாழ்த்தும் போது எப்போதுமே அகமும், புறமும் மலர்கிறது.
குழந்தைகள் எங்காவது முட்டிக் கொண்டு வலிப்படுகையில் அந்த பொருளை அடி என்று செல்லமாக அதற்கு தண்டனை வழங்கி குழந்தைகளை சமாதானப்படுத்துவதை பார்க்கின்றோம். இந்நிலையில் வளர்பவர்கள் தம் மீது தவறு இருப்பினும் தமக்கு பாதிப்பை ஏற்படுத்திய விடயங்களை எதிர்த்து தாக்குவதை விரும்புவார்கள். அவ்வாறன்றி தமது கவனக்குறைவு என எண்ணமூட்டப்பட்டு வளர்பவர்கள் பிற விடயங்களை மதிக்க கற்றுக் கொள்வார்கள். இன்னும் கவனத் திறனை வளர்த்தும் கொள்வார்கள்.
நேசிப்பு என்பது பிற நல்வாழ்வை பார்த்து ஆனந்தப்படுவதே. எவரையும், எதனையும் அதன் வாழும் வழியில் இன்னல்கள் விளைவிக்காது நன்மைகள் புரிவதே. இந்நிலையிலேயே உண்மையான வாழ்த்தையும் வழங்க முடியும்.
மன இறுக்கமே நோய்கள் பலவற்றிற்கு ஆதாரமாக விளங்குகிறது. எண்ணத்தால் தான் உடல் ஆளப்படுகிறது. தூண்டுதலின்படி செயற்படுகிறது. வார்த்தைக்கும், எண்ணத்திற்கும் தொடர்புண்டு.
‘வாழ்க வளமுடன்!’ என்ற வாழ்த்தானது பிறருக்கோ, பேரண்டத்துக்கோ உணர்வுபூர்வமாக செலுத்தப்படும் போது அகம் விரிவடைகிறது. பாகுபாடற்று பிறரை வாழ்த்தும்போது பிறர் மீதுள்ள கோபம், வெறுப்பு, வஞ்சகம், பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்கள் விலகும். அந்த அதிர்வலைகளே தீய வழியில் உள்ளவர்களையும் நல்வழிப்படுத்தும். வாழ்த்துபவரின் மன இறுக்கம் கூட இல்லாமல் போகும். இதனால் வாழ்வும் மலர்ச்சியாக விளங்கும்.
1,162 total views, 2 views today