பாக்குவெட்டி
பாரிஸ் நோக்கிப் பயணம் செய்வதற்காக அந்தத் தொடரூந்து காத்துக் கொண்டு நின்றது. அவசரமாக ஓடிச் சென்று தொடரூந்துக்குள் புகுந்தேன். இலக்கங்களைத் தேடி இருக்கையில் அமர்வதற்கு எத்தனித்த நான் என்னுடைய பொதிகளை இருக்கையின் மேலுள்ள பகுதியில் வைப்பதற்காக முயற்சித்தபோது ஒரு கரம் உதவிக்கு வந்தது. அது என்னுடைய இருக்கையின் முன்னே அமர்ந்திருக்கும் மலையாள மொழிபேசும் ஒருவர் என்பதை அறிந்து கொண்டேன். தொங்கிக் கொண்டிருந்த ஒரு பெல்ட்டை தன்னுடைய பேனாவால் தட்டிவிட்டார். என்னுடைய பையைத் தூக்கி மேலே வைத்தார். நாம் இருவரும் உரையாடிக்கொண்டிருக்க தொடரூந்து தொடர்ந்தது. நான் பேச்சினூடே அவருடைய தொடர்பு இலக்கத்தைக் கேட்டேன். கையிலிருந்த பேனாவை என்னிடம் நீட்டினார். அதில் எழுதப்பட்டிருந்த இலக்கங்கள் எனக்கு நன்றாகப் புரியவில்லை. சிரித்தபடி பேனாவை வாங்கி ஒரு தடவை திருப்பினார். பிரகாசமான வெளிச்சத்துடன் விலாசமும் தொலைபேசி இலக்கமும் தெரிந்தது. இருட்டுக்கு ஒளியூட்டியாக இதைப் பாவிக்கலாம் போல் இருக்கிறதே என்றேன். ஆம் என்று சிரித்தபடி மூடியைத் திருப்பிக் காட்டினார். நான் பேசுவதை அப்பேனா ஒலிப்பதிவு செய்து கொண்டிருந்தது. ஆச்சரியத்துடன் ஒரு பேனாக்குள் இத்தனை விடயமா என்று கேட்டபோது கீழ்ப்பகுதியைத் திருப்பி கைத்தொலைபேசி இலக்கங்களைத் தட்டினார். சிரிப்புத்தான் வந்தது. பேனாவை எடுத்து தன்னுடைய சட்டைப் பையில் பொருத்தினார். பேனா மூடியின் கம்பியில் ஒரு அழகான முத்துப் போன்ற பகுதியில் புகைப்படம் எடுப்பதற்குரிய கமெரா தென்பட்டது. ஆச்சரியத்தில் கண்கள் விரித்தேன். ஒரு பேனாக்குள் இத்தனை விடயமா என்று கேட்டபோதே ஒரு பாடல் என் நினைவுக்கு வந்தது.
விறகு தறிக்க கறி நறுக்க
வெண்சோற் றுப்புக் கடகு வைக்கப்
பிறகு பிளவு கிடைத்த தென்றால்
நாலா றாகப் பிளந்து கொள்ளப்
பறகு பறகு என்றே சொறியப்
பதமா யிருந்த பாக்கு வெட்டி
இறகு முளைத்துப் போவது ண்டோ?
எடுத்தீ ராயிற் கொடுப்பீரே
என்று இராமச்சந்திரக்கவிராயர் பாடிய பாடல் ஒன்று ஞாபக்தில் தட்டியது. புலவர் வைத்திருந்த பாக்குவெட்டி காணாமல் போனது. அந்தப் பாக்குவெட்டி தனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக் கூறி எடுத்தவர் கொடுப்பாரேல் தன் மனக்குறை தீருமென இப்பாடலைப் பாடுகின்றார். என்னுடைய பாக்குவெட்டியால் சமையலுக்கு வேண்டிய விறகுகளை தறிப்பேன். காய்கறிகளை நறுக்குவேன். சோற்றுக்கு அரிசி அல்லது உப்பு இல்லையென்றால், அதனை அடகு வைத்து வாங்குவேன். பாக்குப்பிளவு கிடைத்தால் அதனை 4 பாகங்களாகப் பிளப்பேன். உடம்பிலே அரிப்பெடுத்தால் பறகு பறகு என்று சொறிவேன். இப்படியான பாக்குவெட்டி இறகு முளைத்து பறந்து சென்றிருக்க முடியாது. யாராவது எடுத்தீர்களானால் தயவு செய்து கொடுத்துவிடுங்கள் என்று அழகாகப் பாடுகின்றார். சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும் என்பதை அறிந்திருக்கின்றோம். இந்த பாக்குவெட்டி சமாச்சாரத்திலே நான் சிறுவயதில் பயன்படுத்திய ஒரு பென்சில் நினைவுகளைத் தீட்டியது. ஒரு நீண்ட பென்சில் அதன் கீழே ஒரு பிளாஸ்ரிக்காலான கை. அவசரத்தில் முதுகு சொறிய பலர் அதைப் பயன்படுத்துவார்கள். கையை நீட்டு என்று ஆசிரியர் அந்தப் பென்சிலைத் திருப்பி அடிப்பதை கண்டிருக்கின்றேன். இதைவிட பின் பென்ஞ்சில் இருக்கும் மாணவன் முன் பென்ஞ்சில் இருக்கும் மாணவனை சொறிந்து விட்டு பேசாமல் இருக்கவே அதன்மூலம் பெரிய பிரச்சினைகள் தோன்றியதையும் கண்டிருக்கின்றேன்.
ஹமறால கதைகள் என்ற பெயரில் பல ளுசிங்கள கதைகள் இருக்கின்றன. அதில் ஹமகாமினி என்று ஒரு கதை. ஹமகாமினியை திருமணம் பேசுவதற்காக ஒரு தரகர் அவர் வீட்டிற்கு வருகின்றார். அப்போது அப்பெண் அவரை முதலில் ஒரு உரலைத் திருப்பி அதன் மேல் அமரச் செய்கின்றார். சிறிது நேரத்தின்பின் சற்று எழுந்து கொள்ளுகின்றீர்களா புட்டுக்கு சம்பல் இடிக்க வேண்டும் என்று எழுப்புகின்றார். சம்பல் இடித்தபின் உரலைத் திருப்பி அவரை இருக்கச் செய்கின்றாள். பின் கொஞ்சம் எழும்புகின்றீர்களா? பரணில் இருந்து ஒரு பொருள் எடுக்க வேண்டும் என்கிறாள். எடுத்த பின் திரும்பவும் இருக்கச் சொல்லிவிட்டு இந்த கதவு அடித்துக் கொண்டிருக்கின்றது கதவுக்கு அடை வைக்கவேண்டும் கொஞ்சம் எழும்புகின்றாள் என்கின்றாள். சிறிது நேரத்தின் பின் திரும்பவும் திருப்பி அவரை இருக்க வைக்கின்றாள். இப்படி பலவிதமான செயல்களுக்கு உரலைப் பயன்படுத்துகின்றாள். வறுமையில் ஒரு பொருள் எவ்வாறு பல தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது என்பதை இக்கதை எடுத்துக் காட்டுகின்றது.
ஆனால் தற்காலத்தில் நானோ ரெக்னோலஜி மூலம் பல தேவைகளை ஒரு பொருளுக்குள் அடக்கும் தொழில் நுட்பம் ஓங்கிவிட்டது. அதன் ஒரு வடிவம் கைத்தொலைபேசி. அக்காலத்தில் ஒரு பொருள் பல தேவைகளை நிறைவேற்றும் போது மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பலனையே தந்தது. ஆனால் இன்று ஒருபொருள் பல தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற போது சூழலைப் பாதிப்பதுடன் தமது உடல்நலத்தையும் உளநலத்தையும் பாதிக்கின்றது. இதுவே இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கைக்கும் செயற்கையோடு ஒட்டிய வாழ்க்கைக்குமிடையே உள்ள பேதம் ஆகும்.
2,105 total views, 3 views today