ஒரு மனிதன் சராசரியாக எத்தனை பொய்களைத் தான் சொல்கிறான்?

உங்களிடம் ஒன்று கேட்கின்றேன் பொய் சொல்லாமல் சொல்லுங்கள் பார்ப்போம்! நீங்கள் ஒரு மாதத்தில் எத்தனைப் பொய்களைச் சொல்வீர்கள்? ஒரு பொய்? இரண்டு பொய்கள்? ஐந்து அல்லது பத்து பொய்கள் இருக்குமா? அல்லது சீ… சீ… நான் போய் பேசவே மாட்டேன் என்று உங்களுக்குள் நினைத்து இப்பொழுது எனக்கு ஒரு பொய் சொல்கின்றீர்களா? சரி சரி விடுங்கள்… இதற்கு அறிவியல் என்ன சொல்கின்றது என்பதைக் கொஞ்சம் அலசிப் பார்ப்போமா?

சரி, ஒரு மனிதன் சராசரியாக எத்தனை பொய்களைச் சொல்வான் தெரியுமா? ஒவ்வொருவரும் பேசும் போது பல பொய்களைச் சொல்வார்கள், ஆனால் அதுவே ஒரு தெரியாதவருடன் பேசும் போது, பத்து நிமிடங்களில் மட்டுமே சராசரியாக மூன்று பொய்களைச் சொல்வார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். என்ன நண்பர்களே, நம்ப முடியவில்லையா? சரி அப்படி என்றால் இந்த உதாரணத்தைப் பாருங்கள்: „படிப்பு எல்லாம் எப்படி போகுது?“ என்று கேட்பவரிடம், கடைசிப் பரீட்சையில் முட்டை வாங்கியவர் கூட „நல்லா போகிறது“ என்று பொய் சொல்வதில்லையா. அது போன்ற சின்ன சின்ன பொய்களைக் குறிப்பாக நமக்குத் தெரியாதவர்களுடன் பேசும் போது நாம் உணர்ந்தோ உணராமலோ பொய்களைப் பேசிவிடுவோம். அடுத்த முறை நீங்கள் யாரும் தெரியாதவர்களுடன் பேசும் போது, இதை அவதானித்துப் பாருங்கள்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் நாம் ஏன் பொய் சொல்கிறோம் என்று உங்களுக்குத் தெரியுமா? காரணம் இது தான்: மனிதன் என்றாலே ஒரு சமூகத்தில் வாழ்ந்து வேறு மனிதர்களுடன் தொடர்பில் இருக்கும் ஒரு உயிரினம் ஆகும். ஒன்று, இந்த சமூகத்தில் ஒரு பிரச்சினையும் இல்லாமல் அமைதியாகவும், சமாதானமாகவும் வாழ்வதற்குப் பொய்களைச் சொல்கிறோம், அல்லது இந்த சமூகத்தில் இருந்து ஏதாவது நன்மையைப் பெறுவதற்கும் நம்மை மற்றவர்களிடம் இருந்து உயர்த்திக்கொள்ளவும் பொய்களைச் சொல்கிறோம். எனவே சிறு வயதிலேயே பொய் சொல்வதையும், பிறர் பொய் சொல்வதைக் கண்டுபிடிப்பதையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்து விடுகின்றோம்.

சிறு வயதில் பொய் பேச ஆரம்பிக்கின்றோம் என்றால் எந்த வயதில் தெரியுமா? பிறந்து ஆறு மாதங்களில் நாம் பொய் சொல்லத் தொடங்கி விடுகின்றோம்! அடடா… இது என்னடா புதுக் கதையா இருக்கு என்று யோசிக்கிறீர்களா? நீங்கள் நிச்சயமாகச் சிறு குழந்தைகள் காரணம் இல்லாமல் பெற்றோர்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்புவதற்காக அழுவதைக் கவனித்து இருப்பீர்கள், சரி தானே? இப்படி அழும் போது திடீரென்று அழுகையை நிறுத்திவிட்டு யாராவது தன்னை கவனிக்கின்றார்களா என்று பார்த்து, மறுபடியும் அழுவது கூட ஒரு விதமான பொய் தானே? சரி கைக் குழந்தைகள் இப்படிப் பொய் சொல்வார்கள், இதுவே பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் எத்தனைப் பொய்களைச் சொல்வார்கள் தெரியுமா? இந்தப் பிள்ளைகள் அவர்களின் பெற்றோர்களுடன் பேசும் போது சராசரியாக ஒவ்வொரு ஐந்தாவது வசனத்திலும் ஒரு பொய் இருக்கும் என்று விஞ்ஞானிகளால் கூறப்படுகிறது.

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? பொய் பேசுவது என்பது நமது மூளைக்கு ஒரு மிகவும் கடினமான விஷயம் ஆகும். எனவே பொய் சொல்பவர்களை இலகுவாகக் கண்டு பிடித்து விடலாம், ஏனென்றால் பொய்ச் சொல்லும் போது அவர்கள் ஒரு விதமான மன அழுத்தம் கொண்ட நிலையுடன், இருதயம் வேகமாகத் துடித்து, வியர்த்து, பேச்சில் தடுமாற ஆரம்பித்து விடுவார்கள். மேலும் அவர்களின் உடலின் நிலை, சைகைகள், கண்ணின் அசைவுகள் மற்றும் அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகளை வைத்துப் பொய் சொல்வதைக் கண்டுபிடிக்கலாம். இது ஆச்சரியமாக இல்லையா?

சரி நண்பர்களே இனி நீங்கள் கூறுங்கள். பொய் சொல்பவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்று உங்களுக்குக் கூறிவிட்டேன். உங்களுக்கு ஒன்று தெரியுமா? நானும் கூட ஒரு பொய்யைச் சொல்லி விட்டேன்! அது என்ன பொய் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம். கண்டு பிடித்து உங்கள் பதிலையும், எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக எனது முகநூல் பக்கத்தில் (றறற.கயஉநடிழழம.உழஅஃளஉinசைழளா) அறியத் தாருங்கள்!

1,322 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *